Posted by: shuhaib | 17/06/2010

கால்பந்தாட்டத்திலும் “கலக்கிய’ மகாத்மா காந்தி


தேசத்தந்தை மகாத்மா காந்தி, இரண்டு கால்பந்தாட்ட சங்கங்களையே உருவாக்கி கொடுத்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?

லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தி, தென்னாப்ரிக்காவுக்கு ஒரு வழக்கு விஷயமாக சென்றார். சென்றவர் அங்கு இந்தியர்களை வெள்ளையர்கள் அடிமைப்படுத்துவதை கண்டார். அதை எதிர்த்து, தன் அரசியல் சித்தாந்தமான சத்யாகிரக போராட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தினார்.அந்த சத்யாகிரகப் போராட்டத்தை மக்களிடம் பரப்புவதற்கு அவர் கால்பந்தாட்டத்தை பயன்படுத்தி கொண்டார். கிரிக்கெட் மீதும் அவருக்கு விருப்பம் உண்டு என்றாலும், அவர் கால்பந்தாட்டத்தையே பெரிதும் ஆதரித்தார்.கடந்த 1930 மற்றும் 1940ல் இனவாரியாகக் கிரிக்கெட் குழுக்கள் உருவாக்கப்பட்டு, மும்பையில் போட்டி நடந்த போது அதை கடுமையாக எதிர்த்தார். அவர் ஒரு தீவிர கால்பந்தாட்ட ரசிகர். அவர் அங்கிருந்த 1893-1915 காலகட்டத்தில், ஜோகன்னஸ்பர்க் மற்றும் டிரான்ஸ்வாலிலுள்ள ப்ரெட்டோரியா இரண்டு இடங்களில் கால்பந்தாட்ட சங்கங்களை ஏற்படுத்தினார். இரண்டு சங்கங்களுக்கும் “அகிம்சை போராளிகள்’ (பாசிவ் ரெசிஸ்டர்ஸ்) என்ற பெயரையே சூட்டினார்.

சத்யாகிரக பேரணிகள், கூட்டங்கள் நடத்துவதற்கு கால்பந்தாட்ட மைதானங்களை தான் அவர் பயன்படுத்தினார். தென்னாப்ரிக்காவிலிருந்த இந்தியர்கள் அவ்விளையாட்டில் ஈடுபட அவர் ஊக்குவித்தார். விளையாட்டு வீரர்கள் மத்தியில் அவர் அரசியல் பேசுவார். தென்னாப்ரிக்காவில் நிலவும் நிறவெறி பற்றி எடுத்துரைப்பார்.”அகிம்சை போராளிகளுக்கு இடையில் நடக்கும் போட்டியினால் அவர்கள் தொய்வடைவதில்லை’ என்று கால்பந்தாட்ட வீரர்கள் குறித்து அவர் கூறியுள்ளார். காந்தி உருவாக்கிய சங்கங்கள்தான் தென்னாப்ரிக்காவில் முதன்முதலாக வெள்ளையர்கள் அல்லாதவர்களால் நடத்தப்பட்ட சங்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு விளையாட்டு அரசியலுக்கு பயன்பட்டதும் அதுதான் முதன்முறை.

காந்தியின் சங்கங்கள் குறித்து, மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் ஆப்ரிக்க வரலாற்று பேராசிரியராக இருக்கும் பீட்டர் அலேகி, “ஆப்ரிக்க கண்டத்தில், முதன் முதலாக வெள்ளையர்களால் நடத்தப்படாத கால்பந்தாட்ட சங்கம் அது தான்’ என்கிறார்.காந்தி 1920ல் இந்தியா திரும்பியபின், தென்னாப்ரிக்காவில் அவர் தொடங்கிய சங்கங்களின் செயல்பாடுகள் நலியத் தொடங்கி 1936ல் மறைந்து விட்டன. இருப்பினும் அவர் கால்பந்தாட்டத்துடன் ஆன தன் தொடர்பை விட்டு விடவில்லை. 1921 மற்றும் 1922களில் தென்னாப்ரிக்கா கால்பந்தாட்டக் குழு இந்தியாவுக்கு வந்த போது, அதற்கு தன் ஆசிகளை தெரிவித்தார்.

காந்தியின் நெருங்கிய நண்பரான சி.எப்.ஆண்ட்ரூஸ், அக்குழுவின் பயண ஏற்பாடுகளுக்கு உதவினார். அக்குழு மும்பை, டில்லி, சென்னை மற்றும் கோல்கட்டா இடங்களில் 14 போட்டிகளில் கலந்து கொண்டது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் அக்குழு ஓய்வுக்காக தங்கியிருந்தபோது, காந்தி அதனுடன் தன் நேரத்தை செலவிட்டுள்ளார். இப்போது தென்னாப்ரிக்க கால்பந்தாட்ட குழுவில், இந்தியர்கள் யாரும் இல்லை என்றாலும், அக்குழுவுக்கு அடித்தளமிட்டது தேசத்தந்தை மகாத்மா காந்தி தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.


Leave a comment

Categories