Posted by: shuhaib | 16/06/2010

அதிகரித்து வரும் கள்ள நோட்டுப் புழக்கம்


அதிகரித்து வரும் கள்ள நோட்டுப் புழக்கம்

நாட்டில் கள்ள நோட்டுப் புழக்கம் அதிகரித்து வருவது பொருளாதாரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கள்ள நோட்டுகள் அச்சடிப்பவர்களையும், கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுபவர்களையும் போலீஸôர் அவ்வப்போது கண்டுபிடித்துக் கைது செய்வதுடன், கள்ள நோட்டுகளையும் கைப்பற்றி வருகின்றனர். என்றாலும் இது மிகவும் குறைவே. நாட்டில் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் ஒரு சிறு பகுதியே கள்ள நோட்டுப் பேர்வழிகளிடமிருந்து கைப்பற்றப்படுகிறது.  2006-2009-ம் ஆண்டுகளுக்கு இடையே 7.34 லட்சம் ரூ.100, 5.76 லட்சம் ரூ.500, 1.09 லட்சம் ரூ.1000 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  பெரும்பாலும், வெளிநாடுகளிலிருந்துதான் குறிப்பாக பாகிஸ்தானிலிருந்துதான் கள்ள நோட்டுகள் இந்தியாவுக்குக் கடத்தி வரப்படுகின்றன. பாகிஸ்தானிலிருந்து துபை, தாய்லாந்து, சிங்கப்பூர், இலங்கை, நேபாளம், வங்க தேசம் வழியாக விமானப் பயணிகள், கூரியர்கள் மூலம் இவை கடத்தப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டு வரப்படுகின்றன. கள்ள நோட்டு கடத்தல்காரர்களுக்கு முக்கியக் கேந்திரங்களாக இவை செயல்பட்டு வருகின்றன.  இந்தியாவில் சென்னை, மும்பை, ஹைதராபாத், கோழிக்கோடு, கொச்சி, தில்லி விமான நிலையங்கள் மூலமாக கடத்தல்காரர்கள் கள்ள நோட்டுகளைக் கொண்டுவந்து புழக்கத்தில் விடுகின்றனர். மேலும் நேபாளம், வங்க தேசத்திலிருந்து எல்லை வழியாக கள்ள நோட்டுகள் கடத்தப்பட்டு, இந்தியாவில் புழக்கத்தில் விடப்படுகின்றன. கடத்தல்காரர்கள் ரூ.500 நல்ல நோட்டு கொடுத்தால் அதற்கு ரூ.1,000 மதிப்புக்கு கள்ள நோட்டுகளை வழங்கி வருகின்றனர். இதனால் இத் தொழிலில் மறைமுகமாக சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.  கள்ள நோட்டுகள் அதிகரித்து வருவது குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கவலை தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் ஏஜென்சிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதையும் சிபிஐ ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது. ஆனாலும், கள்ள நோட்டுப் பிரச்னைக்குத் தீர்வுகாண மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கான நடைமுறைகளும் போதுமானதாக இல்லை என்பதுதான் உண்மை.  நம் நாட்டில் அச்சடிக்கப்படும் நோட்டுகளின் வடிவமைப்பு குறித்து முன்கூட்டியே எதிரிகளுக்கு சிலர் ரகசியமாகத் தகவல் தந்துவிடுவதாகவும், இது கள்ள நோட்டைப் பெருமளவில் அச்சடித்துப் புழக்கத்தில் விடுவதற்கு ஏதுவாக இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை யாரும் முழுமையாக மறுக்க முடியாது.  இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதற்காக விசேஷ காகிதம், தரமான மை போன்றவை வெளிநாடுகளிலிருந்துதான் வரவழைக்கப்படுகின்றன. இதுவும் நமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது.  ஏனெனில், பாகிஸ்தானும் தங்களுக்குத் தேவையான நோட்டுகளை அச்சிட ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலிருந்துதான் விசேஷ காகிதம், மை போன்றவற்றை இறக்குமதி செய்கிறது. ஆனால், அந்த நாடு தனது தேவைக்கு அதிகமாக இவற்றை இறக்குமதி செய்வதுதான் கவலை தரும் விஷயமாகும்.  கள்ள நோட்டுகளைத் தடுப்பது எப்படி என்பது குறித்து ஆராய ரிசர்வ் வங்கி ஒரு குழு அமைத்து பல யோசனைகளைத் தெரிவித்துள்ளது. கள்ளநோட்டுகளைக் கண்டுபிடிக்கும் கருவி நாட்டில் பற்றாக்குறையாக உள்ளது. இவற்றை அதிக அளவில் வாங்கி அனைத்து வங்கிக் கிளைகளிலும் வைக்க வேண்டும்.  நோட்டுகளை அச்சடிக்க வெளிநாடுகளிலிருந்து காகிதங்கள், மை வரவழைப்பதற்குப் பதிலாக உள்நாட்டிலேயே தரமான காகிதம், மை இவற்றைத் தயாரித்து நவீன தொழில்நுட்பத்துடன் புதிய வடிவமைப்பில் நோட்டுகளை அச்சடிக்கலாம். இப்படிச் செய்வதன் மூலம் கள்ள நோட்டுகள் அச்சிடப்படுவதை ஓரளவு தடுக்க முடியும்.  காகித நோட்டுகளுக்குப் பதிலாக பாலிமர் நோட்டுகளை அறிமுகப்படுத்துவதும் சிறந்த வழியாகும். ஆனால், இதற்கு அதிகம் செலவாகும். ஆனாலும், பாதுகாப்பானது. கள்ள நோட்டுகள் பற்றி பொதுமக்களிடம் அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  கள்ள நோட்டுகளைக் கண்டுபிடிப்பது குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். சிலர் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டு அதை மாற்றுவதன் மூலம் கிடைக்கும் நல்ல நோட்டுகளைத் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்யப் பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. இது குறித்து நாம் எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.  இந்த விவகாரத்தை இந்தியா சர்வதேச அரங்குக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடும் பாகிஸ்தான் அரசுடன் பேச்சு நடத்த வேண்டும்.  ஏனெனில், இந்தியாவை நேருக்குநேர் சந்திக்க முடியாத பாகிஸ்தான், கள்ள நோட்டுகளை இந்தியாவுக்குள் அதிக அளவில் புழக்கத்தில் விட்டு, நமக்கு சவால் விடும் வகையில் மறைமுகப் போர் நடத்தி வருகிறது.  அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை புழக்கத்துக்கு விடுவதற்குப் பதிலாக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஆன்லைன் வர்த்தகம் ஆகியவற்றை ஊக்குவிப்பதும் கள்ள நோட்டுப் புழக்கத்தைக் குறைப்பதற்கு அல்லது தடுப்பதற்கு உதவும்.  கள்ள நோட்டுகளைத் தடுக்க வேண்டுமானால், அரசு ஏஜென்சிகளிடம் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும். அதாவது மத்திய புலனாய்வுத் துறை, வருவாய் புலனாய்வுத் துறை, தேசிய குற்றப்பதிவு அமைப்பு, மத்திய அரசின் பொருளாதாரப் புலனாய்வுத் துறை, மத்திய போலீஸôர், ரிசர்வ் வங்கி, செயலாக்க இயக்குநரகம், சட்டத் துறை, மத்திய, மாநில போலீஸôர் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இப்படிப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கள்ள நோட்டை ஒழிக்க முடியும்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: