Posted by: shuhaib | 16/06/2010

நேரங்கெட்ட நேரத்தில்…


இக்கட்டான சூழ்நிலையில், வேற்றுமைகளை மறந்துவிட்டு, தான் பணியாற்றும் நிறுவனத்தோடு தோள் கொடுத்து நிற்பதுதான் அதன் பணியாளர்களின் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். ஒரு நிறுவனம் தன் பணியாளர்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கும்; அது நியாயமானதும்கூட. ஆனால் இந்த அணுகுமுறைக்கு முற்றிலும் மாறாக நடந்துகொண்டுள்ளனர் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள். மங்களூரில் ஏர் இந்தியா விமான விபத்தில் 158 பேர் இறந்து, அந்த நிறுவனத்தின் வணிக பிம்பம் குலைந்துபோய், தடுமாற்றத்தில் இருக்கும் வேளையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதைப் போல, கடந்த இரண்டு நாள்களாக, ஏர் இந்தியா ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தால் பயணிகள் பாதிக்கப்பட்டதோடு, நிறுவனத்துக்கும் இழப்பு ஏற்பட்டது.தில்லி உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை ஏற்று வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்வதாக ஏர் இந்தியா ஊழியர்கள் அறிவித்தபோதிலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக 58 பேரை பணிநீக்கம் செய்துள்ளது ஏர் இந்தியா நிறுவனம். 24 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏர் இந்தியா வரலாற்றில் இத்தகைய கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை என்று கூறப்பட்டாலும், அத்தகைய கசப்பான முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதுதான் உண்மை.மார்ச் 2010 நிதியாண்டு கணக்குப்படி ஏர் இந்தியா நிறுவனத்தின் இழப்பு ரூ. 5,400 கோடி. இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை ஏர் இந்தியா இணைத்துக் கொண்டபோது லாபத்தை நோக்கி நிறுவனம் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இழப்புகள் மேலும் மேலும் அதிகரித்து வருகின்றன. இந்த இழப்புகளை மத்திய அரசு, மக்கள் வரிப்பணத்திலிருந்துதான் ஓரளவு ஈடுசெய்து வருகிறது.நாளொன்றுக்கு சராசரியாக 46,000 பயணிகளை ஏற்றிச் செல்லும் ஏர் இந்தியா நிறுவனம், கடும் போட்டிகளுக்கு இடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் 16 சதவீத வளர்ச்சி கண்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. தில்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு உள்நாட்டு விமான சேவையின் எண்ணிக்கையை 10 சதவீதம் அதிகரித்து, வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் ஏர் இந்தியா திட்டங்களை அறிவித்தது. இந்த நேரத்தில் இப்படியொரு வேலைநிறுத்தம். அதுவும் மிகச் சாதாரண காரணங்களுக்காக!விமான விபத்து நடந்து 158 பேர் இறந்துள்ள நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் உள்விவகாரங்களையும் குறைகளையும் வெளிப்படையாகப் பேசி, நிறுவனத்தின் தோற்றத்தை சிதைத்துவிட வேண்டாம் என்பதற்காக, பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிக்க வேண்டாம் என்றும், தேவையில்லாத விமர்சனங்களைச் செய்யாதீர்கள் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் சுற்றறிக்கை வெளியிட்டதை மையப்படுத்தித்தான் இந்த வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. மிக மோசமான சூழலில், ஏர் இந்தியா நிறுவனம் இத்தகைய சுற்றறிக்கையை வெளியிட்டதன் நியாயம் அனைவருக்கும் புரியக்கூடியது. ஆனாலும், ஊழியர் அமைப்புகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.இதனால், கடந்த இரண்டு நாள்களில் ஏர் இந்தியா நிறுவனத்துக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டது ஒருபுறம் இருக்க, கோடை கால விடுமுறைக்காக ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்தவர்கள் அதை ரத்து செய்வதும், முன்பதிவு செய்ய நினைத்தவர்கள் வேறு விமானங்களில் முன்பதிவு செய்வதும்தான் நடைபெற்றது. ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில்தான் விமான சேவையில் அதிக லாபம் பார்க்க முடியும். ஆனால் இந்த நேரத்தில் இப்படியொரு அவப்பெயரையும் அவநம்பிக்கையையும் ஒரு நிறுவனத்தின் மீது அதன் ஊழியர்களே ஏற்படுத்துவார்கள் என்றால்…இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதிகமானோர் விமானத்தில் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். 2009-ம் ஆண்டின்  முதல் மூன்று மாதத்தில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 133.4 லட்சம் என்றால், 2010-ம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 162.8 லட்சம். அதாவது 22 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த வளர்ச்சியின் பலனை ஏர் இந்தியா அடையவில்லை. தனியார் விமான நிறுவனங்கள்தான் கணிசமான லாபம் ஈட்டியுள்ளன. குறிப்பாக, பாரமவுன்ட், ஜெட் ஏர்வேஸ், கிங்ஃபிஷர் ஆகிய நிறுவனங்கள்தான் இதில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இதில் ஏர் இந்தியாவின் உள்நாட்டு விமானப் பயணிகளின் பங்கு வெறும் 18 சதவீதம் மட்டுமே!வெளிநாடுகளுக்கான விமான சேவையில் இந்தியாவில் 79 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த விமானப் பயணிகளில் மூன்றில் ஒரு பங்கு பேர் மட்டுமே (33 சதவீதம்) இந்திய விமானங்களைத் தேர்வு செய்கின்றனர். இந்த 33 சதவீதம்பேரில் அதிகமானோர் ஏர் இந்தியா விமானத்தைத் தேர்வு செய்கிறார்கள், (குறிப்பாக அரபு நாடுகளில்). இதில்  2009 நவம்பர்-டிசம்பரில் ஏர் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது என்று செய்திகள் வந்த நிலையில், துபையிலிருந்து வந்த விமானம் விபத்தில் சிக்கி, இத்தனை பேரின் உயிரைக் குடித்தது. தரையில் விழுந்தவர் கொஞ்சம் பலம் திரட்டி எழும்போது தலையில் அடித்ததைப் போல விழுந்த வணிக அடி இது. இந்த நேரத்தில் இத்தகைய வேலைநிறுத்தம், அது எத்தகைய உண்மையான நியாயமான காரணங்களாக இருந்தாலும், தவிர்த்திருக்கப்பட வேண்டும்.தனியார் நிறுவனங்கள் எங்கெல்லாம் நுழைந்திருக்கின்றனவோ அத்துறைகளில் இயங்கும் அரசு நிறுவனங்களில்- நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், பிஎஸ்என்எல், அஞ்சல்துறை, விமானப் போக்குவரத்து, பேருந்துகள், நூற்பாலைகள் இன்னபிற-இதுபோன்ற வேலைநிறுத்தங்கள் நடந்தால், அத்துறையின் பெயர் கெட்டுப்போவதுடன், தனியார் துறையின் வளர்ச்சிக்குச் சாதகமாக அமைந்துவிடுகிறது. தொழில்போட்டியில் தனியார் நிறுவனம் இருக்குமெனில், வேலைநிறுத்தம் செய்யாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் அணுகுமுறை மட்டுமே அரசுத் துறை நிறுவனங்களைக் காப்பாற்றும் என்பதை அதன் ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: