Posted by: shuhaib | 12/07/2010

சிறுகதை: மீன் வியாபாரி மகன்


இந்த வைகாசி மாசத்திலும் இந்த குளிரு எங்கண்டுதான் வருதோ.. மார்கழி மாச குளிரு போல ஊசியா எறங்குது. இந்த ஆட்டோக்காரன் கிட்ட சொன்னாக் கேக்யானா? இராத்திரியில ரோடு சும்மா கிடக்குதுன்னு வண்டில பறக்கத்தான் செய்யான்… பகல்ல வோட்டி தீக்க முடியாததெல்லாம் இப்போ வோட்டித் தீக்கறான் போல.. ‘ என மனதில் நினைத்தவாறு தளர்ந்திருந்த தலைப்பாகையை அவிழ்த்து காது மடலோடு சேர்த்து இறுகக் கட்டினார் எலியாஸ்.

இன்னமும் குளிர் குத்தூசியாய் குத்தத்தான் செய்தது. இடுப்பில் கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து கழுத்துவரை மூடிக் கொண்டு கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் மீன் கூடை மீது உட்கார்ந்திருந்தவாறு வேறொரு கூடையில் தலை சாய்த்து உறங்க முயற்சித்தார்.

இப்படி அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து சென்றால் தான் வியாபாரத்துக்கு மீன் கிடைக்கும். முன்பெல்லாம் அதிகாலை மூன்று மணிக்கே சைக்கிளில் சென்று மீன் எடுத்து வந்தனர். இப்போது அது முடிவதில்லை. எனவேதான் ஏழு, எட்டுப் பேர் கூட்டாக ஒரு லோடு ஆட்டோவை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு மீன் எடுக்கச் செல்கின்றனர்.

தன்னைப் போலவே தூங்க நினைத்து தூங்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த வர்க்கீசோடு பேச்சு கொடுத்தார் எலியாஸ். “” ஏல.. நேத்திக்கு நெத்தலி வெயாவரம் எப்படில.. நான் கொண்டு போயி வித்து முடிக்கிறதுக்கு அந்திக்கு 6 மணி வரைக்கும் சீவன மாட்ட வேண்டியதா போச்சு”

“”என்ன செய்யண்ணே… நான் கொண்டு போனது பாதி விக்காம கருவாடுக்கு வெயில்ல போடச் சொன்னேன்” என நேற்று வழக்கமாக மீன் விற்கும் பாறக்கடை மீன் கடையில் விற்றுத் தீர்க்க முடியாததால் மீதி மீனை சைக்கிளில் கட்டி தெருத் தெருவாக கொண்டு போய் விற்ற கதையைப் பேசிக் கொண்டனர்.

“”கருவாடு போட்டாத்தான்.. எங்க கொண்டு விக்கிறதாம். நாம தான் திங்கணும். நாம மண்ணலயும் கல்லுலயும் போட்டு உலர்த்தினா எவன் வாங்குவான். கம்பெனிக்காரன் கரண்டுல உலர்த்தி பாக்கெட்டுல அடச்சு விக்கிறதுதானே சனங்களுக்குப் பிடிச்சுப் போய் கிடக்கு. மண்ணில்ல.. உப்பில்லண்ணுல்ல சொல்லி வாங்கிட்டு போகுதுக” என எலியாஸ் சலித்துக் கொண்டார்.

“” ம்ம்.. காலம் மாறுது இல்ல. நம்ம செறுப்ப காலத்தில என்னக்கி இப்படி வைகாசி மாசத்தில குளிரடிச்சுது… செறுப்பத்தில நம்ம ஐயா மாரு என்னக்காவது வண்டியில மீன்பாடு கொண்டு வந்தாவளா.. எல்லாந் தலச்சுமடு தானே” என்றார் வர்க்கீஸ்.

சற்று நேர அமைதிக்குப் பின் எலியாஸ், “”ஏல சுருட்டு வைச்சிருக்கியா… நான் நேத்து நாடார் கடையிலயிருந்து வாங்கின சுருட்டு நல்லாயில்ல… நான் வீட்டில போட்டிட்டு வந்தேன். இன்னக்கி கலிக்காவிள சந்தக் கடையிலண்டு ரண்டு பாக்கெட்டு சுருட்டு வாங்கணம். மறந்திடாத” எனப் புகைப்பிடித்தால் குளிர் குறையும் என்ற எண்ணத்தோடு கூறினார்.

மடியில் இருந்த பொதியை எடுத்துப் பிரித்த வர்க்கீஸ் அதிலிருந்து இரண்டு சுருட்டுகளை எடுத்து ஒன்றை எலியாசிடம் நீட்டினான். சிகரெட் லைட்டரை எடுத்துச் சுருட்டை வாயில் வைத்துக் கொளுத்தினார். அப்படியே எலியாஸ் கொளுத்திக் கொள்ள சிகரெட்  லைட்டரை நீட்டினார்.

சுருட்டின் புகை உள்ளே சென்றதும் சிறிது குளிர் விட்டுப் போனது போல இருந்தது. எலியாஸ் சுருட்டின் புகையை ஊதிக் கொண்டே “”ஏல… இன்னக்கி சனியாச்சயில்ல.. பாண்டிக்காரன் கலக்சனுக்கு வருவானில்ல.. 150 ரூவா அவனுக்குக் கொடுக்கணும். போன வாரம் கொடுக்கல வெயாவரம் இல்லன்னு சொல்லி அனுப்பிட்டேன். இந்த வாரம் வாங்காமப் போகமாட்டான்”.

“”ஏன்ண்ணே வீட்டில கொடுக்கது எதுவும் மிஞ்சாதா.. என் வீட்ல பாண்டிக்காரன் கதையெல்லாம் நான் பாக்கறதே இல்லே. அவக்கத அது.. வீட்டில் பொம்பளை எதுக்கண்ணே? கொடுக்கத வைச்சிட்டு இதயெல்லாம் பாத்தாத்தானே நமக்கும் கொஞ்சம் ஆத்தலா இருக்கும்”

“”என் வீட்டுக்காரிகிட்ட இதெல்லாம் பேச முடியாதுடா. எப்ப கேட்டாலும் பையனுக்கு ஸ்கூலுக்குக் கொடுத்தேன். பொண்ணுக்கு காலேசிக்கு கொடுத்தேன்னு ஏதாது சொல்லிட்டிருக்கா. என்ன படிக்குதுகளோ. எனக்கொண்ணும் பிடிச்சுக் காணல்ல.. நாம இந்தத் தொழில செஞ்சு என்னக்கில்ல இதுகள கரையேத்தறது. பொண்ண கெட்டிக் கொடுக்கலான்னு சொன்னா கேக்காயில்ல. படிச்சு முடிச்சுட்டா அதுக்குத் தக்கன மாப்பிள எங்க போயி தேடறதாம்? இவ கிட்ட சொன்னா புரியமாட்டேங்குது”

“”சும்மாயிருண்ணே. தெராசாக்கா ரெண்டு பிள்ளைகள பெத்திருக்கு. எப்படி படிக்குது பாருங்கன்னு ஊருல்ல எல்லாரும் சொல்றதக் கேட்டா எனக்கே பூரிச்சுப் போகுது. நீங்க என்னடான்னா இப்படி சொல்ற. நம்ம கஷ்டம் நம்மோட போட்டண்ணே. நம்ம பிள்ளக இப்படிக் காத்தால குளிருல நடுங்கி அல்லாடப்படாதண்ணே” எனக் கூறிக் கொண்டு கையிலிருந்த சுருட்டைக் கடைசியாக ஒருமுறை இழுத்துவிட்டு துண்டு சுருட்டை தூர எறிந்தான் வர்க்கீஸ்.

“” என்னத்த பொழப்பு” என எலியாஸ் பேசத் துவங்குகையில் வண்டி குடுகுடுவென குலுங்கத் தொடங்கியது. “” லே நாசமா போற பயலே..மொள்ளமா போலே. ரோட்டில கண்ணில்லாமலா வண்டி ஓட்டுற. இப்படி போனன்னா களிக்காவிள போச்சில ஒனக்க டப்பா வண்டில நீ பிடிச்சிருக்க வளையம் மட்டும்தான் மிஞ்சும்..”

வண்டி குழித்துறை ஆற்றுப் பாலத்தினருகில் சென்ற போதுதான் இந்தக் களேபரம். முப்பது ஆண்டு கனவாக இருந்த குழித்துறை ஆற்றுப் பாலம் பல போராட்டங்களுக்குப் பின் எப்படியோ நல்லநிலையில் கட்டி முடிக்கப்பட்டது. அதன் இரண்டு பக்கமும் உள்ள இணைப்புச் சாலைதான் இந்தப் பாடுபடுத்துகிறது.

“”லே…பாத்தியா குண்டு குழியாக, குழி குளமாகிறது. மழை பெஞ்சின்னா நாம மீன் வாங்க களிக்காவிளை போவண்டாம். இந்தக் குளத்தில மீன் பிடிச்சு விக்கலாம்.” என எலியாஸ் கூறிக் கொண்டிருக்கும் இடைமறித்த வர்க்கீஸ் “”ஆமாண்ணே.. இன்னக்கித்தானே பத்தாங் கிளாஸ் ரெசல்ட்டு… நேத்து ராத்திரி குருசரி செபத்தில எல்லாரும் நல்ல மார்க் வாங்கணன்னு செபம் செய்தாவ இல்ல” என வினவினான்.

“”ஆமாண்டா… நேத்து ராத்திரி என் வீட்லயும் இதுதான் செபம். பிள்ள நல்ல மார்க்கோட செயிக்கணும்… செயிக்கணும்னு ஒரே செபந்தான். தெரசா ரெசல்ட் வந்தவுடன பையன பதினொண்ணாங் கிளாசில சேக்கணும்னு சொல்றா… இந்தப் பயகிட்ட ஏதாவது தொழில் படிச்சுட்டு நாலு காசி பாக்கப்பாருன்னு சென்னா அவனும் கேக்க மாட்டான். கம்பியூட்டர படிப்பேன்னு ஒத்தக் காலுல நிக்கான்” எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஆட்டோ சாலை ஓரமாக நின்றது.

எலியாஸ் எட்டிப் பார்த்தார். படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் ஆட்டோ நின்றிருந்தது. டார்ச் லைட்டோடு வந்த  போலீஸ்கார், “” எறங்கு… எறங்கு.. வண்டிய செக் பண்ணனும்” எனக் கூறிக் கொண்டே வந்தார். வல்லேரியா கிழவியைத் தவிர எல்லாரும் வண்டியிலிருந்து இறங்கினர்.

வண்டியிலிருந்து இறங்காமல் இருந்த வல்லேரியா கிழவியை போலீஸ்காரர் லத்தியால் தட்டி இறங்கச் சொன்னார். கிழவி அவளோட அலுமினியப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள். “” பாத்திரத்தில என்ன?” எனக் கேட்டுக் கொண்டே கிழவி தலைப்பாகைக்கு எனச் சுருட்டி வைத்திருந்த பழைய கிழிந்த துணியை எடுத்து உதறினார் போலீஸ்காரர். வண்டியிலிருந்து எல்லா பிளாஸ்டிக் கூடைகளையும் இறக்கிச் சோதித்து ஒன்றுமில்லாததைக் கண்டு ஆட்டோ ஓட்டுநரிடம் சென்று, “”பேப்பரெல்லாம் எடு …” என லத்தியைச் சுழற்றினார்.

இதுவரை மெüனமாக இருந்த எலியாஸ் பேசத் தொடங்கினார். “”ஏல.. இப்படி எல்லாம் செக் பண்ணாலும் லாரி லாரியா ரேசன் அரிசி கடத்துறவனுக கெட்டிக்காரனுவதான் இல்ல..” என்றவுடன் போலீஸ்காரர் இவரைப் பார்த்து முறைத்தார். இதற்கிடையில் வேகமாக வந்த ஒரு டெம்போ சற்று வேகம் குறைய கிளீனர் வண்டியிலிருந்தே ஏதோ நீட்ட அதை வாங்கிய மற்றொரு போலீஸ்காரர் “”ரெகுலர் பார்ட்டி அண்ணே.” ஆட்டோ சோனையில் முனைப்பாக நின்ற போலீஸ்காரருக்குத் தகவல் சொன்னார்.

இதைக் கவனித்த எலியாஸ் “”பாத்தியா ரேசனரிசி எப்படிப் போவுதுன்னு” என்றார். வர்க்கீஸ் போலீஸ்காரரிடம் “”ஏன் சார் இப்பவே நேரமாயிப் போச்சு… கேரள வண்டிக வந்து யேலம் முடிஞ்சிட்டா நல்ல மீன் கெடைக்காது” என்றதைக் கேட்டும் கேட்காமல் போலீஸ்காரர் வண்டிக்கான ஆவணங்களில் ஒன்றையும் எடுக்காமல் நின்றிருந்த ஓட்டுநரிடம் திரும்பி “”பேப்பர் ஒண்ணுமில்லையா? நூறு ரூவா கொடுத்துட்டுப் போ” என வழிப்பறியில் ஈடுபடும் ரெüடி போல மிரட்டினார். ஓட்டுநர் கையைப் பிசைந்தபடி நின்றார்.

இதற்கிடையில் சோதனைச் சாவடிக்கு உள்ளேயிருந்து வெளியே வந்த உதவி ஆய்வாளர், “”அதென்ன மீன் வண்டியா.. விட்டுத் தள்ளய்யா… எல்லாவனும் சேந்து ரோட்டில இருந்தாலும் இருந்திருவானுக” என்றார் சலிப்போடு.

அப்பாடி… என பெருமூச்சு விட்டவாறு எல்லாரும் வண்டியில் ஏற வண்டி புறப்பட்டது. வண்டி களியக்காவிளை மீன் சந்தையை எட்டிய போது மணி ஐந்தரையாகியிருந்தது. ஏலம் முடிந்திருந்தது. இனி ஏலம் பிடித்து வைத்திருப்பவரிடம் விலைக்குத்தான் வாங்க வேண்டும். அதுவும் நல்ல மீன் கிடைக்காது. நெத்தலி, சாளை, சூரை மீன்கள் இருந்தன. சூரையும் பெரிய சூரையாயில்லை. “இதுகளை வெட்டி வித்து காசாக்குவது பெரும் செரமம்தான்’ என மனதுக்குள் எண்ணிய எலியாஸ் சாளை மீனை வாங்கினார். வர்க்கீசு நெத்திலி வாங்கினார். வண்டியில் இவர்கள் கூட வந்தவர்கள் எல்லாரும் மீன் வாங்கி வண்டிக்குக் கொண்டு வந்து பாரம் ஏற்றிக் கொண்டிருந்தனர். வல்லேரியா கிழவிக்கு மற்றவர்கள் உதவி செய்தார்கள்.

இதற்குள் மணி ஆறாகி இருந்தது. கடைக்காரரிடம் மணி கேட்டுத் தெரிந்து கொண்டு, “”ஏல இன்னக்கி நேரத்துக்கு மீன்கடைக்கு போவமுடியாது போலத்தான் தெரியுது. யாதுக்கும் ஒரு சாய குடிக்கலாம் வா” எனக் கூறிக் கொண்டு டீக்கடைக்குச் சென்றார். பக்கத்துப் பெட்டிக் கடையில் மறக்காமல் சுருட்டு வாங்கிக் கொண்டார். வண்டி பாரம் ஏற்றி முடித்தவுடன் மீதமுள்ளவர்களும் டீ குடித்துக் கிளம்பினர்.

வண்டி கிளம்பி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மீன் கடையில் இறக்கிவிட்டுச் சென்றது. கடைசியில் எலியாஸýம் வர்க்கீசும் பாறக்கடை மீன்கடையில் இறங்கிக் கொண்டனர். “” கையில பைசாயிருந்த இருபது ரூவா தா… காலைல காப்பி குடிக்கக் கூட கையில காசில்ல..” எனக் கேட்டு வாங்கிக் கொண்டு ஆட்டோக்காரர் சென்றார். இவர்கள் மீன் விற்று மாலையில்தான் வாடகை கொடுக்க வேண்டும்.

மீன் கடையில் வழக்கமாக எலியாஸ் இருந்து மீன் விற்கும் கல்லில் யாரோ மண் வாரி போட்டிருந்தார்கள். பக்கத்தில் போய்ப் பார்தத போது குடலைப் புரட்டும் நாற்றம். அருகில் மது பாட்டில். ஹோட்டலிலிருந்து வாங்கப்பட்ட புரோட்டா பார்சலின் மிச்ச மீதிகள் சிதறிக் கிடந்தன. நேற்று யாரோ இந்த இடத்தை திறந்தவெளி பாராக மாற்றியிருந்தார்கள். அவர்களின் வாந்திதான் இந்தக் குடலைப் புரட்டும் நாற்றம்.

பெரும்பாலும் இதுவரை குடித்துப் பழக்கமில்லாத கல்லூரி அல்லது பள்ளிக்கூடப் பையன்களாகயிருக்கும் என்பதை எலியாஸால் யூகிக்க முடிந்தது. “” குடிக்க கழிவிலன்ன என்ன மயிருக்கு குடிக்கானுவ…பண்ணிப்பயலுவோ  இதுக எல்லாம் படிக்கேன்னு சொல்லி தள்ளமாருக்க தாலியறுக்க விடாதுக..” எனத் திட்டிக் கொண்டே வர்க்கீசைக் கூப்பிட்டு மீனை வேறொரு கல்லுக்கு மாற்றினார்.

மீன் கடை கூடி மீன் விற்பனை துவங்கியது. “”வா.. வா.. பத்து ரூவாக்கு எட்டு.. எட்டு”, “”அங்க என்ன பாக்கிய… நல்லத கொண்டு போ…”, “”வா… வா… கூறு பத்து ரூவா…”, “” அழுவுன மீனா வாங்க வந்த.. அவங்கிட்ட போற”… “” ஏ… தம்பி வா… வா… பச்சக் கிளியில்ல கொண்டு வந்திருக்கேன்” எனக் குரல்கள் மீன் கடையின் பலமுனைகளிலிருந்தும் எதிரொலிக்கத் துவங்கியது.

மீன் வாங்க வந்தவர்கள் பலரும் அன்றைய பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் பற்றியே பேசினார்கள். “”லே நீயா?… ஒன் தம்பியா… பத்து படிக்கியது? பாஸôச்சல? ”, “”ஒன் பேரன் பத்து தானே ரிசல்ட் பாத்தாச்சா?”, “”இப்ப கம்பியூட்டல்ல இல்ல பாக்கணுமாம்.. லே சாலினு நீ ரிசல்ட் பாக்க போனா எனக்க பயலுக்கும் பாத்துட்டு வா… பய பயந்துட்டு கேரளத்திலண்டு வரச் சொன்ன பொறவும் வரல” என்பன போன்ற பேச்சுகள் மீன் கடையிலும் எதிரொலித்தது.

எலியாஸ் தனது பையன் பாஸôயிடுவான் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டார். அவருடைய மகன் ரெஜின் நன்றாகப் படிக்கக் கூடியவன்தான். ஊரில் உள்ள எல்லாரும் எலியாஸின் பிள்ளைகளை படிப்புக்கு உதாரணமாகக் கூறுவர். எனவே, தேர்வில் வெற்றி பெற்றுவிடுவான் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது. மதிப்பெண்களைப் பற்றியோ அதனுடைய அருமை பற்றியோ அவருக்கு தெரிந்திருக்கவில்லை. அதுபற்றி அவர் அக்கறை கொள்ளவுமில்லை.

நேரம் பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. மீன் கடைக்கு அருகிலிருந்த வீட்டுப் பையன் பள்ளிக்கூடத்தில் முதல் மதிப்பெண் பெற்றதாகக் கூறி எல்லாருக்கும் மிட்டாய் வாங்கிக் கொடுத்தான். எலியாஸýக்கும் கிடைத்தது. இடது கை கொண்டு வாங்கி மீன் எச்சில் படாமல் வைப்பதாக நினைத்து மீன் செதில்களால் நிறைந்திருந்த ரூபாய் நோட்டுகளுடன் போட்டார். இன்னும் மீதமிருக்கும் மீனை 50 ரூபாய்க்கு விற்கலாம்.

மிட்டாய் கொடுத்த பையன் 20 ரூபாய்க்கு மீன் கேட்டான். எல்லா மீனையும் அவனுக்குக் கொடுத்தார். பையன் “”இவ்வளவு மீனா?” என அதிசயித்து வாங்கிப் போனான்.

ஏற்கனவே மீன் விற்று முடித்துப் புறப்படத் தயாராயிருந்த வர்க்கீசோடு வேக வேகமாகக் கிளம்பினார். வயிற்றுப் பசி கண்ணைக் கிறக்கியது. கலையில் குடித்த டீக்கு பிறகு மீன் விற்று விற்று நான்கு டீ குடித்துவிட்டார். இனி வீட்டில் போய் சோறு சாப்பிட்டால்தான் பசியடங்கும்.

பேருந்தைப் பிடித்து இருவரும் ஊர் வந்து சேர்ந்தனர். அதிகாலையில் நாடார் கடையில் வைத்த சைக்கிளை எடுத்துக் கொண்டு வழக்கம்போல டாஸ்மாக் கடை நோக்கி சைக்கிளைச் செலுத்தினர்.

“”அண்ணே இன்னக்கி வேண்டான்னே.. ரிசன் பாஸாயிருப்பானில்ல… அவனுக்கு மிட்டாய் வாங்கிட்டுப் போ… மீன் கடையில அந்தப்பையன் மிட்டாய் கொடுத்ததுபோல எல்லாருக்கும் கொடுக்கலாம்…” என்ற வர்க்கீசின் பேச்சுக்குத் தலையாட்டி மிட்டாய் வாங்க நாடார் கடைக்குச் சைக்கிளைத் திருப்பினார். கடைக்காரர் பொருள் வாங்க வந்த பையனிடம், ஸ்டேட் பஸ்ட் நம்ம மணலிக்கரை பள்ளியாமே.. ஏது பையாம்பில அது” என வினவ, “”என் கிளாசில படிச்ச பையன்தான். ரெஜின்னு பேரு. ஆர்.சி.தெருவிலண்டு. ஒரு மீன் வெயாபாரி பையன்” என்று மனப்பாடம் செய்யுள் ஒப்புவிப்பதுபோலச் சொன்னான்.

சைக்கிளை நிறுத்தப் போன எலியாஸ் இதனைக் கேட்டவுடன், “”யாருக்குன்னு சொன்ன” என  வினவினார். திரும்பிப் பார்த்த பையன் இவரை அடையாளம் கண்டு கொண்டு, “”உங்க பையன் ரெஜினுக்குத்தான் ஸ்டேட் பஸ்ட்… எல்லாரும் வந்து போட்டோ எடுத்திக்கிட்டு இருக்காங்க. உங்களைத்தான் காணலன்னு தேடிக்கிட்டு இருக்காங்க” என்றான்.

“”லே… ஒன் பையனா…ல்லே?” எனக் கடைக்காரர் கேட்டது கூடக் காதில் விழாமல், மிட்டாய் வாங்கவும் தோன்றாமல் சந்தோஷம் தாங்காமல் மகனைப் பார்க்க சைக்கிளில் பறந்தார் எலியாஸ்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: