Posted by: shuhaib | 11/07/2010

விலகிச்செல்கிறது விவசாயத் தலைமுறை!


விவசாயத்துக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், அரிசியை என்னவோ அண்டை மாநிலங்களில் வாங்கிச் சாப்பிட வேண்டிய நிலையில்தான் தமிழகம் உள்ளது. வடமாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் உணவுத் தேவைக்கான அரிசியை ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இருந்துதான் வாங்க வேண்டியுள்ளது.    10 ஆண்டுகளுக்கு முன்பு 60 லட்சம் ஹெக்டேராக இருந்த தமிழகத்தின் மொத்த விவசாய நிலப்பரப்பு, படிப்படியாகக் குறைந்து இப்போது 48 லட்சம் ஹெக்டேர் மட்டுமே உள்ளது. நகர்ப்புற விரிவாக்கம், தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள் என வளர்ச்சிப் பாதையில் செல்வதாகக் கூறிக்கொண்டு, விளைநிலங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. விவசாயம் செய்யப்படும் நிலப்பரப்பு மட்டுமல்லாது, விவசாயத்துக்கான கூலி வேலைக்கு ஆள்களும் குறைந்துவிட்டனர். ஆள் கிடைத்தாலும், ஊதியத்தைக் கொடுக்க இயலவில்லை. வேலைக்காக, கிராமப்புற மக்கள் நகர்ப்புறங்களில் குடியேறுகின்றனர். இதனால், காவிரி டெல்டா பகுதிகளில் கூட, விவசாயம் நமது தொழில் என்ற நிலை மாறி, இன்றைய தலைமுறைக்கு அன்னியமாகிவிட்டது.  டெல்டா பாசன விவசாயிகளுக்குச் சரியான நேரத்தில், தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால், நிலத்தடி நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். உரிய காலத்தில் காவிரியில் தண்ணீர் கிடைக்காததால், நான்கு லட்சம் ஏக்கரில் செய்யப்பட வேண்டிய குறுவைச் சாகுபடி கடந்த சில ஆண்டுகளாக 2 லட்சம் ஏக்கருக்கும் குறைவாகவே செய்யப்படுகிறது. இதனால் டெல்டா பாசன விவசாயிகளுக்கு ஒவ்வோராண்டும் ரூ. 500 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  அனைத்து மாவட்டங்களிலும் போதுமான அளவுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லை. இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு உரிய கொள்முதல் விலை கிடைப்பதில்லை. ஒவ்வோராண்டும் சுமார்  60 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டாலும், அரசின் மூலமாக 10 லட்சம் டன் வரையே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், இடைத்தரகர்களிடம், அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு, நெல்லைக் கொடுக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.  அரசு எத்தனை சலுகைகளை அளித்தாலும் விவசாயம் ஓரளவுக்குக்கூட முன்னேற்றம் அடையவில்லை. மூன்று ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள ஏழை விவசாயிகள் அனைவரும் ஏரி, கால்வாய் மற்றும் ஆற்றுப் பாசனங்களையே நம்பி உள்ளனர். விவசாயத் தொழிலில், அதிக அளவில் உள்ள இவர்களுக்கு உதவும் விதமாக, அடிப்படைத் தேவையான நீர் வளத்தைக் பாதுகாக்க வேண்டும்.  தமிழகத்தில் மொத்தம் 38 ஆயிரம் ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் முறையாகத் தூர்வாரப்பட வேண்டும். பெரும்பாலான விவசாயிகள்  கடந்த 45 ஆண்டுகளுக்கு மேல் மின்மோட்டார் மூலம்  நிலத்தடி நீரை உறிஞ்சி வருகின்றனர்.  இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 1,000 அடியைத் தொட்டுவிட்டது.  பாசனத்துக்கு  உத்தரவாதம், நீர்வளத்தைப் பெருக்குவது போன்றவற்றை அரசு முறைப்படுத்தும் பட்சத்தில் கடனை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்படாது.  வீட்டுமனைகள் என்ற பெயரில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 20 சத விளைநிலங்கள் விவசாயிகளின் கையைவிட்டுப் போய்விட்ட நிலையில், மேலும் பல லட்சம் ஏக்கர்களைத்  தரிசு நிலமாக்கும் இந்தப் புதிய கலாசாரம் முடிவு இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆறுகளில் கழிவுநீர் கலப்பதால், விவசாயம் பாதிக்கப்பட்டு, உற்பத்திக்குறைவு ஏற்பட்டுள்ளது.  இதுபோன்று பல்வேறு பிரச்னைகளால் விவசாயம் மீதுள்ள ஆர்வம் விவசாயிகளிடம் குறைந்து வருகிறது. இவ்வாறு தரிசு நிலங்களாக விடப்பட்ட நிலங்கள் தொழிற்சாலைகளாகவும், வீட்டுமனைகளாகவும் மாறி வருகின்றன.  ஒவ்வோராண்டும் மக்கள்தொகை அதிகரித்துவரும் நிலையில், அதற்கேற்ற வகையில் உணவு உற்பத்தியையும் அதிகரித்துக்கொள்வது மிகவும் அவசியம். அண்டை மாநிலங்கள் கைவிரித்துவிட்டால் ஏற்படப்போகும் நிலையை உணர்ந்து, தமிழகத்தில் விவசாய நிலப்பரப்பு மேலும் குறையாமல் பாதுக்காக்க வேண்டும்.    விவசாய நிலங்களை தொழிற்சாலைகள் மற்றும் வீட்டுமனை தேவைக்கு விற்பனை செய்ய கேரள அரசு தடைவிதித்துள்ளது. இதுபோன்ற தடை உத்தரவை தமிழக அரசும் செயல்படுத்த வேண்டும். இதன்மூலம் இப்போது எஞ்சியுள்ள விவசாய நிலங்களை முழுமையாகப் பாதுகாக்க முடியும். உணவுத்தேவைக்கு வெளிமாநிலங்களை நம்பியிருக்கும் நிலை உருவாகிவிட்ட நிலையில், இன்றைய தலைமுறை விவசாயிகள் விவசாயத்தில் இருந்து விலகிச்செல்லாமல் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: