Posted by: shuhaib | 04/08/2010

7. புத்தியால் வெல்வது.


7. நிலமெல்லாம் ரத்தம்

முன்குறிப்பு: இந்த அத்தியாயத்தில் வருகிற மத குருக்கள், யூதப் பள்ளி ஆசிரியர்களின் ஓவியங்கள் எதுவும் துரதிர்ஷ்ட வசமாக இன்று நமக்குக் கிடைப்பதில்லை. யூதர்கள் தம் செயல்பாடுகளை மிக ரகசியமாக வைத்துக்கொண்ட ஒரு காலகட்டத்தைச் சித்திரிக்கும் அத்தியாயம் என்பதால் சம்பந்தப்பட்ட நபர்களின் ஓவியங்கள் எதுவும் வரையப்பட்டிருக்கவில்லை என்றே கருதவேண்டியுள்ளது.)
மஸதா தாக்குதலுக்கும் அழிவுக்கும் பிறகு பாலஸ்தீனின் கடற்கரையோரப் பகுதிகளில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட யூதர்களுக்கு, வாழ்க்கை எப்போதும் போல் பிரச்னைகள் மிக்கதாகத்தான் இருந்தது. ஆனால் அழிவுகளாலும் இழப்புகளாலும் இடமாற்றத்தாலும் அவர்கள் நிலைகுலைந்து போய்விடவில்லை.
ரோமானியர்களை எதிர்த்து அவர்கள் செய்த கலகங்களும் சிறு புரட்சிகளும் தொடர்ந்து தோல்வியையே தழுவி வந்தாலும் ஒரு சிறிய நம்பிக்கைக்கீற்று அவர்களிடையே இருந்தது.யுத்தத்தால் ஜெயிக்க முடியாதவர்களை புத்தியால் ஜெயித்தால் என்ன?
இதுதான் அவர்களது யோசனையின் ஒருவரிச் சுருக்கம். பின்னாளில் தமது சரித்திரமெங்கும் அறிவாளிகள் என்றும் புத்திசாலிகள் என்றும் ராஜதந்திரம் மிக்கவர்கள் என்றும் குயுக்திக்குப் பேர்போனவர்களாகவும் யூதர்கள் சித்திரிக்கப்பட்டதற்கெல்லாம் ஆரம்பம் இங்கேதான் நிகழ்கிறது.
அன்றைய ஜெருசலேம் யூதர்களிடையே இத்தகைய யோசனையை முன்வைத்து, நம்பிக்கையூட்டியவர்கள், சில துறவிகள். யூதத் துறவிகள். ரோமானியர்களால், ஜெருசலேம் ஆலயம் இடிக்கப்படுமுன்பே பல்லாண்டுகளாக அக்கோயிலில் வசித்துவந்த ஜொஹனன் பென் ஸகாய் (Johannan Ben Zachai) என்கிற துறவி அவர்களுள் முக்கியமானவர்.
ஸகாயின் யோசனை என்னவென்றால், ரோமானியர்களின் தனிச்சிறப்பாக என்னென்ன உள்ளதோ, அவற்றையெல்லாம் யூதர்களும் முதலில் பெறவேண்டும். அவர்கள் கல்வியில் சிறந்தவர்கள் என்றால், யூதர்களும் கல்வியில் சிறந்தவர்களாக ஆகிவிடவேண்டும். அவர்கள் பணபலம் படைத்தவர்கள் என்றால் நாமும் பணத்தைப் பெருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
அவர்களது கலாசாரப் பெருமைக்கு யூதர்களின் பெருமை எள்ளளவும் குறைந்ததல்ல என்பதை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டவேண்டும். நமது தேசத்துக்குள் வேண்டுமானால் யாரும் ஊடுருவலாமே தவிர, நமது இனத்துக்குள் அது முடியாது என்பதை நிரூபிக்க வேண்டும். பிரித்து வாழ வைத்தாலும் மனத்தால் ஒன்றாகவே எப்போதும் இருப்பவர்கள் என்பதை ஆணித்தரமாக உணரச் செய்யவேண்டும்.
மாபெரும் யூத சாம்ராஜ்ஜியம் ஒன்றை நிறுவுவது என்கிற பெருங்கனவின் முதல் செங்கல், இந்த யூதத் துறவியினாலேயே முதல்முதலில் எடுத்து வைக்கப்பட்டது. “புத்தியால் வெல்வது” என்கிற அவரது வார்த்தைகள் ஒவ்வொரு யூதரின் மனத்திலும் மந்திரம் போல பரவிப் படர்ந்தது.

அன்று தொடங்கி, அவர்கள் கிளர்ச்சி செய்வதை அறவே நிறுத்தினார்கள்.
மாறாக, தம் சந்ததியினருக்கு முறையான கல்வி அளிப்பதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள்.ஸகாய், வேறு சில யூத மத குருக்களையும் அழைத்துக்கொண்டு ரோமுக்குப் போனார். சக்கரவர்த்தியைச் சந்தித்து, ஜுதேயா யூதர்கள் இனி கிளர்ச்சி செய்யமாட்டார்கள் என்று நம்பிக்கை அளித்தார்.
ரோமானிய ஆளுகைக்கு உட்பட்ட குடிமகன்களாகவே அவர்கள் நடந்துகொள்வார்கள் என்று வாக்களித்து, பதிலுக்கு ஒரே ஒரு உத்தரவாதத்தை மட்டும் கேட்டார்.
பாலஸ்தீன் நிலப்பரப்பின் கடற்கரையோர கிராமங்களிலும் நகரங்களிலும் யூதக் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களை ரோமானியப்படை இடிக்கக் கூடாது. அங்கே யூத சாதுக்கள் மதப்பாடங்களை நடத்துவதற்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது.
ரோமானிய மன்னர் இந்த எளிய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். பள்ளிக்கூடங்களை இடிக்கக்கூடாது; மதபோதனைகளைத் தடை செய்யக்கூடாது. அவ்வளவுதானே என்று அவர் நினைத்திருக்கலாம்.
ஆனால், இதற்குள் ஒரு சூட்சுமம் இருக்கிறது. ஸகாயின் கோரிக்கை, யூதகுலமே அழியாமல் தடுப்பதற்கான ஒரு கேடயம். கல்வி வளர்ந்து, மதமும் தழைப்பது என்றால் என்ன அர்த்தம்? அதைக்காட்டிலும் யூத குலத்துக்கு ஒரு பெரிய பாதுகாப்பு ஏது?

சுயராஜ்ஜியம் என்றைக்கு வேண்டுமானாலும் கிடைக்கலாம். அதற்காக எப்போது வேண்டுமானாலும் போராடலாம், வெற்றி பெறலாம். முதலில் இனம் அழியாமல் காப்பதல்லவா முக்கியம்? மதம் காணாமல் போய்விடாதவாறு தடுப்பதல்லவா முக்கியம்?
அதுவும் எப்படிப்பட்ட காலகட்டம் அது! காட்டுத்தீ மாதிரி மத்தியக் கிழக்கு முழுவதும் கிறிஸ்தவம் பரவிக்கொண்டிருந்தது. பல யூதர்கள் கிறிஸ்தவர்களாக மாறிக்கொண்டிருந்தார்கள். சிறு தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பல அராபிய இனக்குழுக்களும் மொத்தமாக கிறிஸ்தவத்தைத் தழுவிக்கொண்டிருந்தன.
அராபிய நிலப்பரப்பைத் தாண்டி, ஐரோப்பாவிலும் கிறிஸ்தவம் காலெடுத்து வைக்க ஆரம்பித்திருந்தது.பாலஸ்தீன் முழுவதுமே கிறிஸ்தவ மிஷனரிகள் தழைத்தோங்கத் தொடங்கியிருந்தது. அணி அணியாகப் பாதிரியார்கள் தேசம் கடந்து பிரசாரத்துக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். கிறிஸ்தவம் எந்த நாட்டுக்குப் போகிறதோ, அந்த நாட்டின் நடை உடைகளை, கலாசாரத்தை அப்படியே ஏற்றுக்கொண்டது.
அந்தந்த நாட்டு மக்கள் பேசும் மொழியிலேயே கிறிஸ்தவம் பேசப்பட்டது. புதியதொரு திணிப்பாக அல்லாமல், புதியதொரு தரிசனமாகவே கிறிஸ்தவம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மிகச்சுருக்கமாகச் சொல்லுவதென்றால், யூதமதத்தின் எளிய, ஆனால் செம்மைப்படுத்தப்பட்ட வடிவமாகவே ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவம் பார்க்கப்பட்டது.

இது சநாதன யூதர்களுக்கு மாபெரும் இடைஞ்சலாக இருந்தது. எண்ணிக்கையில் குறைவானவர்கள் என்றபோதும் யூதர்களின் மதம் எத்தனை சிறப்பு மிக்கது, புராதனமானது என்பதையெல்லாம் தம் குலத்தைச் சேர்ந்தவர்களுக்கே எடுத்துச் சொல்லியாக வேண்டிய கட்டாயம் யூத குருமார்களுக்கு இருந்தது.
இதற்காகவாவது யூதப்பள்ளிக்கூடங்களில் “தோரா”வைச் சொல்லிக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. ஸகாய் குருவுக்கு ரோமானியச் சக்கரவர்த்தி அளித்த உத்தரவாதம் இதற்குச் சாதகமாக அமைந்ததில் வியப்பில்லை அல்லவா?
ஆகவே, யூதர்கள் கிளர்ச்சியை நிறுத்தினார்கள். அறிவுப்புரட்சியை ஆரம்பித்தார்கள். பெற்றோர்கள் தம் குழந்தைகளைத் தவறாமல் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பத் தொடங்கினார்கள். தாமும் மிகத்தீவிரமாக மதக் கடமைகளைச் செய்யத் தொடங்கினார்கள்.

உழைக்கும் நேரமெல்லாம், வேறு சிந்தனையில்லாமல் உழைப்பது. சம்பாதிப்பதை கவனமாகச் சேமிப்பது. ஓய்வு நேரத்தில் பிரார்த்தனைகள், பிரசங்கங்கள் கேட்பது. கோயிலுக்குத் தவறாமல் செல்வது. குழந்தைகளின் படிப்பில் தீவிர கவனம் செலுத்துவது. அவர்களை மதத்தின் பாதையிலிருந்து வழுவாமல் பாதுகாப்பது. மேலோட்டமாகப் பார்ப்பதற்கு இதெல்லாம் ஒன்றுமேயில்லாத காரியங்களாகத் தோனன்றலாம்.
ஆனால் அன்றைக்கு ஒட்டுமொத்த ஜுதேயா யூதர்களும் இவற்றை ஒரு வேள்வி போலச் செய்தார்கள். தம்மைச் சுற்றி அவர்கள் எழுப்பிக்கொண்ட பெருஞ்சுவரின் அடிக்கற்களாக அமைந்தது, கல்விதான். இதில் சந்தேகமே இல்லை.

இன்றைக்கும் சர்வதேச அளவில் தொழில்நுட்பத்திலும் நவீன வேளாண்மையிலும் தலைசிறந்தவர்களாக யூதர்களே விளங்குவதைப் பார்க்கலாம். இந்த வளர்ச்சிக்கான வித்து அன்று ஊன்றப்பட்டதுதான்.
இதனிடையில், யூத மதகுருக்களின் அதிகாரபீடத்தில் நம்ப முடியாத அளவுக்குச் சில கொள்கை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. ரபன் கமால்யேல் (Rabban Gamaliel) என்கிற மதப்பள்ளி போதகர், மதச் சடங்குகளில் சில மாற்றங்களை வலியுறுத்தி, காலத்தின் தேவைக்கேற்ற வகையில் புதிய யோசனைகளை முன்வைத்தார்.
மத நம்பிக்கைகளுக்குப் புறம்பான யோசனைகள் அல்ல அவை. மாறாக, மக்கள் மத்தியில் மதப்பற்று மேலும் அதிகரிக்க வழிசெய்யும் யோசனைகள். உதாரணமாக, அந்நாளைய யூதர்கள் தாம் செய்த பாவங்களைப் போக்கிக்கொள்ள கால்நடைகளை பலி கொடுப்பது என்கிற வழக்கத்தை வைத்திருந்தார்கள். இது பிற்போக்கான செயல் எனக் கருதிய மதப்பள்ளிக்கூட ஆசிரியர்கள் சிலர், “கால்நடைகளை பலியிட்டுப் பாவத்தைப் போக்கிக்கொள்வதைக் காட்டிலும் அவற்றின்மீது முன்னைக்காட்டிலும் பேரன்பைச் செலுத்திப் பராமரித்தும் பாவம் போக்கிக்கொள்ளலாம்” என்று சொன்னார்கள்.
ஜொஹனன் பென் ஸகாய் போன்ற குருமார்களும் பேரன்பைக் காட்டிலும் பெரிய பரிகாரமில்லை என்று அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொல்லி மக்களை பலியிடும் பழக்கத்திலிருந்து மீட்டார்கள்.
இது யூத மதகுருமார்களின் சபையில் கணிசமான மாறுதல்களை விளைவித்தது. அதுவரை தனியரு அதிகாரபீடமாக மதகுருக்களின் சபை மட்டுமே விளங்கி வந்த நிலைமை மாறி, பள்ளி ஆசிரியர்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்தது. ஆசிரியர்களும் குருமார்களும் சம அந்தஸ்து உள்ளவர்களாக அறியப்பட்டார்கள். அதாவது, மதகுருக்களுக்கு அளிக்கப்பட்டுவந்த அதே அளவு மரியாதை கல்வியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் “ரபி” (Rabbi) என்று அழைக்கப்படத் தொடங்கினார்கள்.
ஒட்டுமொத்த யூத குருமார்களும் இந்த மாறுதலை ஏற்கவில்லை என்றாலும் பெரும்பாலான குருமார்கள் காலத்தின் தேவை கருதி, கல்வியாளர்களைத் தங்களுக்குச் சமமானவர்களாக அங்கீகரிக்கவே செய்தார்கள். ரபன் கமால்யேல், இது தொடர்பான விழிப்புணர்வை ஊட்டுவதற்காக சிரியா, ரோம் என்று யூதர்கள் அதிகம் வாழ்ந்துவந்த பிற நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார்.காலடியில் இட்டு

நசுக்கப்படும் ஒரு சமூகம் எழுந்து நிற்கவேண்டுமென்றால் கல்வி வளர்ச்சியினால் மட்டுமே அது சாத்தியம் என்பதே அப்போதைய ஜுதேயா யூதர்களின் தாரக மந்திரம். இந்தக் காரணத்தினால்தான் அவர்கள் கல்வியாளர்களை மதகுருக்களுக்கு நிகரான அந்தஸ்தில் வைத்தார்கள். அவர்கள் சொன்னதையெல்லாம் கேட்டார்கள். கிடைத்த அறிவுச் செல்வத்தையெல்லாம் மனத்தில் இருத்திக்கொண்டார்கள்.
அடுத்துச் செய்யவேண்டியதென்ன என்கிற கட்டளைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.நாற்பத்தைந்து வருடங்கள்.அதாவது, ஜெருசலேம் கோயில் இடிக்கப்பட்ட கி.பி. 70-ம் ஆண்டு தொடங்கி கி.பி.115-ம் ஆண்டு வரை அவர்களுக்கு வேறு சிந்தனையே இருக்கவில்லை.
கற்பது. கற்றதைச் சொல்லிக்கொடுப்பது. மதக்கடமைகளை விடாமல் செய்வது. யூத இனத்துக்குள் ஊடுருவல் இல்லாமல் பாதுகாப்பது. (அதாவது கிறிஸ்தவம் மேலும் பரவாமல் தடுப்பது.) கிளர்ச்சி, புரட்சி என்று இறங்காமல், ஒழுங்காகத் தொழில் செய்து வருமானத்தைச் சேமிப்பது.சாதாரண விஷயங்கள்தாம்.
ஆனால் அசாதாரண கவனம் செலுத்தி இவற்றை அவர்கள் செய்தார்கள். மிகக் கவனமாக, தமது இந்த முடிவையும் செயல்பாடுகளையும் பிற தேசங்களில் குறிப்பாக ரோமானிய ஆதிக்கத்துக்குட்பட்ட நாடுகளில் வசிக்கும் யூதர்களுக்கும் தெரியப்படுத்தி, அவர்களையும் இதனைக் கடைப்பிடிக்கச் செய்திருந்தார்கள், பாலஸ்தீன யூதர்கள்!
அந்த நாற்பத்தைந்து ஆண்டுகளை, அவர்கள் தவமிருந்த ஆண்டுகள் என்றே சொல்லவேண்டும்.கி.பி. 115-ல் அவர்கள் தம் தவத்தைக் கலைத்தார்கள். முதல்முதலில் எகிப்திலும் லிபியாவிலும் வசித்து வந்த யூதர்கள், அங்கே இருந்த ரோமானிய ஆட்சியாளர்களை எதிர்த்துப் புரட்சியில் குதித்தார்கள்.

“ஏதோ ஒரு அசுரசக்தி அவர்களை இயக்கியது போல நடந்துகொண்டார்கள்” என்று அச்சம்பவத்தை வருணிக்கிறார் ஒரு ரோமானிய சரித்திர ஆசிரியர்.
இரு தேசங்களிலும் என்ன நடக்கிறது என்று விளங்கிக்கொள்ளும் முன்னரே மத்திய தரைக்கடலில் உள்ள சைப்ரஸ் தீவில் வசித்து வந்த யூதர்கள், அங்கே ஆட்சி அதிகாரத்தில் இருந்த கிரேக்க கவர்னருக்கு எதிராகப் புரட்சியில் குதித்தார்கள்.
பார்வையை அந்தப் பக்கம் திருப்புவதற்கு முன்னால் இங்கே மெசபடோமியா என்று அழைக்கப்பட்ட ஈராக்கில் ரோமானிய ஆட்சியாளருக்கு எதிராக யூதர்கள் யுத்தம் தொடங்கினார்கள்.எகிப்து, லிபியா, சைப்ரஸ், ஈராக். ஒரே சமயத்தில் இந்த நான்கு தேசங்களில் வசித்து வந்த யூதர்கள் சுதந்திர தாகம் கொண்டு புரட்சியில் குதித்தது, மத்தியக்கிழக்கு முழுவதையும் பெரும் பரபரப்புக்குள்ளாக்கியது. ரோம் தலைமையகம் கவலை கொண்டது.
அமைதியாக அடங்கியிருந்த யூதர்களுக்கு திடீரென்று என்ன ஆனது? இந்தப் புரட்சிகளின் வேர் எங்கிருந்து தொடங்குகிறது?
அவர்களுக்குப் புரியவில்லை. ஏனெனில் இத்தனை

களேபரத்துக்கு நடுவிலும் பாலஸ்தீன யூதர்கள் அதே நாற்பத்தைந்தாண்டுகால அமைதியைத்தான் அப்போதும் மேற்கொண்டிருந்தார்கள். புரட்சி வாசனை ஏதும் அங்கிருந்து வரவில்லை.
உண்மையில், ஜெருசலேமிலிருந்து வலுக்கட்டாயமாக கடலோர கிராமங்களுக்கு விரட்டப்பட்ட ஜுதேயா நகரின் யூதர்களல்லவா புரட்சியில் ஈடுபட்டிருக்கவேண்டும்?
யூதர்களின் அந்தத் திட்டமிட்ட புரட்சி ரோமானியர்களுக்குப் புரியவில்லை என்பதையே பாலஸ்தீன யூதர்கள் தமக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் கருதினார்கள். நீண்ட நெடுங்காலத்துக்குப் பிறகு முதல் முறையாக அவர்கள் முகத்தில் ஒரு குறும்புப் புன்முறுவல் எட்டிப்பார்த்தது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: