Posted by: shuhaib | 08/08/2010

தலைவலி


இது மிகவும் பொதுவாகக் காணப்படுகின்ற மற்றும் பலர் பொது வைத்தியரையோ நரம்பியல் நிபுணரையோ நாடுவதற்கு காரணமான நோயறிகுறியாகும். ஒருவரின் நாளாந்த நடவடிக்கைகளை மிகவும் பாதிப்பதாக இருப்பினும் அநேகமானவர்களில் ஆபத்தற்ற தலைவலியாகவே காணப்பட்டுகிறது. 90% ஆனவர்களில் பின்வரும் மூன்று காரணிகளில் ஒன்றே காணப்படுகின்றது.

1.ஒற்றைத்தலைவலி

2.அழுத்தத்தாலான தலைவலி

3.கூட்டாக வரும் தலைவலி

மேலும் தலைவலியினை பிரதானமாக இரு பிரிவாகப் பிரிக்கலாம்

  • முதன்மையான தலைவலி
  • இரண்டாம் பட்சமான தலைவலி – தலைவலியானது பிரதான நோயாக அன்றி வேறு நோய்களின் அறிகுறியாகக் காணப்படுகிறது.

முதன்மையான தலைவலி

இதனுள் 3 வகையான தலைவலிகள் அடங்குகின்றன.

1.அழுத்தத்தாலான தலைவலி

2.ஒற்றைத்தலைவலி

3.கூட்டாக வரும் தலைவலி

இரண்டாம் பட்சமான தலைவலிகள்

இவற்றை மேலும்,

1.உடனடியான ஆபத்தற்ற தலைவலிகள்

2.ஆபத்தான தலைவலிகள்

எனப் பிரிக்கலாம்.

உடனடியான ஆபத்தற்ற தலைவலிகள்.

1.சில பதார்த்தங்களை பாவிப்பதாலோ அல்லது விலக்குவதாலோ ஏற்படும் தலைவலிகள். உ-ம். மதுபானங்கள், போதைப்பொருட்கள் மற்றும் சில மருந்து வகைகள் போன்றன.

2.தலை மற்றும் கழுத்துப் பகுதி அங்கங்களில் ஏற்படும் சில ஆபத்தற்ற நோய்களின் அறிகுறியாக காணப்படும் தலைவலிகள்.

உ-ம். கண்களில் பார்வைக்குறைபாடு, காது, முக என்புக்குழிகள், பற்களில் கிருமித்தொற்று போன்றன.

3.உளவியல் பிரச்சனைகள் காரணமாக ஏற்படும் தலைவலி.

உ-ம். மன இறுக்கம்/மனச்சோர்வு.

ஆபத்தான தலைவலிகள்.

மிகச்சிலரிலேயே இவை தலைவலிக்குரிய காரணிகளாக அறியப்பட்டுள்ளன.

1.தலை,கழுத்துப் பகுதிகளில் அடிகாயம் காரணமாக ஏற்படும் தலைவலிகள்.

2.மூளைமென்சவ்வு அழற்சி மற்றும் மூளை அழற்சி (என்செபலைறிஸ்) காரணமாக ஏற்படும் தலைவலி.

3.தலை மற்றும் கழுத்துப்பகுதியில் உள்ள குருதிக்கலன்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் தலைவலி.

உ-ம். மூளையினுள்/மூளை மென்சவ்வுகளுக்கிடையில் இரத்தக்கசிவு(Intracranial haemorrhage/sub arachnoids haemorrhage) குருதிக்கலன்களின் அழற்சி(giant cell arteritis/ temporal arteritis).

4.சில அனுசேப சிக்கல்கள் காரணமாக ஏற்படும் தலைவலி. உ-ம் சிறுநீரகம் பழுதடைதல், ஈரல் பழுதடைதல் போன்றன.

5.தலையோட்டினுள் அழுத்தம் அதிகரிப்பதன் காரணமாக ஏற்படும் தலைவலி

உ-ம். மூளையில் ஏற்படும் கட்டிகள் (இரத்தக் கட்டிகள், புற்றுநோய்க் கட்டிகள், சீழ்க்கட்டிகள் போன்றன).

6.மூளைய முண்ணான் பாய்பொருளின் சுற்றோட்டத்தில் ஏற்படும் சிக்கல்கள் காரணமான தலைவலி.

தலைவலி நோய் நிர்ணயம்.

பொதுவாக வைத்தியர்களால் நோயாளியின் நோய்ச்சரிதை மற்றும் நோயாளியை உடற்பரிசோதனைக்குட்படுத்திப் பெறப்படும் தகவல்களைக் கொண்டு தலைவலியின் வகையினைத் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும். சிலரில் ஒன்றுக்கு மேற்பட்ட வகையான தலைவலிகள் ஒரே சமயத்தில் காணப்படலாம். அநேகமானோரில் X கதிப்பரிசோதனையோ ஏனைய கதிர்ப்படங்களோ அவசியமன்று. ஆயினும் சில சந்தர்ப்பங்களில் CT ஸ்கான் பரிசோதனை/MRI ஸ்கான் பரிசோதனை அவசியப்படுகிறது். உ-ம்:

  • நோயறிகுறிகள் குறிப்பிட்ட வகையான தலைவலிக்குரியவையாக தீர்மானிக்க முடியாதவிடத்து.
  • ஆபத்தான நோய் அறிகுறிகள் காணப்படும் போது.
  • நோயாளியின் நோய்ப்பரிசோதனையின் போது பெறப்படும் அசாதாரண தகவல்களுக்கமைய.
  • சிகிச்சை பயனின்றி தலைவலி தொடர்ந்து தீவிரமடையும் போது.
  • திடீரென வேறு விதமாக மாற்றமடையும் போது.
  • வேறு நோய்க்குரிய  அறிகுறிகளை கொண்டிருக்கும் போது

நோய்சரிதை

பொதுவாக வைத்தியர்களால் கேட்கப்படும் தலைவலி தொடர்பான தகவல்கள்.

1.     தலைவலி உருவான காலப்பகுதி மற்றும் அதன் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள், தொடர்ச்சியான தன்மை/ விட்டு விட்டு ஏற்படுதல்/ தினசரி ஏற்படுதல், தற்போது வைத்திய ஆலோசனை பெற அணுகுவதற்குரிய காரணங்கள்.

2. தலைவலியின் தன்மை, தீவிரம், உணரப்படும் பகுதி மற்றும் வலி பரவும் விதம், தலைவலியுடனான ஏனைய அறிகுறிகள்.

3. தலைவலியை உருவாக்கும் காரணிகள் பற்றிய தகவல்கள், தீவிரப்படுத்தும் மற்றும் நிவாரணமளிக்கும் காரணிகள், தூண்டும் காரணிகள், பாரம்பரியமாக குடும்பத்தில் காணப்படும் தலைவலிகள்.

4. வலிநிவாரணம் பற்றிய தகவல்கள், தலைவலியின் போது நோயாளி மேற்கொள்ளும் நடவடிக்கைகள், நோயாளியின் நாளாந்த நடவடிக்கைகளில் ஏற்படுத்தும் பாதிப்பு, உபயோகிக்கும் மருந்து வகைகள்.

5. தலைவலி அற்ற வேளைகளில் நோயாளியின் உடல்நிலை. முற்றான ஆரோக்கியமான நிலை அல்லது தொடர்ச்சியான தீவிரமற்ற அறிகுறிகள் காணப்படல்.

6. நோயாளியின் மனநிலை,தலைவலிக்குரிய காரணிகள் மற்றும் அடிக்கடி ஏற்படுவது பற்றிய பயம், மன உளைச்சல் போன்றன

நோய்ப் பரிசோதனை

பூரணமான உடற்பரிசோதனை நோயாளிக்கு மனத்திருப்தியை வழங்குவதுடன் வைத்திய ஆலோசனைகளை மீண்டும் மீண்டும் நாடுவதை தவிர்க்க உதவும்

1.   கண் பரிசோதனை – பிரதானமாக விழித்திரையைப் பார்வையிட வேண்டியது அவசியம்

2. இரத்த அழுத்தம் அளவிடப்பட வேண்டும். உயர் இரத்த அழுத்தம் மிகச்சிலரிலேயே தலைவலியை ஏற்படுத்துகிறது. ஆனால் இது பலராலும் பொதுவாக கருதப்படும் ஒரு காரணியாகும். உயர் இரத்த அழுத்தம் வேறு வகையான தலைவலிகளையும் ஏற்படுத்தலாம். உ-ம் – ஒற்றைத்தலைவலி. அவ்வாறே தலைவலி நிவாரண மருந்துவகைகள் குருதி அழுத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்

3.  தலை கழுத்துப்பகுதித் தசைகள் இறுக்கமடைந்திருத்தல்.

ஆபத்தான தலைவலிக்குரிய அறிகுறிகள்

அநேகமான தலைவலிகள் ஆபத்தற்றவை. ஆயினும் பின்வரும் அறிகுறிகளில் ஏதாவது காணப்படும் போது உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுவது மிக அவசியமாகும்.

1.திடீரென ஏற்படும் மிகத்தீவிரமான தொடர்ச்சியான தலைவலி/சில விநாடிகளில் தீவிரமடையும் அல்லது வாழ்நாளில் மிகமோசமான தலைவலி.

2.தீவிரமான தலைவலியுடன் காய்ச்சல் அல்லது கழுத்தின் பின்பகுதி வலி காணப்படுதல்.

3.தலைவலியுடன் வலிப்பு, நடத்தையில் மாற்றம், மனக்குழப்பம், மூர்ச்சை இழத்தல் போன்றன காணப்படும் போது

4.தீவிர உடற்பயிற்சியின் பின்னர் அல்லது தலையில் சிறுகாயங்களின் பின்னர் ஏற்படும் தலைவலி

5.சில நரம்பியல் சம்பந்தமான அறிகுறிகளுடன் காணப்படும் புதிதாக உருவான தலைவலிகள் உ-ம். கைகால்களில் திடீர் பலனிழப்பு/ உணர்ச்சியின்மை, பார்வைக்குறைவு போன்றன. இவை ஒற்றைத் தலைவலி காரணமாகவும் ஏற்படக்கூடியதாக இருப்பினும் இவை முதன்முதலாக ஏற்படும் போது உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்துவது அவசியம்.

6.மேலும் தலைவலி தொடர்ச்சியாக அல்லது அடிக்கடி ஏற்படும் போது அல்லது நாளாந்த நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் போது அல்லது முன்னைய தலைவலியிலிருந்து வேறுபடும் போது ஒரு வைத்தியரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

மூளையில் ஏற்படும் கட்டிகள் காரணமான தலைவலி

மூளையில் கட்டிகளையுடையவர்களில் 50% ஆனவர்களிலலேயே தலைவலி ஓர் குணங்குறியாக காணப்படுகிறது. தலைவலி மிகப்பொதுவான நோயறிகுறியாக இருப்பினும் மூளையில் ஏற்படும் கட்டிகள் மிகமிகச் சிலரிலேயே காணப்படுகிறது. பொதுவாக மூளையில் கட்டிகள் காரணமாக ஏற்படும் தலைவலியானது நெடுநாட்பட்ட தலைவலியாகவும் குனியும் போது மற்றும் இருமும் போது தீவிரமடைவதாகவும் தலைவலியுடன் வாந்தி அல்லது வாந்தி ஏற்படுவது போன்ற உணர்வுடையதாகவும் காணப்படலாம். ஆயின் சில மற்றைய வகைத்தலைவலிகளிலும் கூட இவ்வகையான அறிகுறிகள் காணப்படலாம். உ-ம். ஒற்றைத்தலைவலி


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: