Posted by: shuhaib | 20/07/2010

மனைவி அழுவதெல்லாம்… இணைய தளமாகுமே!


நீங்களும் இணைய நட்சத்திரமாக வேண்டுமா? அப்படியென்றால் வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

கூடவே உங்கள் மனைவியையும் ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக மனைவியின் குறைகளை அவரது குணமாக எடுத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.

இப்படி மனைவியின் செயல்களை கொண்டாட முடியும் என்றால் அதற்காக ஒரு இணையதளத்தை அமைத்து உலகையே ரசிக்க வைக்கலாம். இதற்கு முன்னுதாரணம் வேண்டும் என்றால் அமெரிக்காவின் பார்கர் ஸ்டெச்சை சொல்லலாம்.

இளைஞரான ஸ்டெச்சை ஒரு இணைய நட்சத்திரம் என்றும் சொல்லலாம். மனைவியின் மூலம் அவருக்கு கிடைத்த அந்தஸ்து அது. அப்படியே ஸ்டெச்சை உலகின் அருமையான கணவன் என்றும் சொல்லலாம். மனைவியின் ஒவ்வொரு அசைவையும் நேசிக்கத் தெரிந்த கணவர். அந்த நேசிப்பை உலகோடு பகிர்ந்து கொள்ள கிரையிங் வைப் என்னும் இணையதளத்தை அவர் உருவாக்கினார்.

அநேகமாக மனைவிக்காக இணையதளத்தை உருவாக்கிய முதல் மனிதர் ஸ்டெச்சையாகத்தான் இருக்க வேண்டும். இந்த எண்ணம் வேறு யாருக்காவது ஏற்பட்டிருக்குமா என்பதும் சந்தேகமே! எல்லாம் அவருடைய மனைவியின் அழுகை பழக்கத்திலிருந்து துவங்கியது.

திரைப்படங்களை பார்க்கும் போது உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் சிந்துபவர்களை பார்த்திருக்கிறோம் அல்லவா, ஸ்டெச்சின் மனைவி ஹாலியும் இதே ரகத்தைச் சேர்ந்தவர். ஆனால் கொஞ்சம் ஓவராக உணர்ச்சிவசப்படும் ரகம்! உணர்ச்சி வசப்படலின் உச்சிக்கே செல்பவர் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

அதாவது விழுந்து விழுந்து சிரிப்பது என்று சொல்வது போல் ஸ்டெச்சின் மனைவி ஹாலி கண்ணில் நீர் வழிய வழிய அழுது கொண்டே இருப்பாராம். அதிலும் அவர் அழும் படங்களை பார்த்தால் சிரிப்பு வந்து விடுமாம். ஆம், டைட்டானிக் போன்ற சோகமான காவியங்களை பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு சிலர் படத்தோடு ஒன்றிப் போய் கண்ணீர் விடுவதுண்டு. ஆனால் ஹாலியோ அவதார் போன்ற படங்களை பார்த்தால் கூட அதில் ஒன்றிப் போய் அழுது தீர்ப்பாராம்.

பிரம்மிப்பூட்டக்கூடிய படங்களாக கருதப்படும் லார்டு ஆப் த ரிங்ஸ், பேக் டூ தி பியுச்சர் போன்ற படங்களை எல்லாம் பார்த்த பின் ஹாலி அரை மணி நேரம் அழுது தீர்த்திருக்கிறாராம். அதிலும் எப்படி தெரியுமா, படத்தில் வரும் பாத்திரங்கள் ஏதா நெருங்கிய சொந்தம் போல நினைத்து புலம்பியபடி!

இப்படி ஒரு மனைவி கிடைத்திருந்தால் மற்றவர்கள் தலையில் அடித்துக் கொள்ளவோ, திட்டித் தீர்க்கவோதான் செய்திருப்பார்கள். மனைவி மீது பாசம் மிக்கவர்கள் கவலைப்படவே செய்திருப்பார்கள்.

ஹாலியும், ஸ்டெச்சும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதால் ஹாலியை பற்றி ஸ்டெச் நன்றாக புரிந்து வைத்திருந்தார்.

காதலிக்கும் காலத்திலேயே “எல்ப்’ என்னும் படத்தை பார்த்து ஹாலி அழுத விழிகளோடு அரற்றியதை பார்த்து ரசித்திருக்கிறார். “எல்ப்’ போன்ற ஜனரஞ்சகமான படத்தை பார்த்து கூட ஒருவரால் அழ முடியும் என்பது அவருக்கு அப்போது நம்ப முடியாத ஆச்சரியத்தை அளித்தது.

தியேட்டரில் எல்லோரும் ஜாலியாக ரசித்த ஒரு படத்தை பார்த்து தன்னுடைய காதலி மட்டும் கர்ச்சீப் நனைந்து போகும் அளவுக்கு அழுகாச்சியாக இருந்தது வியப்பை அளித்தாலும் அவருள் லயிப்பை ஏற்படுத்தவே செய்தது.

காதலின் வேகத்தில் காதலியின் வினோத குணம் ரசிக்கக் கூடியதாகவே தோன்றியது புரிந்து கொள்ளக் கூடியதே! ஆனால் திருமணத்திற்கு பின்னும் இந்த ரசனை மாறாமல் இருந்ததுதான் வியப்பு. திருமணமான பின் ஸ்டார் வார்ஸ் படத்தை வீட்டில் ஹோம் தியேட்டரில் இருவரும் சேர்ந்து பார்த்தனர். படம் முடியும் தருவாயில் ஹாலி அழுகைக்கு மாறியிருந்தார்.

ஸ்டார் வார்ஸ் படத்தை பார்த்து கூட ஒருவரால் அழ முடியுமா என அசந்துப் போன ஸ்டெச், வீடியோ காமிராவை எடுத்து மனைவி அழுது புலம்புவதை அப்படியே படம் பிடித்து விட்டார். அதன் பிறகு யுடியூப் யுகத்தில் பலரும் செய்யக் கூடியதை செய்தார். ஆம் யுடியூப் வீடியோ பகிர்வு தளத்தில் மனைவியின் அழுகை வீடியோவை பதிவேற்றி விட்டார்.

இந்த வீடியோ காட்சியை பலரும் பார்த்து ரசித்தனர். ஒரு கட்டத்தில் ஹாலிவுட் நடிகர்கள் டிம்பர்லேக் மற்றும் ஆஷ்டன் குட்சர் இந்த வீடியோவை பார்த்து ரசித்து டிவிட்டரில் குறிப்பிட்டனர்.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் ஹாலியும் இதனை ரசிக்கவே செய்தார் என்பதே! ஆசைக்கணவர் தன்னை காட்சி பொருளாக்கி விட்டாரே என்று கோபப்படாமல் தன்னைப் பார்த்து தானே சிரித்து மகிழ்ந்து கொண்டார்.

யுடியூப்பில் கிடைத்த வரவேற்பை அடுத்து ஸ்டெச் மனைவியின் அழுகை வீடியோக்களுக்காக என்றே இணையதளம் ஒன்றை உருவாக்கினார். மிகவும் பொருத்தமாக “அழும் மனைவி’ (கிரையிங் வைப்) என பெயரிடப்பட்ட அந்த தளத்தின் மூலம் மனைவி அழுகை ரியாக்ஷன்களை படம் பிடித்து பதிவேற்றி வருகிறார்.

மிக எளிதாக வடிவமைக்கப்பட்ட இந்த தளத்தில் தன்னுடைய அழும் மனைவி பற்றி சுருக்கமாகவும் அழகாகவும் குறிப்பிட்டு மனைவியை அழ வைக்கக் கூடிய அடுத்த படத்தை பரிந்துரைக்குமாறு இணையவாசிகளுக்கு வேண்டுகோளும் வைத்திருக்கிறார்.

மனைவி அழுவது நிஜம்தானா? எல்லா படங்களுக்கும் இப்படி அழுவது வழக்கமா? என வரிசையாக கேள்விகளை கேட்டு அவற்றுக்கான பதில்கள் மூலம் மனைவியை அழகாக உலகிற்கு அறிமுகம் செய்திருக்கிறார்.

இப்படி அழும் பழக்கம் நான்கு வயதிலிருந்தே இருக்கிறது. அவருடைய அழுகை நடிப்பல்ல அந்த அளவுக்கு படத்தில் ஒன்றிப் போய் விடுகிறார். மற்றபடி அவருக்கு எந்தவிதமான கோளாரும் கிடையாது. தவிர புத்தகம் படிக்கும் போதோ மற்ற நேரங்களிலோ இப்படி அழுவதில்லை என்றெல்லாம் விளக்கம் அளிக்கும் ஸ்டெச், இப்படி இணையதளம் அமைத்து தான் அழும் காட்சிகளை உலகமே பார்க்க வைத்ததற்காக மனைவி ஹாலி கோபம் கொள்ளவில்லை என்றும் இதனை அவரும் சேர்ந்தே ரசிப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வீடியோ காட்சிகள் சிரிப்பை வர வைக்கிறது என்றும், ஹாலி நினைப்பதாக கூறும் ஸ்டெச் தன்னைப் பார்த்து சிரித்து ரசிக்கும் அளவுக்கு அவருக்கு பக்குவம் இருப்பதாகவும் பெருமிதப்பட்டுக் கொண்டுள்ளார்.

பாராட்ட வேண்டிய விஷயம் அல்லவா!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: