Posted by: shuhaib | 16/06/2010

திப்பு சுல்தான் (ரஹ்)


தமிழகத்தில் இசுலாமியர் ஆட்சி

திப்பு சுல்தான் (ரஹ்)

(ஆயிரம் ஆண்டுகள் ஆடாக வாழ்வதைவிட ஆறே நாள் புலியாக வாழ்வது மேல்.)

திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனாகல்லி – மே 4, 1799, சிறீரங்கப்பட்டினம்), மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூர் பேரரசை ஆண்ட திப்பு சுல்தான் 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் மன்னராகத் திகழ்ந்த திப்பு சுல்தான் சிறந்த படைவீரராகவும்,கவிபடைக்கும் ஆற்றலும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.சமயங்களினை மதித்த திப்பு சுல்தான் பிரெஞ்சு ஆட்சியாளர்களின் வேண்டுகோளுக்கிணைய தேவாலயம் ஒன்றினை மைசூரில் எழுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் மைசூர்ப் போரில் தந்தையான ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு சுல்தான் மூன்றாவது ஆங்கிலோப் போரிலும், நான்காம் ஆங்கிலோப் போரிலும் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திப்பு சுல்தான் மே 4 ,1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தினில் இறந்தது குறிப்பிடத்தக்கது.

ஆட்சிக்காலம்

1782 – 1799

பிறப்பு

நவம்பர் 20, 1750

பிறப்பிடம்

தேவனாகள்ளி

இறப்பு

மே 4, 1799

இறந்த இடம்

சிறீரங்கப்பட்டணம்

முன்னிருந்தவர்

ஹைதர் அலி

தந்தை

ஹைதர் அலி

தாய்

பாக்ர்-உன்-நிசா

பிறப்பும், வளர்ப்பும்

கி.பி. 18 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துங்கபத்திரா நதிக்கரையிலிருந்து காவேரி வரை அதாவது கிருஷ்ணா நதியிலிருந்து திண்டுக்கல் வரை தெற்கு வடக்காக நானூறு மைல் தூரமும் மலபாரிலிருந்து கிழக்கு தொடர்ச்சிமலை வரை மேற்கு கிழக்காக முன்னூறு மைல் தூரம் கொண்ட பரந்த பூமியை 17 ஆண்டுகள் நல்லாட்சி செய்த தீரர் திப்புசுல்தான். நவாப் ஹைதர் அலிகான் பஹதூர் பஃருன்னிசா தம்பதிகளுக்கு நன்மகனாக தேவனஹள்ளியில் கி.பி.1750 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ம் நாள் வெள்ளிக் கிழமை அவதரித்தார். தீரர் திப்புசுல்தான் தந்தை ஹைதருடன் பழகி 16 வயதிலேயே சிறந்த யுத்தத் தந்திரங்கள்,ராஜதந்திரங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்று சிறந்த கல்விமானாகவும் படைத்தளபதியாகவும் விளங்கினார்.

வெற்றித்திருமகன்

திப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப்ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப்படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார் கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப்படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.

திருமணம்

1774 ம் ஆண்டு இறுதியில் ருக்கையாபானுவையும் சில மாதம் கழித்து தந்தை ஹைதர் அலியின் விருப்பத்திற்காக ஆற்காடு ரோஷன் பேகத்தையும் திப்பு திருமணம் முடித்துக் கொண்டார். திருமணம் முடிந்த பின் 1776 ல் மராட்டியர் நைஜாமியருடன் போரிட்டு காதிக்கோட்டையை திப்பு சுல்தான் வென்றார்.

ஹைதரின் மரணமும் அரியணையும்

1782 டிசம்பர் மாதம் 6ம் தேதி ஹைதர் அலி இறையடி சேர்ந்தார். அதன் பின்னர் 26 நாட்கள் மரணச் செய்தி யாருக்கும் அறிவிக்காமல் ரகசியமாக வைக்கப்பட்டு பொன்னானியிலிருந்து இளவரசர் திப்பு கோலார் வந்தபிறகே ஹைதர் அலியின் மரணம் அறிவிக்கப்பட்டது அதன் பின் 1782 டிசம்பர் 26 ம் தேதி (ஹிஜ்ரி 1197 முஹர்ரம் 20 ம் தேதி ) சனிக்கிழமை தனது 32 வது வயதில் நவாப் திப்பு சுல்தான் பஹதூர் என்று திப்புசுல்தான் மகுடம் சூட்டிக் கொண்டார் மகுடம் சூட்டியதும் புதிய தமது ராஜ்ஜியத்திற்கு திப்புசுல்தான் “சல்தனத்தே குதாதாத்” (இறையாட்சி) என பெயரிட்டார். புலிச்சின்னம் கொடியிலும், கீழே அல்லாஹ்வே ஆண்டவன் என்ற வாசகமும் பொறிக்கப்பட்டன.

திப்பு சுல்தான் அடிக்கல் நாட்டிய அணை

1791 தகி மாதம் 29 ம் தேதி திங்கட்கிழமை காலை திப்புசுல்தானே காவிரியின் குறுக்கே அணை ஒன்று கட்ட அடிக்கல் நாட்டினார். அந்த சாசனக்கல் இன்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைச்சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. சரியாக 120 ஆண்டுகளுக்கு பின் அதே இடத்தில் பிரிட்டிஷ் அரசு இந்த அணையை கட்டியது 1789 டிசம்பர் 28 லிருந்து 1790 மார்ச் வரை திருவிதாங்கூர் முற்றுகை. இதனால் காரன்வாலிஸ் பிரபு மைசூர் மீது போர் பிரகடனம் செய்தான் கோரப் புரட்சி ஒடுக்கப்பட்டது.

போர்க்களங்களில் திப்பு மைசூர் ராஜ்ஜியத்தை பல திசைகளில் தாக்க ஆங்கிலேயர் போர் முறையை வகுத்தனர் மேஜர் ஜெனரல் வில்லியம் மெடோஸ் ஐ பவானிக்கு அருகில் திப்பு வென்றார் கிழக்கு பகுதியில் போர் தொடுத்து கர்னல்கெல்லியும் தோற்றான் ஆங்கிலப்படையை விரட்டிக் கொண்டே திப்பு பாண்டிச்சேரி வரை விரைந்து சென்றார் 1791 பிப்ரவரியில் சதுரங்கப்பட்டினம் முற்றுகை ஆரம்பம்

1792 பிப்ரவரி 26 ம் தேதி செய்த ஒப்பந்தம் மார்ச் 19 ம் தேதி கையெழுத்தானது இதன்படி மைசூர் ராஜ்ஜியத்தின் பாதி நிஜாம், மராட்டியர் ஆங்கிலேயர் மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. 1கோடியே 65 லட்சம் வராகனும் 10 வயதான அப்துல் காலிக் சுல்தான் 8 வயதான மொய்சுதீன் சுல்தான் இருவரையும் ஆங்கிலேயர் பிணையாகப் பெற்றனர் மீதி 1 கோடியே 35 லட்சம் வராகனும் 3 தவணையில் தர ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் திண்டுக்கல், கோவை, சத்தியமங்கலம், தேங்கணிக்கோட்டை, சேலம், பெல்லாரி, கிருஷ்ணா நதியொட்டிய பகுதிகள் எதிரிகள் வசமாயின. 1794 பிப்ரவரி 29 ம் தேதி தேவனஹள்ளியில் மூன்றாவது தவணை செலுத்தி விட்டு தமது புதல்வர்களை திரும்பப் பெற்றார். இப்போருக்கு பின்னர் திப்பு கதீஜா ஜமானி பேகம் என்ற பெண்ணையும் மணந்து கொண்டார். நான்கு மனைவியருக்கும் குழந்தைகள் உண்டு.

1796 லிருந்து 1798 மத்தியில் வரை பிரெஞ்சு தளபதி மாவீரன் நெப்போலியனுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார் திப்பு பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்களுக்கு சமமான படைபலம் திப்புவிடம் இருந்தது. பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியும், மைசூர் அரண்மனையில் முக்கிய பொறுப்பில் உள்ள நம்பிக்கை துரோக நயவஞ்சகர்களின் சூழ்ச்சியும் திப்புவை பலவீனமாக்கின. ஆஞ்சி சாமய்யா, கிருஷ்ணராவ், திருமல்ராவ், மீர்சாதிக், கமருத்தீன் போன்ற முக்கிய மந்திரிகளின் துரோகம் அம்மாவீரன் சரிவுக்கு காரணமாக அமைந்தது. தியாகதீபம் அணைந்தது

1799 மே 3ம் தேதி கோட்டை செப்பனிடும் வேலையும் அதே நேரம் நயவஞ்சக நரிகளின் துரோகத்தின் உச்சமும் நடந்தது. 1799 மே மாதம் 4ம் தேதி நடுப்பகலில் சாதாரண சிப்பாயின் உடையில் வெறும் 50 பேர்களுடன் திப்புசுல்தான் வடமேற்கு பகுதியில் சுட்டுக் கொண்டே முன்னேறினார். அவ்வேளையில் இந்த மண்ணின் புண்ணிய மைந்தனின் நெற்றி பொட்டில் குண்டு பாய்ந்தது.கத்தியை இறுகப் பற்றியபடியே அந்த வீரமைந்தன் தன் தாயக விடுதலைக்காக வீரசுவர்க்கம் புகுந்தார்.ஆம் உயிர் பிரிந்தது.

திப்பு சுல்தானின் குடும்பம்

குடும்ப வாழ்வில் ருக்கையாபானு, ஆற்காடு ரோஷன்பேகம், புரந்தி பேகம், கதீஜா ஜமானி பேகம் என நான்கு மனைவியர், நால்வருக்கும் குழந்தைகள் உண்டு. திப்புவின் புதல்வர்கள் ஃபத்தே ஹைதர், அப்துல் காலிக், முஹ்யித்தீன், மொய்சுதீன்கான், முஹம்மது யாசீன், முகம்மது சுபான், ஷ்ருக்கில்லாஹ், சிர்ருதீன், குலாம் முஹம்மது, குலாம் ஹமீது, முனீருத்தீன், ஜமீயுத்தீன் ஆகிய பன்னிருவர். திப்புவின் புதல்விகள் பீவி பேகம், அஸ்முலுன்னிஸா பேகம், உமருன்னிஸா பேகம், பாத்திமா பேகம், பதீயுன்னிஸா பேகம், நூருன்னிஸா பேகம், குலூமா பேகம், கதீஸா பேகம் ஆகிய எட்டுபேர்.

ஆட்சி மாண்பும், படைபலமும்

திப்பு சுல்தான் தனது அரசு தர்பாரை ஒரு பார்லிமெண்ட் மாதிரியே நடத்தினார் படை, வியாபாரம், விவசாயம், மதம் என தனித்தனி இலாக்காக்களாக பிரித்து இருந்தார். நீதி வழங்க மொத்தம் 99 கோர்ட்டுகள் இருந்தன அனைத்து மதத்தவரும் அவரவர் மத சம்பிரதாய சட்டப்படி அவரவர்களே நீதி வழங்கினர். ஒவ்வொரு ஊருக்கும் காஜி, கதீப், காவல்நிலையம், ரகசிய உளவு இலாகா இருந்தன. எட்டு பாகமுள்ள அரசியல் சட்டப்புத்தகம் ‘கிதாபேதொஹபதுல் முஜாஹிதீனை’ (புனித வீரர்களின் வெற்றி) திப்பு இயற்றினார்.

ராணுவம்

திப்பு சுல்தான் வசம் மிகப்பெரிய ராணுவம் இருந்தது. மூன்று லட்சத்து இருபதாயிரம் வீரர்கள் இதர தனிப்பட்ட ராணுவமும் போலிஸும் இருந்தன யானைகள் 900, ஒட்டகங்கள்6000, 25000 அரபிக்குதிரைகள், நான்கு லட்சம் மாடுகள், மூன்று லட்சம் துப்பாக்கிகள், இரண்டு லட்சத்து இருபத்து நாலாயிரம் வாட்கள், 929 பீரங்கிகள் மற்றும் ஏராளமான வெடிமருந்து குவியல்கள் இருந்தன.

கப்பற்படை

கடற்படையில் 60 பீரங்கிகள் ஏற்றக்கூடிய ஒரு கப்பல், 30 பீரங்கிகள் ஏற்றக்கூடிய 30 கப்பல்கள், இரண்டு பீரங்கிகள் ஏற்றக்கூடிய 20 படகுகள் இருந்தன அரேபியாவில் ஜித்தா வளைகுடாவில் உள்ள மஸ்கட் துறைமுகம் இந்திய மேற்கு கூரையில் உள்ள கச்சு நவகார் ஆகிய துறைமுகங்களில் கிட்டங்கிகளை திப்பு நிறுவினார். அணிவகுத்து போரிடும் 72 கப்பல்கள் அவரிடம் இருந்தன 72 பீரங்கிகளும் கொண்ட ஒரு கப்பலில் 24 ராத்தல் பீரங்கிகள் 30 ம், 18 ராத்தல் பீரங்கிகள் 30ம், 9 ராத்தல் பீரங்கிகள் 9ம் இருந்தன 40 கப்பல்களில் 10,520 கடற்படை வீரர்கள் இருந்தனர்.

திப்பு கடற்பயிற்சி பள்ளியும் கப்பல் செப்பனிடும் துறையும் நிறுவினார். இவற்றிற்கான செலவு ஓராண்டில் 1,82,400 பவுன் (சுமார் 23,84,000 ரூபாய்)ஆகியது. (தகவல்: மைசூர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் செல்வராஜ், 24 மார்ச் 1984 ல் நடந்த தென்னிந்திய வரலாற்று பேரவைக் கூட்ட சொற்பொழிவில்) ஆங்கிலேயரிடம் இல்லாத நவீன ஏவுகனைகள் அந்நாளிலேயே திப்புவிடம் மட்டுமே இருந்தன நவீன ராக்கெட்டின் முன்னோடி திப்பு சுல்தான்.

சதவீத அடிப்படையில் மான்யம்

மைசூர் ராஜ்ஜியத்தில் 90 சதவீதம் ஹிந்துக்களும், 10 சதவீத முஸ்லீம்களுமே வாழ்ந்தனர். ஒரே ஆண்டு மட்டும் ஹிந்து கோயில்களுக்கும் தேவஸ்தானங்களுக்கும் 1,93,959 வராகன்களும் பிராமண மடங்களுக்கு 20,000 வராகன்களும் ஆனால் முஸ்லிம் ஸ்தாபகங்களுக்கு 20,000 வராகன்களுமே ஆக மொத்தம் 2,33,959 வராகன்கள் சர்க்கார் கஜானவிலிருந்து வழங்கப்பட்டுள்ளன. சதவிகித அடிப்படையில் மான்யம் வழங்கிய முதல் மன்னன் திப்பு சுல்தான். ஆதாரம் (கி.பி.1798 MYSORE GAZETER பக்கம் 38.VOL IV 1929)

சீர்திருத்தம்

மலபார் பகுதியில் பெண்கள் மேலாடையின்றி இருந்த பழக்கத்தை மாற்றி உயிர் உயர் மானங்காக்க மேலாடை அணியும் பழக்கத்தை உருவாக்கி குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் மணந்து கொள்ளும் பழக்கத்தைத் தடுத்தார். சட்டம் இயற்றி சீர்திருத்தம் செய்தார். திப்புசுல்தான் மைசூரில் நரபலியையும் கோவில்களின் தேவதாசி முறையையும் ஒழிக்கச் சட்டம் போட்டார் மதுவிலக்கை முழுமையாக அமலாக்கினார் மத ஒற்றுமையும் மதுவிலக்கும் திப்புசுல்தானின் இருகண்களாக இருந்தன

தொழில் வளர்ச்சி

அரிசி, சந்தனம், செம்பு, குதிரை, முத்து, செம்மணிக்கல், பட்டு இவையனைத்தும் ஏற்றுமதி செய்ய மிகவும் கவனம் செலுத்தினார் சந்தன அத்தர், எண்ணெய் வடிதொழிலைத் திப்புசுல்தான் துவங்கினார் நாடு முற்றிலும் விவசாயம் செழித்திடச் செய்தார்.

தொழிற் புரட்சி

கடிகாரம், கண்ணாடி, பீங்கான் தயாரிக்கின்ற தொழிற்சாலைகளை வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் நிறுவினார் மஸ்கட்டிலிருந்து பட்டுப் பூச்சிகளை வரவழைத்து பட்டு உற்பத்தியை உண்டாக்கினார் கூட்டுறவுப் பண்டக சாலைகளை அமைத்து மக்களுக்கு மலிவு விலையில் பண்டங்கள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

திப்புவின் மானியம் பெற்ற திருக்கோயில்கள்

  • கி.பி.1786 மேலக்கோட்டை நரசிம்மசாமி கோயில் தங்க, வெள்ளி, ஆராதனைப் பாத்திரங்கள், பாரசீக மொழிப்பட்டயம், 12 யானைகள் பரிசும் வழங்கினார் நாராயணசாமி கோவிலுக்கும், கந்தேஸ்வரசாமி கோவிலுக்கும் ரத்தின ஆராதனைத் தட்டுக்கள் வழங்கினார்.*நஞ்சன் கூடுவில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்திற்கும் மரகதலிங்கம் வழங்கினார் அதன் பெயர் இன்றும் “பாதுஷாலிங்கம்” என்று வழங்கப்படுகின்றது.
  • குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கும் அக்கோவிலைச் சுற்றியுள்ள நிலவரிவசூல் செய்யும் உரிமையை தானம் வழங்கினார் கி.பி.1790 ல் காஞ்சிபுரம் கோவிலுக்கும் 10,000 வராகன் நன்கொடை திப்புசுல்தான் வழங்கினார்.
  • மைசூரில் உள்ள தொன்னூரில் இராமனுஜகுளம் தூர்வாரப்பட்டு செப்பனிடப்பட்டதும் திப்புவால்தான். பர்பாபுதனன்கிரி என்ற தத்தாத்ரீயபீடம் மடத்திற்கும் இருபது சிற்றூர்கள் இனாமாகவும் புஷ்பகிரி மடத்திற்கு இரண்டு கிராமங்கள் மானியமாகவும் திப்பு வழங்கினார்
  • சிருங்கேரி மடத்தில் ஹைதர் அலியின் சனதுகள் மூன்றும் திப்பு சுல்தானின் சனதுகள் முப்பதும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
  • கி.பி.1793 ல் ஜகத்குரு சங்கராச்சாரியார் சச்சிதானந்த பாரதிக்கு திப்புசுல்தான் எழுதிய கடிதம் இன்றும் மைசூர் நூலகத்தில் உள்ளது. இந்நூலகத்தில் ஹிந்துக் கோயில்கள் பலவற்றுக்கு திப்பு வழங்கிய மானியங்கள் பற்றிய அரசு ஆணைகள் பல உள்ளன.
  • வாழ்நாள் முழுவதும் போராடியே வாழ்ந்த திப்புசுல்தான், தரியாதெளலத் அரண்மனையும், பூங்காவும், மொராக்கோ அரபிகளைக் கொண்டு பெங்களூரில் பிரம்மாண்டமான பள்ளிவாயிலும், பலவிதத் தோட்டங்களும், கட்டிடங்களும், பாலங்களும் கட்டினார். ஸ்ரீரங்கப்பட்டினத்தில் கலாசாலை ஒன்றும் நிறுவினார்.

கிட்டத்தட்ட மாவீரன் திப்பு மறைந்து 20 ஆண்டுகளில் முழு இந்தியாவும் ஆங்கிலேயர் வசமானது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: