Posted by: shuhaib | 21/06/2010

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்!


ஏகாதிபத்திய வெள்ளையர்களின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த இந்தியா, சுதந்திரக்காற்றைச் சுவாசித்து 61 வருடங்கள் கடந்து விட்டன. இன்று இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு 61 -வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில், இந்தியச் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அந்தத் தியாகிகளின் ஈடு இணையற்றச் செயல்பாடுகளை நினைவு கூர வேண்டியது அவசியமாகும்.

இன்று சுவாசிக்கும் இந்தச் சுதந்திரக்காற்று அவ்வளவு எளிதாக கிடைத்து விடவில்லை. வியாபாரத்திற்காக நாட்டில் நுழைந்த வெள்ளை ஏகாதிபத்திய வெறியர்கள், உள்நாட்டு பிரச்சனைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நாட்டை தங்களின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். தாய்மண்ணை ஆக்ரமித்துள்ள அந்நியர்களிடமிருந்து நாட்டை மீட்க இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்துப் போராடினர். தேச விடுதலை என்று வரும் போது அதில், ஜாதி, மதம், இனம் என்பதற்கெல்லாம் இடம் இல்லை. வெள்ளையன் வருகைக்கு முன்னர் பல்வேறு இன, மொழி மக்களாகப் பிரிந்து வாழ்ந்திருந்த இந்தியர்கள், வெள்ளையனை எதிர்க்க, தங்களிடையிலான அனைத்து வேற்று விருப்பு, வெறுப்புகளையும் களைந்து ஓரணியில் நின்றுப் போராடினர். எனினும் எப்பொழுதும் போல் அற்பக் காசிற்காகவும் அடிமைப் பதவிக்காகவும் விலைபோன சில துரோகிகளும் நாட்டில் இருக்கவே செய்தனர்.

அனைத்துப் பிரச்சனைகளையும் எதிர்கொண்டு இறுதியில் வெள்ளையனை நாட்டை விட்டு விரட்டி, 15 ஆகஸ்ட் 1947 அன்று இன்பமான சுதந்திரக்காற்றைச் சுவாசித்தனர் மக்கள். வெள்ளையன் நாட்டை விட்டு வெளியேறிய நிமிடத்திலிருந்து அதுவரை மறைமுகமாக இருந்து சதிராடிய மற்றோர் எதிரியை.. இல்லை… துரோகியைச் சமாளிக்க வேண்டிய நிலைக்கு இக்கட்டான நிலைக்கு நாடு வந்து விட்டது. ஆனால் உள்ளுக்குள்ளே வளர்ந்து வந்த அந்த எதிரியைக் குறித்தத் தெளிவான சிந்தனை இன்மையோ என்னமோ நாடு அந்தத் துரோகிகளைச் சரியாகக் கவனிக்கத்தவறி விட்டது. அதன் விளைவை நாடு சுதந்திரம் அடைந்த ஒரு வருடத்திலேயே பெற ஆரம்பித்து விட்டது.

ஆம்… சுமார், 35 வருட காலம் வெள்ளையனை எதிர்த்து அவனின் அடக்குமுறை அடிமை ஆட்சியில் போராடி வந்தத் தேசத்தந்தை எனப் போற்றப்படும் மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற காந்தியடிகள், சுதந்திர இந்தியாவில் ஒரு வருட காலம் கூட உயிரோடு வாழ இயலாமல் போனது. இந்த ஒன்று மட்டுமே துரத்தப்பட்ட எதிரியை விட, அழிக்கப்பட வேண்டிய துரோகியின் வலிமையையும் வெறியையும் பறை சாற்றும். அப்பொழுதும் அந்தத் துரோகியினால் நாடு எதிர்கொள்ளப் போகும் பிரச்சனைகளைச் சரியாக உணர்ந்து நடவடிக்கை எடுக்கப்படாததன் விளைவு இன்று நாடு அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.

இந்தத் துரோகிகளின் சதி வேலைகளினால் மிகக் கொடூரமாகப் பாதிக்கப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்களும் முஸ்லிம்கள் தான். இந்தியச் சுதந்திரத்திற்குத் தனது சதவிகிதத்தையும் மிஞ்சும் விதத்தில் உயிர்களையும் உடமைகளையும் தியாகம் செய்த இஸ்லாமிய சமுதாயம், இன்று இந்தத் துரோகிகளின் கைங்கர்யத்தால் நாட்டின் தேசிய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்டு இரண்டாந்தரக் குடிமக்களை விடத் தரம் தாழ்த்தப்பட்டவர்களாக, தேசவிரோதிகளாகச் சித்தரிக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டுள்ளனர்.

அன்று நாட்டு மக்களுடன் ஒரே அணியில் இணைந்துச் சுதந்திரத்திற்காகப் போராடிய முஸ்லிம் சமுதாயம், இன்று எதுவுமில்லாதவர்களாக அரசு, அதிகாரம், நீதி, கல்வி, பொருளாதாரம் என அனைத்திலும் ஒதுக்கப்பட்டுப் பிந்தங்கிவர்களாக நாட்டின் விரோதிகள் போன்று சித்தரிக்கப்பட்டு பலிகடாவாக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதே நேரம், அன்று நாட்டு மக்கள் ஒரே அணியில் நின்று வெள்ளையனை எதிர்த்துப் போராடிய வேளையில், சுதந்திரப்போராட்டத்திலிருந்து விலகி நின்று வெள்ளையனுக்கு வெண் சாமரம் வீசியர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் காட்டிக் கொடுத்தவர்கள், கேவலமான அடிமை பதவிகளுக்காக அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சிக் கட்டிலிலும் அதிகார இடங்களிலும் ஏன் பாராளுமன்றத்தில் சிலை வைத்து மதிக்கப்படுவது வரை அதிகாரங்களின் உயர் இடங்களை ஆக்ரமித்து அமர்ந்து கொண்டு தேசப்பற்றாளன் வேடம்பூண்டு, சுதந்திரத்திற்காகத் தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அர்ப்பணித்த முஸ்லிம் சமுதாயத்தை அடக்கி, ஒடுக்குகின்ற அவலநிலை. சுதத்திரத்திற்கு வாளேந்தி மடிந்தச் சமுதாயத்தின் சந்ததியினர் வாழ்வுரிமை கேட்டு வீதியில் நிற்கும் அவலம் உலகில் இங்கு மட்டுமே காணக்கிடைக்கும் அதிசயமாகும்.

“தன் வரலாற்றை அறியாத சமுதாயம் வரலாற்றிலிருந்தே துடைத்தெறியப்படும்” என்பதற்கு இந்திய முஸ்லிம் சமுதாயத்தைச் சரியான உதாரணமாக கூறலாம். கடந்த 60 ஆண்டு காலமாக தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்துக் கொள்ளாமல், வெள்ளையனின் தொடையப் பிடித்து விட்டு அற்ப வாழ்வு வாழ்ந்த துரோகிகளின் சதிப்பிரச்சாரத்தில் இஸ்லாமிய சமூகமும் கட்டுண்டுத் தன்னைத் தானே தேசிய நீரோட்டத்திலிருந்து விலக்கிக் கொண்டு விட்டது. கோயபல்ஸின் தத்துவத்தைச் சரியாகக் கடைபிடித்து, முஸ்லிம்கள் இந்த நாட்டிலேயே வாழத்தகுதியற்றவர்கள் என்ற ஒரு மாயையை முஸ்லிம்களின் மனதிலேயே இந்தப் படுபாவி துரோகிகள் விதைத்து விட்டனர். இதற்கானக் காரணம், தாய் நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றையும் அதில் தனது சமுதாய வேங்கைகள் செய்தத் தியாகங்களையும் இந்தப் பரிதாபகரமான முஸ்லிம் சமுதாயம் சரிவர அறிந்துக் கொள்ளாமையே ஆகும். நாட்டைக் காட்டிக் கொடுத்தத் துரோகிகளின் திட்டமிட்ட வரலாற்று இருட்டடிப்பே இதற்கும் காரணம்.

“ஆதவனைக் கரம் கொண்டு மறைத்து விடலாம்” என்று, கிழக்கிந்திய கம்பெனிக்குக் கிஸ்தி வசூலித்து தந்து அதன் மூலம் சுகபோகம் அனுபவித்த அந்தத் துரோகிகள் நினைக்கலாம். ஆனால் எப்படி “ஆயிரம் கரம் கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லையோ” அதே போன்று, இந்திய மண்ணுக்காக இந்தச் சமுதாயம் செய்த தியாகங்களும் மறையப்போவதில்லை. இந்திய மண்ணின் கடைசி இஸ்லாமியர் இருக்கும் வரை இந்தியாவின் விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள் மறையாது; மறையவும் கூடாது.

அதற்காக, இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்களுக்கும் மிகச்சிறந்த பங்குண்டு என்றச் சத்தியத்தையும் இன்று தேசப்பற்றாளர்களாக நாட்டுக்குச் சொந்தம் கொண்டாட உரிமை கொண்டவர்களாகக் காட்டிக் கொண்டு வலம் வரும் துரோகிகளின் வரலாற்றையும் ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். எவ்வளவு தான் வரலாற்றை மறைத்தாலும் மைசூர் வேங்கை திப்பு சுல்தான், கான் அப்துல் கபார் கான் போன்றவர்களை வரலாற்றால் மறைக்க முடியவில்லை. நாடு பிரிக்கப்பட்டபோது “என் நாட்டை விட்டு நான் எங்கும் செல்ல மாட்டேன்” என்ற தேசப்பற்றோடு உறுதியான முடிவெடுத்த அபுல் கலாம் ஆசாத் போன்ற முஸ்லிம் தலைவர்களைத் துரோகிகளின் வஞ்சகத் திட்டங்கள் மக்கள் மனதிலிருந்து கிள்ளி எறியச் செய்ததை இனிமேலும் அனுமதிக்க இயலாது.

நாட்டு விடுதலைக்காகப் போராடிய பல இஸ்லாமிய தலைவர்கள், நவாப்புகள், போர் வீரர்கள் பெயர்கள் இன்று வாய்வழியாக முஸ்லிம்களுக்குத் தெரிந்தாலும் இந்திய வரலாறு துல்லியமாக தொகுக்கப்படாத காரணத்தால் பல முஸ்லிம்களின் ஈடு இணையற்றத் தியாகங்கள் மறைந்து விட்டது என்றே கூறலாம். ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிரி மக்கி போன்றோர் இன்றும் நினைவு கொள்ளத்தக்கவர்கள். அவர் ஷம்லி என்ற இடத்தில் பிரிட்டிஷார்களை ஓடச் செய்தார். அடக்குமுறைகளையும் அக்கிரமங்களையும் எதிர்ப்பதை அடிப்படை கடமையாக இஸ்லாம் போதிப்பதால் அதை பின்பற்றும் இஸ்லாமிய பெருமக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போரிட்டதில் வியப்பு ஏதும் இல்லை. ஷா வலியுல்லாஹ் மற்றும் ஷாவலியுல்லாஹ் தெஹ்ல்வி ஆகியோரும் பிரிட்டிஷாருக்கு எதிரான புரட்சிக்குத் தலைமை தாங்கி போராடி வீர மரணம் எய்தியவர்கள் ஆவர். இதை பிரிட்டிஷ் தரைப்படை தளபதி தாம்சனே குறிப்பிட்டுள்ளார்.

“ஹுஜ்ஜத்துல்லாஹி பலிகா” என்ற நூலில், “விடுதலை உரிமை, நம் நாட்டு சொத்து மீதான பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும்” ஷா வலியுல்லாஹ் எழுதினார். இவரது மகன் அப்துல் அஜீஸ் தெஹ்லவி ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிரான “பத்வா”க்களை (தண்டனை பேராணை) பிரயோகித்தார். விடுதலைப் போர் துவங்கவும் “பத்வா” அறிவிக்கப்பட்டது.

சையத் அஹ்மத் ஷஹீத்(1831) என்ற மார்க்க அறிஞரான இவர், உ.பி., ரேபரேலியின் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் எல்லைப் புறத்தில் தற்காலிக சுதந்திர அரசை துவக்கினார். அது பல ஆண்டுகள் நீடித்தது. தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் முஜாகிதீன்கள் உதவியுடன் சுதேசி பட்டான் படை என்ற பெயரில் பலகோட் போர்க்களத்தில் பிரிட்டிஷாரை வீரமுடன் எதிர்த்து 300 இஸ்லாமியர்கள் உயிர்த்தியாகம் செய்தார்கள். “சாதிப்பூர்உலமா” இந்தப் படைக்குத் தலைமை தாங்கினார். 1845 முதல் 1871ம் ஆண்டு வரை இவர் பிரிட்டிஷாருக்கு எதிராக போர் புரிந்தார்.

மாவீரம் கொண்ட”மவ்லவிகள்’ என்று கேட்டாலே பிரிட்டிஷார் நடுங்கினார்கள். தேசவிரோதிகள், “சிப்பாய் கலகம்” என்று மிகக் குறுகிய அளவில் சுருக்க முனையும், 1857ம் ஆண்டில் நடந்த முதல் சுதந்திரப் போரின் போது, 34 உலமா (இஸ்லாமிய மத சட்ட அறிஞர்) பிரிட்டிஷாருக்கு எதிராக பத்வா அறிவித்தார்கள். மவுலானா காசிம், மவுலானா ரஷீத் அகமது மற்றும் ஹபீஸ் ஜமீன் உள்ளிட்ட உலமாக்கள் போர்க்களத்திலேயே மடிந்தார்கள். முதல் சுதந்திரப் போர் சமயத்தில் 51 ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் தங்கள் இன்னுயிர் ஈந்திருக்கின்றனர். தலைநகர் டில்லியில் மட்டுமே 500 உலமாக்கள் வீரமரணம் அடைந்தார்கள். குறுநில அரசான “அவுத்’தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதைப்பார்த்த உருது கவிஞர் மிர்ஸா காலிப், “என் முன்னால் ரத்த ஆறு ஓடியதைப் பார்த்தேன். ஒவ்வொருவரும் கொல்லப்படுவதைப் பார்த்தேன். மற்றொருபுறம் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதை பார்த்தேன்” என்று எழுதினார். ஒரு விதத்தில் இந்த முதல் இந்தியச் சுதந்திரப் போருக்குக் காரணமானவர்களே முஸ்லிம்கள் தான் எனலாம். இதன் காரணத்தாலேயே துரோகிகள், மக்கள் மனதில் இப்போராட்டத்தைக் குறித்தச் சிந்தனை எழாமல் இருப்பதற்காக இதனைச் “சிப்பாய் கலகம்” என்ற சொல்லோடு ஒதுக்க முனைந்தனர்.

இவ்வாறு இந்தியாவின் சுதந்திரப்போராட்டத்திற்கான வித்துக்களைப் பாவியதிலிருந்து நாடு விடுதலை அடைவது வரை ஒரு சமுதாயம் முழுமையாகக் களமிறங்கிப் போராடியது என்றால், அது முஸ்லிம் சமுதாயம் மட்டுமேயாகத் தான் இருக்கும். இப்படிப்பட்ட மிகப்பெரும் தியாகத்திற்குச் சொந்தக்காரர்களான முஸ்லிம் சமுதாயத்தைத் தான் இன்று தேசவிரோதிகளாக, நாட்டைக் காட்டிக் கொடுத்தக் கைகூலிகள் என ஏளனம் செய்கின்றனர். இவர்களின் இத்தீயப் பிரச்சாரத்திற்குப் பலியான மக்களுக்கும் வரலாற்றை மறந்த இந்த முஸ்லிம் சமுதாயத்திற்கும் ஒரு நினைவூட்டலுக்காகவேனும் நாட்டு விடுதலை வரலாற்றையும் அதில் முஸ்லிம்களின் பங்கையும் சற்று விரிவாகக் காண வேண்டியது அவசியமாகிறது. வரும் அத்தியாயங்களில் அதனைக் காண்போம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: