Posted by: shuhaib | 16/06/2010

தோண்டி எடுத்து தண்டனை தரவேண்டும் –இளமாறன்!!


ஒரு நள்ளிரவு. உறங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் விழிப்பறியாமல் இறந்தே போனார்கள். லட்சக்கணக்கானோர் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டார்கள். என்ன நிகழ்ந்தது என்று தெரியாமலேயே செத்துப்போன மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று நீதி மீது நம்பிக்கைக் கொண்டோர் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில், செத்தவர்களோடு சேர்த்து நீதியும் செத்துவிட்டது என்கின்ற செய்தி கிடைத்திருக்கிறது. மனதை குடைந்தெடுக்கும் அந்தச் சம்பவத்தை இப்போதும் நினைவுப்படுத்தினால் பகீர் என்று இருக்கும். காட்சி ஊடகங்கள் வலுவடையாத காலக்கட்டம் அது. 1984ஆம் ஆண்டு நாம் பள்ளிப்படிப்பில் இருந்த காலக்கட்டம். சென்னை வியாசர்பாடியில் இருந்து மருத்துவர் டோம்னிக் சுவாமிநாதன், சென்னை அண்ணாசாலையில் ஒரு போராட்டம் நடக்கிறது வாருங்கள் என்று அழைத்துச் சென்றார். புரியவில்லை. அங்கே இவர்தான் கவிஞர் இன்குலாப் என்று அறிமுகப்படுத்தப்பட்டார். பாவாணர் நூலகம் அமைந்திருக்கும் பகுதியில் எல்லோரும் கையிலே ஒரு அட்டை ஏந்திக்கொண்டு நின்றிருந்த நினைவு இப்பொழுது நம் கண் முன்னால் நிழலாடுகிறது.

1984 டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவு, மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் மீதைல் ஐசோனயைட் என்கின்ற நச்சுவாயு கசிந்ததில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தார்கள். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஏதோ ஒரு வகையில் பாதிப்படைந்தார்கள். ஒரு கொலையை செய்தோம் என்றால் கொலைக் குற்றவாளியை நடத்தும் விதம் நமக்குத் தெரியும். ஆனால் 15ஆயிரம் பேருக்கு மேற்பட்டோரை கொலை செய்த உலகிலேயே மிக மோசமான தொழிற்சாலை விபத்தை இந்த உலகம் முதலில் இப்போதுதான் கண்டது. உலகமே அதிர்ச்சி அடைந்தது. நாங்கள் எல்லாம் போபால் விஷ வாயு கசிவுக்கு காரணமானவர்களை கைது செய்யுங்கள் என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தோம். விளையாட்டாக கால் நூற்றாண்டை கடந்து ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது.

இந்த தீர்ப்பைக் கேட்டவுடன், நடைப்பெற்ற நச்சு வாயு கசிவே பரவாயில்லை என்பதைப்போன்ற மனநிலைக்கு மாந்தநேய அக்கறைக் கொண்டோர் அனைவரும் வந்திருப்பார்கள் என்றே நம்புகிறோம். இந்த நிகழ்வு முடிந்தப் பின்னர், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. அதற்காக யூனியன் கார்பைடு நிறுவத்தின் முன்னாள் செயல் தலைவர் கேசிப் மகேந்திரா உட்பட 8 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்கள். கால் நூற்றாண்டிற்குப் பிறகு தீர்ப்பு வரப்போகிறது என்பதற்காக நீதிமன்றம் முழுக்க மக்கள் திரள் எதிர்பார்ப்போடு குழுமி இருந்தது. குற்றம் சாட்டப்பட்டவரில் ஒருவரைத் தவிர, மீதம் 7பேரும் நீதிமன்றத்திலே நிறுத்தப்பட்டார்கள். இவர்களுக்கெதிரான குற்றச்சாட்டு, இந்திய குற்றவியல் சட்டம் 304-ஏ (மரணத்திற்கு காரணமாக இருத்தல்), 304-2 (பெரும்பாலான மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருத்தல்) மற்றும் விதி 336, 337ன் கீழும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

23 ஆண்டுகளுக்கு முன்னர் தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட வாரன் ஆண்டர்சன் பற்றி இந்த வழக்கிலே எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இந்த வழக்கிலே குற்றவாளிகளாக நிறுவனத்தின் முன்னாள் செயல்தலைவர் கேசிப் மகேந்திரா, முன்னாள் இயக்குனர் விஜய் கோகுலே, முன்னாள் துணைத் தலைவர் கிஷோர் காம்தார், செயல் மேலாளர் ஜெ.என்.முகுந், உற்பத்தி மேலாளர் எஸ்.பி.சௌத்திரி, ஆலை கண்காணிப்பாளர் கே.வி.ஷெட்டி, உற்பத்தி உதவியளார் எஸ்.ஐ.குரோஷி ஆகியோர் குற்றவாளிகள். இதில் 9வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த துணைச் செயல்மேலாளர் ஆர்.பி.ராய் விசாரணை நடக்கும் காலக்கட்டத்திலேயே செத்துப் போய் விட்டார்.

178 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 3008 பக்க ஆவணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பெரும் கொடுமை என்னதென்றால், விசாரணை எதிலும் பங்கேற்காமல் அமெரிக்காவிற்கு சென்று அமைதி வாழ்க்கை வாழும் இந்நிறுவனத்தின் உரிமையாளர் வாரன் ஆண்டர்சன் வெறும் 2000 டாலர்கள் பிணை பணமாக செலுத்தி, இந்தியாவைவிட்டு சென்றவர்தான். இதுவரை அவர் இந்த விசாரணைக்கு எவ்வித ஒத்துழைப்பும் நல்கவில்லை. விசாரணைக்கே வரவில்லை என்பது பெருங்கொடுமை. படு கேவலமான இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை 1984ஆம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி பதிவு செய்யப்பட்டது. பின்னர் டிசம்பர் 6ம் தேதி இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. 1987ஆம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணையை சி.பி.ஐ. தொடங்கியது. இந்த வழக்கை விசாரிக்க உள்ளூர் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. சி.பி.ஐ. தரப்பில் வழக்கறிஞர் சகாய் ஆஜர்படுத்தப்பட்டார்.

இவர் நீதிமன்றத்தில் குறிப்பிடும்போது, 15ஆயிரம் பேர் உயிரிழந்ததை சுட்டிக்காட்டினார். அந்த நிறுவனத்தை ஆய்வு செய்து பார்த்தபோது, அதிலே பராமரிப்பு குறைகள் இருப்பதை கண்டுபிடிக்க முடிந்தது. இப்படி ஒரே நேரத்தில் 15 ஆயிரம் பேருக்கு மேல் பலிகொண்ட ஒரு கோர விபத்து நடைபெற்று, அதற்கான விசாரணை கால் நூற்றாண்டுகளாக நடத்தி, குற்றவாளிகளுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை என்கின்ற தீர்ப்பை கேட்டபோது, பாதிக்கப்பட்ட மக்கள் நீதியின் மேல் கொண்ட நம்பிக்கையை தூக்கிப் போட்டு உடைத்தார்கள். இந்த தீர்ப்பை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராசா, வழக்கை விசாரித்த சி.பி.ஐ. நீதியை நிலைநாட்டுவதில் முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது. சி.பி.ஐ.யின் தோல்விக்கு பிரதமர் மன்மோகன்சிங் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத், ஏற்கெனவே விஷ வாயுவால் தாக்கப்பட்டவர்கள் இந்த தீர்ப்பு கூடுதலாக வழங்கப்பட்டிருப்பதாக விமர்சித்தார். நடுவண் அரசின் சட்ட அமைச்சர் வீரப்ப மௌலி கூறும்போது, தாமதமாக கிடைக்கும்நீதி, நீதி மறுக்கப்படுவதற்கு சமம் என்பதற்கு இந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டு. எனினும் இந்த வழக்கில் நீதி குழி தோண்டி புதைக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று முழக்கம் எழுப்புகிறார்கள். 70 வயது மூதாட்டி ஒருவர் என்னுடைய குழந்தைகள், கணவர், உறவினர்கள் என 35 பேரை ஒரே இரவில் பலி கொடுத்துவிட்டேன். இப்படி 34 பேரை கொலை செய்த இவர்களுக்கு இரண்டு ஆண்டு தண்டனையா? என்று கதறி அழுதபோது, நீதியின் மேல் இருந்த நம்பிக்கை நமக்கு தளர்ந்து போகத்தான் செய்தது.

26 ஆண்டுகளுக்குப் பிறகு 15 ஆயிரம் பேரை பலிகொண்ட ஒரு குற்றத்திற்கு 2 ஆண்டு தண்டனை என்கின்ற மிக மோசமான ஒரு தீர்ப்பு, நீதி வெல்லும் என்ற நம்பிக்கைக் கொண்டோர்கள் மனங்களிலே நீதியை குறித்த அவநம்பிக்கையை தோற்றுவித்திருக்கிறது. இந்த வழக்கை எடுத்து நடத்திய சி.பி.ஐ. வழக்கறிஞர் சரியான பாதையில் வழக்கைக் கொண்டு செல்லாமல் விட்டதே, இப்படிப்பட்ட ஒரு அவலமான தீர்ப்பிற்கு காரணமாகிய போது, இது ஏதோ சாலை விபத்து வழக்குப் போன்று முடிக்கப்பட்டதை எண்ணி, வழக்கறிஞர்கள் பலர் வருத்தம் தெரிவிக்கிறார்கள். தீர்ப்போடு இந்த வழக்கு முடிந்துவிடும் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த தீர்ப்பிற்குக் காரணம் இந்திய அரசியலுக்குள் ஒளிந்து கொண்டிருப்பதை ஊடகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிக் கொண்டுவர தொடங்கி இருக்கின்றன.

வழக்கின் தீர்ப்பு முடிந்தவுடன் முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் இந்த வழக்கை நடத்துவதில் அரசு நேரிடையாக தலையிட்டது என்று குற்றம் சாட்டியிருக்கிறார். சி.ஆர்.லால் என்கின்ற புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குனர், யூனியன் கார்பைடு நிறுவத்தின் தலைமை நிர்வாகியாக இருந்த ஆண்டர்சனை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் ஆர்வம் காட்ட வேண்டாம் என வெளியுறவுத்துறை அதிகாரிகள் சிலர் என்னை வற்புறுத்தினார்கள் என்கின்ற செய்தியைக் கேட்டபோது நமக்கு இந்திய புலனாய்வுத் துறையின் மீதே நம்பிக்கை சிதையத் தொடங்குகிறது. மேலும் அவர் கூறும்போது, சி.பி.ஐ. விசாரணையில் சில அதிகாரிகள் தலையிட்டதால்தான் நீதி கிடைக்க தாமதமாகிறது. மனிதர்களை படுகொலை செய்ததற்காக இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 304ன் கீழ்தான் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்படி அதிகபட்சமாக 10 ஆண்டுவரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதன் பின்னர் 304-ஏ பிரிவிற்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்தப் பிரிவு சாதாரணமாக சாலை விபத்துக்களுக்கு பயன்படுகிறது.

எந்த ஆதாரத்தில், எந்த சூழ்நிலையில் இதுப்போன்ற வழக்கை சி.பி.ஐ. நீர்க செய்தது என்பது தெரியவில்லை. மற்ற நாடுகளில் எல்லாம் நீதித்துறை, அதிகார வர்க்கம், அரசியல் தலைவர்களின் குறுக்கீடு இல்லாமல் மத்திய புலனாய்வுத்துறை நிறுவனங்கள் விடுதலை உணர்வோடு இயங்கி வருகின்றன என்கிறார். இந்த லால், 1994 ஏப்ரல் முதல் 1995 ஜூலை வரை இந்த வழக்கை கவனித்து வந்தவர் என்பதை நாம் கருத்தில் எடுக்க வேண்டும். இப்படி ஒரு புலானாய்வுத்துறை அதிகாரி கருத்து சொல்லிய சில மணி நேரங்களுக்கெல்லாம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், ராஜீவ்காந்திதான் யூனியன் கார்பைடு நிறுவத்தின் தலைவர் ஆண்டர்சனை தப்ப விட்டார் எனவும், ராஜீவ்காந்தியின் முன்னாள் முதன்மைச் செயலாளர் பி.சி.அலெக்ஸாண்டர் கூறியிருக்கிறார். அவர் கூறும்போது, அப்போது மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த அர்ஜுன் சிங்கை அழைத்து, அவரோடு ஆலோசித்துப் பின்னர், ராஜீவ்காந்தியின் சம்மதத்துடன் ஆண்டர்சனை தப்பிக்கச் செய்வதில் உடன்பட்டிருக்கலாமோ என்ற கருத்து ஆழமாக கொண்டிருக்கிறது.

அப்போதைய மத்திய பிரதேச முதல்வர் அர்ஜுன் சிங்கை விசாரித்து என்ன நடந்தது என்பதை அறிய வேண்டுமென இப்போது இருக்கும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவ்கான் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்த ஒரு நிலையை, லட்சக்கணக்கான மக்களை ஊனமுற செய்த படுபாதக செயலின் வழக்கை, இவ்வளவு படுகேவலமாக நீர்த்துப் போகச் செய்த துரோகிகள் யார் என்பதை மக்கள் மன்றத்திற்கு இந்த அரசியல் சார்ந்த தலைவர்கள் விளக்க வேண்டும். நிலை இப்படி இருக்க, வீட்டுக்காவலில் இருந்த ஆண்டர்சனை விடுதலை செய்வதில் ராஜீவ்காந்தி அரசு வேகம் காட்டியதாக அமெரிக்க புலானாய்வு துறை தகவல் தருகிறது. நமக்கு ஒன்று மட்டும் தெரிகிறது, இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அமெரிக்க அடிவருடியாக இந்திய அரசு மாறிவிட்டது. இதை மாற்ற ஒரு புதிய எழுச்சி உருவாக வேண்டும். ஆயிரக்கணக்கான மக்களை கொன்று, அவர்களின் வாழ்வை வெறுமையாக்கிய இந்த படுபாதகர்களை கடுமையாக தண்டிப்பதற்கு போராட மக்கள் முன்வர வேண்டும். இல்லையென்றால், இது மிக சாதாரண நிகழ்வு.

மனித உயிர்கள் மிக சாதாரணமாக மாறிவிட்டதைப் போன்ற நிலைப்பாடு ஏற்படும். இது வளர்ந்து வரும் மாந்த மாண்புக்கு உகந்ததல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான போராட்டக் களத்தை மாந்தநேய அக்கறைக் கொண்ட ஒவ்வொருவரும் கைப்பற்ற வேண்டும். அயோக்கியர்களை ஆயிரக்கணக்கான மக்களை கொன்றொழித்த படுபாதகர்களை செத்துப் புதைக்கப்பட்டாலும் தோண்டி எடுத்து தண்டனைத் தர வேண்டும். அப்போதுதான் இனிவரும் காலங்களில் இது தவறு என்கின்ற உணர்வு, இப்படிப்பட்ட கொலைக்காரர்களுக்கு வரும். இதற்கு நாம் தயாராக வேண்டும்.

– மீனகம் இளமாறன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: