Posted by: shuhaib | 04/07/2010

தாக்கு பிடிக்க முடியுமா? உச்சத்துக்கு போனது பெட்ரோல் விலை


மீண்டும் ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி, இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் ஒட்டு மொத்த வயிற்று எரிச்சலையும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.

இந்தாண்டில் மட்டும், இதுவரை மூன்று முறை பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2004ல் ஐ.மு., கூட்டணி அரசு பொறுப்பேற்றதில் இருந்து, இதுவரை பத்துக்கும் மேற்பட்ட முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முறை பெட்ரோல், டீசல், சமையல் காஸ், கெரசின் விலையை உயர்த்தியதோடு, போனசாக பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பையும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கி, பொதுமக்களை புலம்ப விட்டுள்ளது, மத்திய அரசு. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால், முடங்கிப் போயுள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்கள், தற்போது பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், நிலைகுலைந்து போயுள்ளனர்.

கச்சா எண்ணெய் உயர்வு காரணமாம்! பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் போதெல்லாம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதால், உள்நாட்டிலும் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த வேண்டியுள்ளது என, காரணம் கூறி வருகிறது அரசு. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, பேரலுக்கு 76 முதல் 80 அமெரிக்க டாலராக உள்ளது. ஆனால், பெட்ரோல் உற்பத்தி விலையை விட, இந்தியாவில் அதன் விற்பனை விலை மிக குறைவாக உள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுகிறது. பெட்ரோல், டீசல், சமையல் காஸ் உள்ளிட்டவை மானிய விலையில் மக்களுக்கு அளிக்கப்படுவதால், 2009-10ம் ஆண்டில் மட்டும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு 46 ஆயிரத்து 50 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய வேண்டுமெனில், பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த வேண்டியது அவசியம். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

உண்மையில் நஷ்டமா? இதுகுறித்து பெட்ரோலிய சந்தை நிலவரத்தை கூர்ந்து கவனித்து வரும் நிபுணர்கள் வேறு மாதிரியான கருத்தை தெரிவிக்கின்றனர். அவர்கள் கூறுவதாவது: ஒரு லிட்டர் பெட்ரோல் தயாரிப்பதற்கு 20 ரூபாய்க்கும் குறைவாகவே செலவாகிறது. இதற்கு பின், பெட்ரோலுக்கு ஏராளமான வரிகளை விதித்து, அதை பொதுமக்களின் தலையில் கட்டி விடுகின்றனர். இந்த வரிகளில் சிறிய அளவை மானியமாக அளிக்கின்றனர். இதன்படி பார்த்தால், மானியத்தால் ஏற்படும் நஷ்டம், லாபத் தொகையில் இருந்து கழிக்கப்பட்ட நஷ்டமாக இருக்குமே தவிர, ஒட்டு மொத்த நஷ்டமாக இதை கருத முடியாது. இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.

வறுமையில் 40 கோடி மக்கள்: இந்தியாவைப் பொறுத்தவரை 41 கோடி மக்கள், ஒரு நாளைக்கு 55 ரூபாய்க்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். இது ஒட்டு மொத்த மக்கள் தொகையில் பாதி அளவு. இவர்களின் நிலையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், சர்வதேச சந்தை, கச்சா எண்ணெய் விலை உயர்வு, எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் என காரணம் கூறுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்பது, சராசரி இந்திய மக்களின் நியாயமான கவலையாக உள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள்: இந்தியாவில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தான், பொதுமக்களின் பெட்ரோல், டீசல் தேவையை பூர்த்தி செய்கின்றன. பெட்ரோலிய பொருட்களை மானிய விலையில் விற்பதால், தங்களுக்கு பெருமளவில் இழப்பு ஏற்படுவதாக இந்நிறுவனங்கள் கவலை தெரிவிக்கின்றன. இதற்காக, எண்ணெய் நிறுவனங்களுக்கு, அரசு முதல் கட்டமாக ஏற்கனவே 12 ஆயிரம் கோடி உதவித் தொகை அளித்தது. சமீபத்தில் மீண்டும் 14 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியது. இந்த உதவித் தொகையையும் மீறி, நஷ்டம் ஏற்படுவதால் தான், பெட்ரோலிய பொருட்களின் விலையை அதிகரிக்கும்படி கூறுகிறோம் என்கின்றன எண்ணெய் நிறுவனங்கள்.

விலை நிர்ணயமும் போச்சு: இதுவரை பெட்ரோலிய பொருட்களின் விலையை மத்திய அரசு தான், நிர்ணயித்து வந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை எந்த அளவுக்கு ஏறினாலும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, உள்நாட்டில் பெட்ரோல் விலையை முடிந்த அளவுக்கு சமநிலைப் படுத்தி வந்தது. தற்போது அந்த பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடமே விட்டு விட்டது, மத்திய அரசு. இதன்படி, பெட்ரோல் விலையை இனிமேல் எண்ணெய் நிறுவனங்கள் தான் முடிவு செய்யும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏறினால், அதற்கு ஏற்ப உள்நாட்டிலும் விலை உயர்த்தப்படும். கச்சா எண்ணெய் விலை இறங்கினால், உள்நாட்டிலும் பெட்ரோல் விலை இறங்கும். பெரும்பாலான நேரங்களில் விலை உயர்வு தான் இருக்குமே தவிர, விலை குறைய வாய்ப்பு இல்லை. தற்போது தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறதே, அதுபோல் தான் இனிமேல் பெட்ரோல் விலையும் நிர்ணயிக்கப்படும். எனவே, இனி பொதுமக்களின் நலன் கண்டு கொள்ளப்படாது. எண்ணெய் நிறுவனங்கள், தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விடாத வகையில் விலையை நிர்ணயித்துக் கொள்ளும். இதில் பாதிக்கப்படப் போவது பொதுமக்கள் தான்.

டீசலுக்கும் ஆபத்து: பெட்ரோலைத் தொடர்ந்து, டீசலின் விலை நிர்ணயம் மீதான தனது கட்டுப்பாட்டையும் படிப்படியாக விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எதிர்காலத்தில் டீசலின் விலையும் விஷம் போல் ஏறும் என்பதை மறுப்பதற்கு இல்லை. இதனால், டீசலை பெரிதும் நம்பியுள்ள சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும். சரக்கு போக்குவரத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள், டீசல் விலை உயர்வை சமாளிக்க, வேறு வழியில்லாமல் போக்குவரத்து வாடகையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும். இதன் தொடர்ச்சியாக அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும். இறுதியாக, இந்த விலை உயர்வின் அனைத்து சுமைகளும் பொதுமக்களின் மீது வந்து இறங்கும்.

அடுத்து சமையல் காஸ், கெரசினா? பொதுமக்களின் நலன் கருதி, சமையல் காஸ், கெரசின் மீதான விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை, தொடர்ந்து தன்வசமே வைத்துக் கொள்ளப் போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருந்தாலும், கச்சா எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் காஸ், கெரசின் மீதான விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பையும், எண்ணெய் நிறுவனங்களிடமே அளிக்க, அரசு தயங்காது என்று தான் தெரிகிறது.

அரசியல் கட்சிகளின் நிலை என்ன? ஐ.மு., கூட்டணியை பொறுத்தவரை, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தவிர, மற்ற கட்சிகள் விலை உயர்வு குறித்து வாய் திறக்கவில்லை. மம்தா மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தார். இதற்காக நடந்த அமைச்சரவை கூட்டத்தையும் அவர் புறக்கணித்தார். பா.ஜ., தலைவர்கள், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்கள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விலை உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி, நாளை 5ம் தேதி நாடு தழுவிய “பந்த்’நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இருந்தாலும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் இந்த போராட்டத்தில் இணைவது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், “பந்த்’ நடத்த ஆதரவு தெரிவிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து களம் இறங்கினாலும், விலை உயர்வை வாபஸ் பெறுவது குறித்து, மத்திய அரசு மூச்சு விடாது என்று தான் தெரிகிறது.

பொதுமக்கள் மீதான தாக்குதல்: தற்போது டீசல் லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் வரையிலும், பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.50 வரையிலும், நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் சமையல் காஸ் சிலிண்டர் ஒன்றுக்கு 35 ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளன. ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் கெரசின் விலையிலும் மத்திய அரசு விளையாடியுள்ளது. கெரசின் விலை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்பாதிப்பு, பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையில் எதிரொலிக்க துவங்கி விட்டது. விலை உயர்வுக்கு முன் 2,650 ரூபாய்க்கு விற்ற, ஒரு மூட்டை சர்க்கரை, தற்போது 2,750 ஆக அதிகரித்துள்ளது. சில்லரை விலையில் கிலோவுக்கு ரூ.1.50 வரை உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் லாரி வாடகையும் 500 ரூபாய் வரை அதிகரிக்கும் என,எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பருப்பு, பூண்டு, சமையல் எண்ணெய் மற்றும் காய்கறி போன்றவற்றின் விலை கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் அன்றாட வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த விலை உயர்வு, அவர்களின் மீதான தாக்குதல் என்றே கூறலாம்.

கிரீத் பரேக்கிற்கு 80 “மிஸ்டு கால்’: பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்தும், விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பு குறித்தும் ஆய்வு செய்வதற்காக கிரீத் பரேக் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தான், தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை நிர்ணயம் செய்வது தொடர்பான முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிரீத் பரேக் கூறியதாவது: பெட்ரோல் விலை தொடர்பாக என்னுடைய பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. விலை உயர்வு, விலை நிர்ணயம் தொடர்பாக அறிவிப்பு வெளியானதுமே, என்னுடைய மொபைல் போனுக்கு, பல்வேறு நபர்களிடம் இருந்து அழைப்புகள் வரத் துவங்கி விட்டன. குறிப்பாக, மீடியாவைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் அழைத்தனர். அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களில் மட்டும் என்னுடைய மொபைல் போனுக்கு 80 மிஸ்டு கால் வந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அரசின் அறிவிப்பு திருப்தி அளிக்கிறது. இந்த விலை உயர்வால் பணவீக்கம் ஏற்படும் என, கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு கிரீத் பரேக் கூறினார்.

விலை உயர்வால் ஏற்படும் சுமை எவ்வளவு? தற்போதைய பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வால், பொதுமக்களுக்கு கூடுதலாக மாதத்துக்கு மிகவும் குறைவான தொகையே செலவாகும் என, மத்திய அரசு ஒரு மதிப்பீடு செய்துள்ளது. இந்த மதிப்பீடு பற்றிய விவரம்: தற்போதைய விலை உயர்வால் சிறிய கார்களை பயன்படுத்துவோருக்கு, சராசரியாக மாதத்துக்கு 135 ரூபாய் கூடுதலாக செலவாகும். இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவோருக்கு மாதத்துக்கு 90 ரூபாய் கூடுதலாக செலவாகும். சமையல் காஸ் பயன்படுத்தும் குடும்பத்தினருக்கு கூடுதலாக 200 ரூபாய் செலவிட நேரிடும். இவ்வாறு மத்திய அரசின் மதிப்பீடு கூறுகிறது. இந்த மதிப்பீடு சரியா, இல்லையா என்பதை பொதுமக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

அங்கு ஒரு டாலர் உயர்ந்தால் இங்கு 37 பைசா உயரும்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல் விலையை சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என, மத்திய அரசு அறிவித்து விட்டது. இதன்படி, ஒவ்வொரு நாளும் பெட்ரோல் விலையில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு ஒரு டாலர் அதிகரித்தால், நம் நாட்டில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 37 பைசா அதிகரிக்கும். தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டும் கதை தான்.

ரயில்வேக்கு ரூ.460 கோடி செலவு: டீசலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ரயில்வே துறைக்கு கூடுதலாக 460 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என, தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது இயங்கும் பயணிகள் ரயிலில் 51 சதவீத ரயில்கள், டீசலில் தான் ஓடுகின்றன. இதேபோல் சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தும் ரயில்களில் 37 சதவீத ரயில்கள் டீசலில் ஓடுகின்றன. இந்த ரயில்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் 230 கோடி லிட்டர் டீசல் வாங்குகிறோம். இதற்காக, 4,500 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. தற்போது டீசல் விலை ஏற்றப்பட்டுள்ளதால், மேலும் 460 கோடி ரூபாயை செலவிட வேண்டிய நிலைக்கு ரயில்வே தள்ளப்பட்டுள்ளது. இந்த சுமை, பொதுமக்களின் தலையில் சுமத்தப்படுமா என்பது, ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது தான் தெரியும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: