Posted by: shuhaib | 16/06/2010

மறந்து போன ஞாபகங்கள் !!


உங்க கிட்ட சொல்றதுக்கென்ன. காலையிலருந்து ஒரு வேலையும் ஓட வில்லை. எவ்வளவு யோசித்தும் ஞாபகம் வரவே இல்லை.. எப்படி மறந்தேன்? எப்படி மறந்தேன்? என்று என்னை நானே கேட்டுத் திட்டிக் கொண்டேன். அதுவாக இருக்குமோ? இதுவாக இருக்குமோ? என்று எதை எதையோ யோசித்துப் பார்த்து கடைசியில் அதுவுமில்லை, இதுவுமில்லை என்று மட்டுமே முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறேன்.

பேசாம அவகிட்டயே போன் பண்ணிக் கேட்டுடலாமா?

வேண்டாம்டா! இதையே மறந்துட்டியான்னு கேட்டு கேட்டு பிறாண்டிடுவா. ராட்சஸி. மனசாட்சி உள்ளுக்குள்ளிருந்து அபாயக் குரல் கொடுத்தது.

இந்த கேள்விக்கு விடை தெரியாம வேற வேலையும் எதுவும் செய்ய முடியாது. பேசாம ஆஃபிஸ்க்கு லீவு போட்டுடலாமா?

போட்டுட்டு? ஹ்ம்ம்ம் போட்டுட்டு படுத்துத் தூங்கு. லூசு. லீவு போட்டு உக்காந்து யோசிடா முட்டாளே. மீண்டும் மனசாட்சி.

அப்படி நினைத்துத்தான் காலையில் யோசிக்க ஆரம்பித்தேன். இதோ மணி இப்போ 5 இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அவளைப்பற்றிய மற்ற எல்லா நினைவுகளும் இந்த 6 மணி நேரத்தில் வந்து போயிருக்கின்றது அதைத் தவிர…..

ச்சே இதை மறந்துட்டமேன்னு ஒரு விதமான வெறுப்புடன் எதிரில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஓடிக் கொண்டிருந்த முட்களின் ஒவ்வொரு நகர்வும் கூட அவளையே எனக்கு நினைவூட்டியது.

உங்களிற்கு ஒண்ணு தெரியுமா?

முதல் முறை அவள் இந்த அறைக்கு வந்த போது நான் வாங்கிய திட்டுக்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. ஏன் இவ்ளோவ் நாஸ்டியா இருக்கு? இதை ஏன் இப்படியே போட்டு வெச்சிருக்க? இந்த பெல்டை இங்க மாட்டக் கூடாதா? அதை துடைச்சி வெக்கக் கூடாதா? என்று மாற்றி மாற்றி கேட்டுத் திட்டித் தீர்த்து விட்டாள்.

ஒரு 6 மாசத்துக்கு முன்னாடி செல் தீர்ந்து போயி ஓடாமல் கிடந்த வால் கிளாக்கை பார்த்தவள், என்னை முறைத்துப் பார்த்து தெரியும் இதுக்கு நீ கண்டிப்பா செல் போட்டிருக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும் என்று சொல்லியவள், தன் ஹேண்ட் பேகை திறந்து, கொண்டு வந்திருந்த செல்லை என் மீது எறிந்தாள்.

அந்த செல்தான் இப்போது இந்த கடிகாரத்திற்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

கடைசியாய் போகும் போது ஹ்ம்ம்ம். இதே மாதிரி எப்பவும் ரூம் நீட்டா இருக்கணும். நான் எப்போ வேணாலும் சொல்லாம வந்து செக் பண்ணுவேன் என்று சொல்லி விட்டுச் சென்றாள். அதற்கப்புறம் நாங்கள் பார்த்துக் கொண்டதெல்லாம் வெளியில்தான். அவள் இந்த ரூமிற்கு வர வில்லை. ஆனால் இப்போதும் ரூம் க்ளீனாகத்தான் இருக்கிறது. காரணம் அவள்தான்.

அவளிடமிருந்து நான் கற்றுக் கொண்டது நிறைய. நான் குடையை மடித்து வைத்துக் கொள்ளும் போது சும்மா பக்கிள் எல்லாம் போடாம நார்மலா மடிச்சு வெச்சுக்குவேன். ஒரு நாள் அதைப் பார்த்துட்டு ஏன் இப்படி மடிச்சு வெச்சிருக்க? இங்க கொடு என்று வாங்கி ரொம்ப அழகாய் மடிச்சு சுத்தி பக்கிள் போட்டுக் கொடுத்தாள். அங்கங்கே நீட்டிக் கொண்டிருக்காமல், கடையிலே பேக் செய்து தருவதைப் போல இருந்தது.

இன்னிக்கு வரைக்கும் எப்படி ஒரு சில விஷயங்களை பெண்கள் செய்யும் போது மட்டும் இவ்வளவு நேர்த்தியாய், அழகாய் செய்ய முடிகிறது என்று வியந்து கொண்டிருக்கிறேன்.

பாருங்க.. குடை மேட்டரெல்லாம் ஞாபகத்திற்கு வருது. ஆனா இது மட்டும் வர மாட்டேங்குதே என்று சபித்துக் கொண்டே என் சிந்தனைகளைத் தொடர்ந்தேன்.

அவளை முதன் முதலில் என் வண்டியில் வர வைக்க நான் பட்ட பாடு இருக்கிறதே. 3 நாளா கால்ல விழாத குறையா கெஞ்ச, அப்பப்பா.. சொல்லி மாளாது.இப்போ அவளே ரொம்ப போர் அடிக்குதுடா எங்கயாவது தாம்பரம் தாண்டி தூரமா போய்ட்டு வரலாமென்று கேட்பது வேறு விஷயம்.

அவளுக்கும் சரி எனக்கும் சரி. ECR ரோட்டில் போவது அவ்வளவாய் பிடிக்காது. தாண்டி போற ஒவ்வொருவரும் ‘தள்ளிக்கிட்டு வந்திருக்கான் பார்றா’ என்பது போல மொத்தமாய் ஒரு பார்வை பார்த்து விட்டுப் போவார்கள். அது ஒரு மாதிரி கூசிப் போகும்.

அவளும் ஆரம்பத்தில் இது தெரியாமல் ஏன் அந்த பக்கம் போக வேணாங்கற என அடிக்கடி கேட்டு கேட்டு ஒரு நாளில் இப்போ நீ சொல்லியே ஆகணும் என்று ஒற்றைக் காலில் நின்றதால், கடைசியில் இதைச் சொல்லி விட்டுச் சொன்னேன்.

“அப்படி ஒரு தப்பான பார்வைல உன்னை பார்க்க வைக்க நான் காரணமா இருக்க விரும்பலை. இது ஒண்ணும் பொசஸிவ்னெஸ் இல்லை. அவனுங்க பார்க்கிற பார்வை எனக்கே சில சமயம் கூசிப் போகும். அதனாலதான் சொல்றேன்” என்றேன்.

சரி அப்போ கல்யாணமாயிட்டா மட்டும் அப்படி பார்க்க மாட்டாங்களா? அப்போ என்னை அந்த பக்கம் கூட்டிட்டே போக மாட்டியா?

யாரு சொன்னது? கல்யாணம் ஆனதுக்கப்புறம் எவனாவது அப்படி பார்க்கட்டும். என்னடா பார்க்கிற இவ என் ஆளுடான்னு சொல்லி தோள்ள கை போட்டு இழுத்துக்குவேன். இப்போதான் நீ தொட்டா கரப்பான் பூச்சியை பார்க்கற மாதிரி கேவலமா ஒரு லுக் விடறியே… என்றேன்.

சரி சரி வா இந்த பக்கமே போலாம் என்று இழுத்துச் சென்றாள். அன்றுதான் அவள் முதன் முதலாய் ரெண்டு பக்கமும் கால் போட்டு என் வண்டியில் உட்கார்ந்து வந்தது.

எப்பொதும் போலதான் உட்காருவாள் என்று வண்டியில் ஏறி அமர்ந்த நான், திடீரென்று அவள் அப்படி உட்கார்ந்ததும், ஏன் என்ற பார்வையோடு அவளை அப்படியே திரும்பிப் பார்த்தேன். அவளும் என்னைப் பார்த்தாள். ஒரு 3 – 4 நொடிகள்தான் பார்த்திருப்பாள். தலையை தாழ்த்தி விட்டு, நிலத்தைப் பார்த்தவாறு மெல்லிய குரலில் சொன்னாள்.

ப்ச்… வண்டியை எடுப்பா போலாம்.

நான் எதுவும் பேசாமல் வண்டியை ஸ்டார்ட் செய்தேன். அந்த சில வினாடிப் பார்வைகள் உணர்த்திய காதலை எந்த வார்த்தைகளாலும் நிரப்ப முடியாது.

எப்போதும் இது மாதிரியான பயணங்களில் எல்லாம் தாம்பரம் தாண்டிய கொஞ்ச தூரத்திலேயே போலாம் போலாம் என்று ஆரம்பிப்பவள். இன்று, என்ன அவசரம்? இன்னும் கொஞ்சம் தூரம் போலாம் என்று சொல்லிக் கொண்டு வந்தாள். அன்று நாங்கள் மேல் மருவத்தூர் வரை போய் வந்தோம்.

கோயிலுக்கு போலாம் என்று அவளும் சொல்ல வில்லை. நானும் போலாமா என்று கேட்க வில்லை.

அதற்கான பதில் இருவருக்குமே தெரிந்துதான் இருந்தது. அன்றைய பயணத்தில் நான் ஒன்றே ஒன்று தெரிந்துக் கொண்டேன். “நமக்கு ரொம்ப பிடிச்சவங்க, நம்ம மேல வெக்கிற அளவுக்கதிகமான நம்பிக்கையையும், அன்பையும் தவிர நமக்கு சந்தோஷத்தை தரக் கூடியது வேற எதுவும் இல்லை”.

ஆதரவாய் ஒருத்தி உங்கள் தோளில் சாயும் போது, ஏற்படும் பெருமித உணர்வை, உலகையே எதுத்து நிக்க முடியும் என்கிற வீராப்பை, நெஞ்சு நிமிர்த்தலை, தைரியமான பார்வையை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? அன்று நான் உணர்ந்தேன்.

அதற்கப்புறம் தீண்டல்கள் எங்களை எப்போதும் சலனப் படுத்தியதில்லை. யாரும் கட்டம் கட்டி அறிவிக்காமலே எங்களது எல்லைகள் எங்களிற்கு தெளிவாய் தெரிந்திருந்தது.

ச்சே எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ வந்துட்டேன். எதை யோசிக்கணுமோ அதைத் தவிர மத்ததை எல்லம் யோசிச்சுட்டிருக்கேன். பேசிட்டிருக்கேன். இப்படிதாங்க, காலைலருந்து இப்படியேதான் பொழுது நழுவிக் கொண்டிருக்கிறது.

எங்கே விட்டேன்? ஆங்ங்ங் தீண்டல்கள்.

அதற்கப்புறம் ஒருவரின் தீண்டலும், அருகாமையும் மற்றொருவர்க்கு தைரியத்தையும், பாதுகாப்பையும் கொடுக்கும் பொருட்டே என்று ஆனது.

என் காலில் ஆணி என்று சின்னதாய் ஒரு ஆபரேஷன் செய்த போது, சின்ன ஆபரேஷன் தாம்மா என்று சொல்லி வீட்டில் இருந்து யாரும் வர வேணாம் என்று சொல்லி விட்டேன். ஹாஸ்பிடலில் இருந்த அந்த ஒன்றரை நாட்கள் நண்பர்களும், அவளும்தான் கூட இருந்தார்கள்.

ஆபரேஷன் முடிந்து வந்த பின்பு ஊசியின் வீரியம் குறைய குறைய வலி என்னைக் கொல்ல ஆரம்பித்தது. அவ்வப்போது என் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தவள் என் கண்களில் என்ன படித்தாளோ தெரிய வில்லை, சரி நீங்க போய் சாப்டுட்டு எனக்கும் வாங்கி வந்துடுங்க என்று சொல்லி எல்லாரையும் துரத்தி விட்டு,என்னருகே வந்து கட்டிலில் உட்கார்ந்தவள் என்னப்பா ரொம்ப வலிக்குதா என்று என் கைகளை தன கைகளிற்குள் பத்திரப்படுத்திக் கொண்டு கேட்டாள்.

அவ்வளவுதான். அது வரை தாங்கிக் கொண்டிருந்த வலியை பொறுக்க முடியாமல் அப்படியே அவள் மடியில் சுருண்டுக் கொண்டு , முடியலைடா, ரொம்ப வலிக்குது என்று கண்களில் நீர் வழியச் சொன்னேன். ரொம்ப நாளைக்கப்புறம் நான் அழுதது அன்றுதான்.

வெட்கமில்லாம இன்னொருத்தர் முன்னாடி அழணும்னா அவங்க நமக்கு பிடிச்சவங்களா இருந்தா மட்டுமே சாத்தியம்.

அப்படியே அழுதவாறே எப்போ தூங்கிப் போனேன்னு எனக்கேத் தெரியாது. ஆனால் நான் விழிச்சப்பவும் என் கைகள் அவள் கைகளிற்குள்தான் இருந்தது.

இது மாதிரி பல நிகழ்ச்சிகள். பல தீண்டல்கள். எதுவுமே விகற்பமாய்த் தெரிய வில்லை.

ஒரு மழைக்கால மாலையில் எங்கேயோ போய்விட்டுத் திரும்பி வரும் வேளையில், திடீரென்று பிடித்த அந்த மழையில் எனது ஹெல்மெட்டையும், ஜெர்கினையும் அவளுக்குக் கொடுத்து விட்டு நான் நடுங்கிக் கொண்டே, அவளுக்குத் தெரியக் கூடாது என்று வண்டி ஓட்டி வர , ரொம்ப குளிருதாடா என்று அவள் என்னைக் கட்டிக் கொண்டது….

அதை நினைத்து அடுத்த நாள்,

உன்னிடமிருந்து மறைக்க வேண்டும்

என்று நினைத்து நான்

செய்யும் எதையும்

ஒற்றைப் பார்வையில

எப்படித்தான் கண்டு பிடிக்கிறாயோ?

கள்ளி! நீ

பெண்ணா? பிசாசா?

என்று எழுதித் தர, அதைப் படித்து விட்டு, நல்லா இருக்குடா! இதோட அர்த்தம் எனக்குப் புரியுது. ஆனா வெளில மத்தவங்கக்கிட்ட காட்டினீன்னா என்னப்பா, கவிதைல படிமங்களே இல்லைன்னு சொல்லுவாங்களே என்று நீ சொல்ல,

“நான் எங்கே கவிதையை எழுதினேன்? கவிதையைப் பற்றிதானே எழுதினேன்” என்று நான் சொல்ல வெட்கமாய் சிணுங்கி என் நெஞ்சில் குத்தியதில், உன் கண்ணாடி வளையல்கள் உடைந்து போனது,…

உன் அப்பாவிற்கு ஏதோ சீரியஸ் என்று அழுதவாறே நீ ஊருக்குக் கிளம்பிய போது, உன்னுடன் 8 மணி நேரம் பிரயாணம் செய்து உன் ஊர் வரை வந்து, உன் வீட்டுத் தெரு முனையில், “உங்கப்பாவுக்கு, ஒண்ணும் ஆகாது, தைரியமாய்ப் போ” என்று சொல்லி உன் நெற்றியில் முத்தம் கொடுத்து வழியனுப்பி விட்டு, அடுத்த பஸ்சை பிடித்து சென்னை வந்தது……

இருங்க இருங்க. இருங்க மை காட். என்ன சொன்னேன். “உன் நெற்றியில் முத்தம் கொடுத்து”. இதாங்க இதைத்தான் நான் காலைல இருந்து பைத்தியம் பிடிச்ச மாதிரி யோசிச்சுட்டிருக்கேன். எங்கள் இருவருக்கும் இடையேயான முதல் முத்தம் எது? எப்போது என்பதுதான்? அது இதுதான். இந்த சந்தர்ப்பத்தில்தான்.அப்பாடா… எதை எதையோ யோசிச்சு கடைசியா ஒரு வழியா கண்டு பிடிச்சாச்சு.

பின்ன, ஒருத்தரோட வாழ்க்கையில் முதல் முத்தம் என்பது மறக்கக் கூடியதா என்ன?

அன்னிக்கு லீவு போட்டு உக்காந்து யோசிச்சதுல இன்னொண்ணும் கண்டு பிடிச்சேன். “ஒண்ணுமே செய்யாம, இப்படி லீவு போட்டு முத்தத்தைப் பற்றி யோசிச்சுக்கிட்டிறதுல கூட ஒரு சுகம் இருக்கத்தான் செய்யுது”.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: