Posted by: shuhaib | 20/06/2010

Y2K நெருப்பும், தொடரும் புகைமூட்டமும்


எனக்கு பள்ளியில் அறிவியல் என்றாலே காத தூரம் ஒட்டம் தான். என் நண்பன் சந்தோஷுக்கு தமிழ். ஐந்தாம் வகுப்பில் தமிழ் ஆசிரியையின் கொண்டையில் வெடிகுண்டு சொருகும் திட்டம் ஆரம்பநிலையிலேயே தோல்வி அடைந்தபோதிலும் அவன் எங்கள் பள்ளியில் மிகப்பிரபலம்.

“நம்ம தமிழ் வாத்தியாருக்கு செம சயின்ஸ் நாலெட்ஜ்டா”

“யாரு… கப்பலோட்டிய தமிழனா?”

“அதென்ன கப்பலோட்டி?”

“அப்புறம் சொல்றேன்”

எட்டாம் வகுப்பு தமிழ் வாத்தியார் மீது எனக்கு அபார மதிப்பு. அறிவியலை எளிமையாக விளக்குவதில் அவருக்கு நிகர் அவர்தான். சந்தோஷுக்கு அவர் மேல் பெரிதாக மரியாதையில்லை.

அந்த நாளின் முதல் வகுப்பு அறிவியல். அடுத்த வகுப்பு தமிழ். என் தொல்லை ஒழிந்து, சந்தோஷின் தொல்லை ஆரம்பமானது. இன்று எப்படியும் தமிழ் வகுப்பின் அறிவியல் பிரிவு இருக்கும். சந்தோஷ் தமிழ் வாத்தியாரின் அறிவியல் திறனைச் சோதித்துவிட முடிவு செய்து எழுந்தான்.

“சார்… ஒரு டவுட்”

“என்னடா?”

“ரத்த வகையெல்லாம் எப்பிடிப் பிரிக்கிறாங்க சார்? ஓ பாசிட்டிவுக்கும் ஏ.பி பாசிட்டிவுக்கும் என்ன சார் வித்தியாசம்?”

நான் குதுகலித்தேன். ஒரு சந்தேகம் தீரப்போகிறது. நிமிர்ந்து அமர்ந்துகொண்டேன். வாத்தியார் இதை எதிர்பார்க்கவில்லை. அவனை சிறிது நேரம் உற்று நோக்கியபடி இருந்தார். பின் ஒருவாறு சமாளித்து,

“அதொண்ணுமில்ல… தயிருக்கும் மோருக்கும் இருக்கிற வித்தியாசம் தான்… எல்லா ரத்தமும் ஒண்ணுதான்.”

“ஆனா வேற வேற ரத்தம் ரெண்டும் சேர்ந்துட்டா எயிட்ஸ் வரும்னு சொல்றாங்களே?”

இதையும் வாத்தியார் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அசரவில்லை. தொடர்ந்தார்.

“எய்ட்ஸெல்லாம் சும்மா… சங்க காலத்திலிருந்தே அதுக்கு மருந்திருக்கு…”

நான் நம்பவில்லை. இவர் சொல்வது எவ்வளவு உண்மை? மீண்டும் கேள்வி கேட்க நான் கேட்க துணியவில்லை. ஆனால் இதற்கும் அவரிடம் ஒரு பதில் இருக்கும். இம்முறை நிச்சயம் லெமூரியாவை துணைக்கழைப்பார்.

“சரி சார்”, அமர்ந்த சந்தோஷ் என்னை பார்த்து நமட்டாகச் சிரித்தான். “இப்போ புரியுதா…. கப்பலோட்டினா என்னன்னு?”

புரிந்தது.

வெகுஜன மக்கள் பொதுவாக எந்த ஒரு விஷயத்தையும் எளிமைப்படுத்திச் சொல்வதையே விரும்புகிறார்கள். இதன் முக்கிய விளைவு? துறைசார் அறிவு, துறை சாராதவர்களிடமிருந்து பெறப்படும் நிலை. உதாரணம் : இனம்/இந்திய வரலாறு குறித்த பாடம் எடுத்த அரசியல்வாதிகள், சினிமா உட்பட அனைத்தும் அறிந்தவனாக அறிவித்துக் கொள்ளும் கலைஞானிகள், விஞ்ஞானத்துடன் இணைத்துக் கொண்ட மதவாதிகள். இப்படி நீண்டபடியே இருக்கிறது இந்த பட்டியல். இதனால் சொல்பவர்களுக்கு காலப்போக்கில் ஒரு ஒளிவட்டமும், அதிகார பீடமும் நிச்சயம்.

இந்தியாவில் மட்டுமல்ல முன்னேறிய சமூகங்களாக அறிவித்துக் கொண்டவற்றிலும் இது நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் ஒரு மதவாதி, உலகம் சரியாக எத்தனை மணிக்கு, எந்த வருடத்தில் “உருவாக்கப்பட்டது” என்பதைக் கூரை ஏறி ”விஞ்ஞானரீதியாக”(?!) அறிவித்தார். அவர் வாழ்ந்த சமூகம் அவரைக் கொண்டாடியது.

வெகுஜன மக்களின் அறிவுத்தேட்டை, அதற்கான முனைப்பு அனைத்து சமூகங்களிலும் குறைவாகவே காணப்படுவதே இதற்கான காரணம். இதனால் அவர்களை ஓரேயடியாக சோம்பேறிகள்/முட்டாள்கள் என்று அழைத்துவிட முடியாது. ஒவ்வொரு நாளைக்கான இருப்பிற்காக உழைக்கவேண்டியவர்கள், தங்களுக்கான வசதியான ஒரு வட்டத்தைக் கண்டடையவே முனைவர். அந்த வட்டத்துள் சுழல்வதில் அவர்களுக்கு எந்தத் துன்பமும், தயக்கமும் இருப்பதில்லை. மேலும், அவர்கள் தங்களுக்கான செயல்பாடுகளை தாங்கள் இதற்கு முன் எதிர்கொண்ட சூழல், அதன் தன்மை, முந்தைய செயல்பாடுகளின் விளைவு, ஆகியவற்றை முன்வைத்தே தீர்மானிப்பர். “சாதாரண சூழலில் மட்டுமல்ல ஒரு பேரழிவை எதிர்கொள்ளும் போதும், தனிமனிதன் மட்டுமல்ல, மொத்த சமூகமும் இயங்குவது இப்படித்தான்” என்கிறார்கள் எய்டன் டேவிஸன் மற்றும் ஜான் பில்லிமூர். Y2K என்றறியப்பட்ட ஒரு கணினிப் பிழை மீது குவிந்த உடனடி கவனமும், அதைத் தொடர்ந்த நடவடிக்கையும், அதைவிட அதிமுக்கிய பிரச்சனையான பூமி சூடேற்றம் குறித்த விவாதத்திற்கு வாய்க்கவில்லை. இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர உலக சமூகங்களுக்கு சில காலம் பிடித்தது. இந்த வேறுபாடு ஏன்? இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் என்ன? சமூகம் எப்படி இயங்குகிறது? இக்கேள்விகளுக்குத் தங்களால் முடிந்த பதிலை அளிக்கிறார்கள் இவ்விரு ஆய்வாளர்களும்.

1993-ஆம் ஆண்டு பீட்டர் எனும் தொழில்நுட்ப ஆலோசகர் “அழிவின் வருடம் 2000” எனும் கட்டுரையை எழுதினார். இக்கட்டுரை வெளிவந்த சில மாதங்களில் அமெரிக்க செனட்டரான டானியல் பாட்ரிக் மொய்னிஹான் (Daniel Patrick Moynihan) அப்போதைய அமெரிக்க அதிபரான பில் கிளண்டனுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இச்சிக்கலை விவரித்து, அதைத் தீர்க்கும் பொறுப்பை “ராணுவத்திடம் ஒப்படைக்க’ வேண்டினார். அவ்வளவு தான். Y2K காட்டுதீயென உலகம் முழுதும் பரவியது. ஒவ்வொரு நாடும், பெரு நிறுவனங்களும், “பிரச்சினை தீர வேண்டும். அவ்வளவுதான். மலையை நகர்த்தக் கூட நாங்கள் தயார்” என்று தொடை தட்டி எழுந்தன. உலகெங்கும் பணம் வெள்ளமென பாய்ந்தது. இது அனைத்தும் விஷயம் வெளியான சில வருடங்களில் நிகழ்ந்தன.

ஆனால் பூமி சூடேற்றம் மனித குலத்திற்கே உலை வைக்கும் சிக்கல். இது குறித்துப் பல வருடங்களாகப் பேசப்பட்ட போதும், ஒரு சிலரைத் தவிர, எந்த சமூகமும் இதற்காகப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. உலக நாடுகள் பலவும் தயங்கித் தயங்கி இப்போதுதான் இது குறித்த நடவடிக்கை எடுக்க ஒன்று கூடிப் பேசிவருகின்றன. ஏன் இந்தக் கால இடைவெளி? ஏன் இந்தத் தயக்கம்?

எய்டன் டேவிஸன் மற்றும் ஜான் பில்லிமூர் என்ற இரு ஆஸ்திரேலிய சூழலியல் ஆய்வாளர்கள் இதற்கான காரணங்களை அறிய முயன்றனர். இந்த ஆராய்ச்சியாளர்களின் கூற்றின்படி :

– நம் அரசியல் அமைப்புகள் வெகு நாள் நிலவக்கூடிய சிக்கல்களை எதிர்கொள்வதை விட, இத்தகைய குறுகிய கால அளவுடைய சிக்கல்களை மிக திறமையாக எதிர்கொள்கின்றன. Y2K சிக்கல் ஒரு அறுதியான கால அளவைக் கொண்டது. வருடம் 2000-த்தின் முதல் நாளுடன் இந்த சிக்கல் தீர்ந்துவிடும். மீண்டும் மீண்டும் நிகழக் கூடியதல்ல. ஆனால், பூமி வெப்பமடையும் இந்த சிக்கலுக்கான தீர்வை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் வகுக்க முடியாமல் போகிறது. ஏனெனில் தற்போது முன்மொழியப்படும் “தீர்வு” உண்மையில் ஒரு “முன்னெச்சரிக்கை நடவடிக்கை” மட்டுமே. ஒரு தீர்க்கதரிசனம் சார்ந்த  முன்னெச்சரிக்கை நடவடிக்கை. “இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து எத்தனை நாட்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்?” என்ற கேள்விக்கு உறுதியான பதில்கள் முன்வைக்கப்படவில்லை. மேலும், Y2K சிக்கல் தீர்ந்த பின்பு, எதிர்பாராத பல நன்மைகள் கிட்டின. அனைத்து நாடுகளின் அரசியல் அமைப்புகளும் தங்களின் அடிப்படைக் கட்டுமான அமைப்புகளை (தகவல் தொடர்பு, தொழில்நுட்பம், இத்தியாதி) தூசி தட்டி வைத்துக் கொண்டன. சிக்கலான தருணங்களை எதிர்கொள்ளும் திறனை அவர்களை அறியாமலே அடைந்து விட்டிருந்தன. இந்தியாவைப் பொருத்தவரை, “அவுட்சோர்சிங்” துறை கொடிகட்டி பறந்தது. ஆனால், ”புவி வெப்பமடைதலைத் தடுக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து எத்தகைய பலன்கள் கிட்டும்? வாழ்க்கை முறையின் மாற்றம் நம்மை மேம்படுத்துமா?” போன்ற கேள்விகள் தொக்கி நிற்கின்றன.

– ஒரு சிக்கலின் தீர்வுக்கு அச்சமூகம் தரவேண்டிய விலை குறித்த கேள்வியும் அரசியல் அமைப்புகளைப் புவி வெப்பமடையும் சிக்கலில் இருந்து தள்ளி நிற்க வைத்தது. Y2K சிக்கல், மொத்தத்தில் ஒரு “வடிவமைப்பு பிழை”(design error). இதன் தீர்வு, அதிகபட்சமாக வன்பொருள்/மென்பொருள் மாற்றத்தைக் கோரி நின்றது. ஆனால், பூமி சூடேற்றத்தின் தீர்வு ஒட்டுமொத்த மனித சமூகத்தின் வாழ்க்கை முறையை மாற்றக் கோருகிறது. ஒரு சமூகத்தின் இருப்பிடத்தை, அதன் உணவை, அதன் மொத்த நடவடிக்கைகளை மாற்றக் கோருகிறது. மொத்தத்தில், நாகரீக யுகத்தின் அனைத்துக் கூறுகளையும் விவாதத்திற்குள் இழுக்கிறது. இந்த மாற்றத்தை நோக்கி தன் சமூகத்தைத் தயார் செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு அரசியல் அமைப்புகளின் மேல் விழுகிறது. இத்தகைய பொறுப்புகளை இவ்வமைப்புகள் விரும்புவதில்லை.

ஆனால் கடந்த சில வருடங்களாக இந்தக் குழப்பங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு, அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து, புவி வெப்பமடைவதைத் தடுக்க முயன்றுள்ளன. நல்ல விஷயம். சமூகம் செயல்படும் முறையை, தத்துவம்/அறிவியல்/மதம்/மானுடவியல்… இப்படிப் பல வழிகளில், மனித குலம் வகுத்துக் கொள்ள முயன்றபடி உள்ளது. ஆனால் இதுவரை யாராலும் முழு வெற்றி அடைய முடிந்ததில்லை. குறைந்தபட்சம், உலக முழுமைக்கும் பொருந்தும் ஒரு கோட்பாடு கூட நான் அறிந்தவரை முன்வைக்கப்படவில்லை. ஆயினும், சமூகத்தின் இயக்கங்கள் சுவாரஸ்யமானவை. அதுவும் கடந்த கால சமூகத்தை ஆராய்ந்து பாடங்கள் கற்பது அதை விட சுவாரஸ்யமானது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: