Posted by: shuhaib | 17/06/2010

அங்காடி தெரு – கஷ்டமாகும் வாழ்க்கை


இது அங்காடி தெரு விமர்சனமல்ல. கடைக்கோடி மக்களுக்கான பதிவு.

ஒருபதிவர்- அங்காடி தெரு திரைப்பட விமர்சனத்தில் – அண்ணாச்சிகளைபுறங்கணிப்போம் என்றார். சந்தோஷம். மற்றுமொரு பதிவர் – இனி இம்மாதிரியான கடைகளில் பொருள் வாங்க மாட்டேன் என்றார். ரெம்ப சந்தோஷமே. இதை- அவர்களிடம் நான் பிரசவ வைராக்யமாகவே பார்க்கிறேன்.

நான் பல வருஷங்களாக, சிறிய கடைகளில் தான் ஆடைகளை வாங்குகிறேன். இதை கொள்கையாகவும், அதற்கென்று நான் சில காரணங்களும் வைத்திருக்கிறேன். மாறி வரும் பொருளாதார சூழலில், என் எண்ணங்கள் கேலிக்குரியவையாகவோ அல்லது முட்டாள்தனமாகவோ கூட தோன்றலாம்.
ஆனால் எனக்கு – நான் செய்வது மிக சரியானவையாகவே தோன்றுகிறது. நான் ஒரு சிறு தொழில் செய்கிறேன். நான் – வேறு ஒரு சிறு வணிகரை ஊக்குவிப்பதன் மூலமே – நான் வாழ முடியும். அவர் என்னிடம் தொழில் புரிவதன் மூலமே – அவர் வாழ முடியும். இது ஒரு பண்ட பரிமாற்றம் போன்றதே.

காந்தியடிகள் சொன்ன கிராம பொருளாதாரமே இதன் அடிப்படையில் அமைந்தவை தான்.

நான் வேறு ஒரு சிறு வணிகரிடம் வர்த்தகம் செய்யாமல், போத்திஸ்க்கும், ஆலுக்காஸுக்கும் போனால்- என்னிடம் யார் வருவார்கள். ஏழை மேற் கொண்டு ஏழையாவான். பணக்காரன் மேற் கொண்டு பணக்காரன் ஆவான். பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆவதால் வரும் அனர்த்தமே – அங்காடி தெரு திரைப்பட காட்சிகள்.

ஒரு நிறுவனம் வளர, வளர – அது முதலில் தொலைப்பது மனித நேயத்தை தான். அவர்கள் கண் முன் தெரிவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது டார்க்கெட். அதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். சென்னையில் ஆட்களா இல்லை – வேலைக்கு. தென் தமிழகத்தில் இருந்து ஆட்களை தூக்கி கொண்டு ஏன் வருகிறார்கள். சென்னைவாசிகளை சக்கையாக கசக்கி பிழிய முடியாதே.

இந்தியாவுக்குள் பல இந்தியாக்கள் உள்ளன். தமிழகத்திற்குள் பல தமிழகங்கள் உள்ளன. அதிகப்பட்ச வசதிகளை பெற்ற பகுதி ஒரு பக்கம்… அடிப்படை வசதிகளை பெறாத பகுதி ஒரு பக்கம்… வளர்ச்சியடைந்த நாடுகளை நோக்கி வளர்ச்சியடையாத நாட்டை சேர்ந்தவர்கள் ஓடுவது போல் – தமிழகத்திற்குள்ளேயே இந்த ஓட்டம் நடக்கிறது. உள்ளுரை சேர்ந்தவன் லீவ் போடுவான் என்கிற காரணத்தினாலேயே வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வருகிறார்கள்.

படத்தின் நாயகன் கேட்கிறான், “ஒரு நாளாவது ஒழுங்காக தூங்க விட்டுருப்பிங்களாடா” என்று. யோசித்து பாருங்கள். அவன் காசு பணம் கேட்கவில்லை. “தூக்கத்தை தான்” கேட்டான். அதுவும் இரவு. எத்தனை சம்பாதித்தென்ன புரியோஜனம். தூங்க முடியாமல், சாப்பிட முடியாமல்… எனக்கும் இதே நிலைமை தான். இரவு பணி, கண் விழிப்பு – எல்லாமே கொடுமையான விஷயமே. சிறுநீர் கழிப்பதற்கு கூட எத்தனை அனுமதி வாங்க வேண்டி உள்ளது.

ஞாயிறு விடுமுறை அளிக்க வேண்டும் அல்லது வாரத்தில் ஏதாவது ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது அரசாங்க நியதி. இப்போது அதெல்லாம் காற்றில் பறந்து விட்டது. நாயகனும், நாயகியும் – அத்தனை கஷ்டப்பட்டும் என்ன புரியோஜனம். நாயகி காலை இழக்கிறாள். மிக சாதாரண வாழ்க்கை வாழவே எவ்வளவு போராட வேண்டி இருக்கிறது – பாருங்கள். நாயகனின் தோழனாக வரும் குண்டு பையன் மாரியை பாருங்கள். அதிர்ஷ்டக்காரன். சினேகாவிடம் வேலைக்கு சேருகிறான். நாயகனும், அவனும் ஒன்றாகவே தான் சென்னைக்கு வருகிறார்கள். இரண்டு பேரின் வாழ்க்கையும்
எவ்விதமாய் திரும்புகிறது – பாருங்கள். வருங்காலத்தில் -அந்த மாரியே
மற்றுமொரு அண்ணாச்சியாக உருவாகலாம். அப்படி உருவாகும் போது, முதலில் மறப்பது – தான் கஷ்டப்பட்டதையே.

புதிய பொருளாதாரம் – ஆயிரம் பேரின் தொழிலை கொன்று ஒரே ஒருவனை மட்டுமே வாழ வைக்கிறது. படத்தில் வருவது போல் – தகப்பனை இழந்த பிள்ளைகளோடு, குடும்ப பாரத்தை சுமக்க முடியாமல் கண்கலங்கும் குடும்பத் தலைவர்களுக்கும் குறி வைக்கிறார்கள்- முதலாளிகள். நண்பரின் நண்பர் ஒரு மளிகை கடை வைத்திருந்தார். அப்பகுதியில் மிகப் பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர் இரண்டு வந்ததில் வியாபாரம் பெருமளவு படுத்தது. பன்னாட்டு நிறுவனங்கள் – மோத விரும்புவது – மற்றொரு பன்னாட்டு நிறுவனத் தோடல்ல. சாமானியனின் கடைகளோடு. ரோட்டில் கீரை விற்று பிழைத்து,
அரை வயிறு உண்ணும் கீரை பாட்டியின் வயிற்றில் அடிக்கத் தான் அவர்கள்
விரும்புவது.

நண்பரின் கடையில் வியாபாரம் படுத்ததில் – கடையை எடுத்தார். சென்னையில் உள்ள ஒரு ஹோட்டல் பவனில், சில தெரிந்த அண்ணாச்சிகள் மூலம் வேலைக்கு வந்து விட்டார். வருமானம் பரவாயில்லை. ஆனால் அவருக்கு சர்க்கரை நோய் உண்டு. உணவு பிரச்சனையாக, ரெம்ப கஷ்டம் தான். “செத்தாலும் பரவாயில்ல. வருமானம் வருதுல. இருப்போம்” என்று ஒரு வைராக்கியத்தில் உள்ளார். சுலபமாக வாழ்ந்து மகிழ வேண்டிய வாழ்க்கையை, கஷ்டமாக்கி கொண்டு வாழ்வதாகவே தோன்றுகிறது.

90 களுக்கு முன் இவ்வளவு பெரிய வளர்ச்சி இருந்ததா. தொடர்ந்து ஒரே இடத்தில் குவியும் வேலை வாய்ப்புகள். அதனால் இடம் பெயரும் மக்கள், அதனால் விளையும் அனர்த்தங்கள்… பிளாட்பார வாசிகளின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்தும் இதனால் தான். அதன் விளைவு சாலையோர மரணங்கள்.

அங்காடி தெரு நாயகியின் தங்கைக்கு வயது பதிமூன்று. வீட்டுப் பணிப் பெண்ணாக… அந்த பெண் எந்த வயதில் வேலைக்கு வந்தாள். அந்த
பெண்ணுக்கு எழுதப் படிக்கவாவது தெரியுமா… அவள் வளர, வளர – அவளுக்கான தொல்லைகளும் வளருமே. கல்வியறிவு பெற்றவர்கள் என்று அரசாங்கம் தரும் புள்ளி விபரம் உண்மையற்ற தன்மையை கொண்டதாகவே உள்ளது. பத்து வயது வரை பள்ளிக்கு செல்பவன், பிறகு பள்ளிக்கே செல்லவில்லை என்றால், படித்ததை எல்லாம் மறந்தே போவான்.

இனி வருங்காலத்தில் கல்வியறிவு பெறாதவனால் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாதே. அது பற்றியெல்லாம் யாருக்கும் அக்கறை
இல்லை. பெற்றவர்களே சிந்திக்கவில்லையே. அவரவருக்குள் ஏதோ ஒரு சுயநலம். யார் எக்கேடு கெட்டு போனால் என்ன… நாம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்கிற மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அரசாங்கத்தால் இனி ஒரு போதும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாத சூழல்.

அதே நேரம், வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவதாக சொல்லும், பெரு நிறுவனங்களின் அராஜகத்துக்கு துணை போகிறது. அதிகப்பட்ச வளர்ச்சியை பெற்ற தேசம் – ஒரு பக்கம். அடிப்படை வசதியையே பெறாத தேசம் – மறு பக்கம். இது எங்கே கொண்டு போய் விடும். அச்சத்தை உண்டு பண்ணக்கூடிய எதிர்காலம். இருந்தாலும் – ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அங்காடி தெரு நாயகன், நாயகி போல…

இது அங்காடி தெரு விமர்சனமல்ல. கடைக்கோடி மக்களுக்கான பதிவு. சந்தோஷமான வாழ்க்கை அமைய பெற்றவர்களுக்கு- இந்த கடைக்கோடி மக்களின் வலி நிறைந்த வாழ்க்கை

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: