Posted by: shuhaib | 12/08/2010

10. கான்ஸ்டன்டைன்.


நிலமெல்லாம் ரத்தம் – 10
கி.பி. 313-ல் அது நடந்தது. யாரும் அவ்வளவாக எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக ரோமிலிருந்த கிறிஸ்துவர்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.கிறிஸ்துவம் பரவத் தொடங்கிய காலத்தில் அது எத்தனைக்கெத்தனை அடித்தட்டு மக்களைக் கவர்ந்திழுத்ததோ அதே அளவுக்கு ஆட்சியாளர்களின் விரோதத்தைச் சம்பாதித்துக்கொண்டும் இருந்தது. ஐரோப்பாவெங்கும் கிறிஸ்துவப் பாதிரியார்கள் இயேசுவின் மகிமையைக் கொண்டுசேர்க்கப் போன வழிகளிலெல்லாம் ஏராளமான எதிர்ப்புகளையும் அவமானங்களையும் கடுமையான தண்டனைகளையும்தான் சந்தித்துக்கொண்டிருந்தார்கள்.


யூதர்கள் இயேசுவுக்கு இழைத்ததைக் காட்டிலும் அதிகமாகவே கிறிஸ்துவப் பாதிரியார்கள் பலர் ஐரோப்பாவில் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது.ஆயினும் மனம் சோராமல் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளின் பலன் என்றுதான் அதனைச் சொல்லவேண்டும். முதல் முதலாக கான்ஸ்டன்டைன் என்கிற ரோமானிய மன்னன் கிறிஸ்துவத்தை நம்பி ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் அம்மதம் பரவுவதற்கும் தன்னாலான முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினான்.


இது ரோமில் வசித்துவந்த கிறிஸ்துவர்களுக்கு மட்டுமல்லாமல் மத்தியக்கிழக்கில் ரோமானியக் காலனிகளில் வசித்துவந்த அத்தனை கிறிஸ்துவர்களுக்குமே மிகப்பெரிய நன்மையானது. அதுவரை யூதர்களும் கிறிஸ்துவர்களும் தம் மத வழக்கங்களைப் பின்பற்றி வாழ்வதில் ஏராளமான சிக்கல்கள் இருந்துவந்தன. ரோமானியச் சக்ரவர்த்தியைத்தான் வழிபடவேண்டும் என்கிற உத்தரவுக்குக் கீழ்ப்படியவும் முடியாமல் எதிர்க்கவும் வழியில்லாமல் நரக அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தார்கள்.


இப்போது மன்னரே கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொண்டு இயேசுவின் பெருமைகளைப் பரப்ப முன்வந்து விட்டதால் அவர்களுக்கிருந்த மாபெரும் பிரச்னை அடிபட்டுப் போனது. கிறிஸ்துவ குருமார்கள் பாடுபட்டுச் செய்துகொண்டிருந்த காரியத்தை ரோமானிய மன்னனின் அந்த மதமாற்றம் மிகச் சுலபமாக்கிவிட்டது. ரோமில் மட்டுமல்லாமல் ஏனைய ரோமானியக் காலனிகளெங்கும் கிறிஸ்துவத்துக்கு மாறும் மக்களின் சமூக அந்தஸ்து மிக உயர்ந்ததாக மதிப்பிடப்பட்டது.

அவர்களும் அடிமைத்தளையில் வாழ்வதாக அல்லாமல் ஒரு “கிறிஸ்துவ சாம்ராஜ்ஜியத்தின் பிரஜைகள்” என்கிற பெருமித உணர்வுடன் வாழத் தொடங்கினார்கள்.
யூதர்களின் வாழ்வியல் போராட்ட வரலாற்றில் ரோமானிய மன்னன் கான்ஸ்டன்டைன் கிறிஸ்துவத்துக்கு மாறிய சம்பவம் மிக முக்கியமானதொரு கட்டம். பொதுமக்கள் மதம் மாறுவதற்கும் அந்நாளில் ஒரு மன்னனே வேறொரு மதத்தை அங்கீகரித்து ஏற்பதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு.


அதுவும் தன்னைத்தான் மக்கள் வணங்கவேண்டும் என்று உத்தரவு போட்டுக்கொண்டிருந்த சக்ரவர்த்திகளின் வம்சத்தில் வந்த ஒருவன்! சக்ரவர்த்தியே தன்னை வணங்கச் சொல்லுவதை விடுத்து இயேசுவின் போதனைகளை ஏற்று மதம் மாறுகிறார் என்றால் நிச்சயம் கிறிஸ்துவத்தை விட மேலானதொரு மதம் இருக்க முடியாது என்று மத்தியக் கிழக்கில் ரோமானியக் காலனிகளில் வசித்து வந்த பாமர யூதர்களும் அரேபியர்களும் கருதத் தொடங்கினார்கள்.


இச்சம்பவம் ரோமானிய ஆட்சி எல்லைக்கு வெளியே இருந்த பல இடங்களிலும் தீவிர சிந்தனைக்கு வித்திட்டதைக் குறிப்பிடவேண்டும். முக்கியமாக “இயேசுவைக் கொன்ற இனம்” என்கிற குற்றஉணர்ச்சிக்கு ஆட்பட்டிருந்த யூதர்கள் அத்தனை பேருமே கண்ணை மூடிக்கொண்டு இதன்பின் கிறிஸ்துவத்துக்கு மாறத்தொடங்கினார்கள்.


இதனால் பிரசாரங்களுக்குப் போகும் கிறிஸ்துவப் பாதிரியார்களுக்கு பிரச்னைகள் குறைய ஆரம்பித்தன. கல்லடிகள் கட்டிவைத்து எரித்தல் சூடு போடுதல் என்று அவர்கள் அதுவரை போகிற இடங்களிலெல்லாம் பட்ட எத்தனையோ பல கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கின.


பாதிரியார்களின் வருகையைச் சகிக்க முடியாதவர்கள் கூட மௌனமாக முணுமுணுத்துக்கொண்டு ஒதுங்கிப் போனார்களே தவிர முன்னைப்போல் தொந்தரவுகள் தருவதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டார்கள். மறுபுறம் ரோமானிய மன்னன் கான்ஸ்டன்டைன் மதம் மாறியதன் விளைவாக யூதர்களும் அரேபியர்களும் அல்லாத பிற சிறுதெய்வ வழிபாட்டாளர்களும் கிறிஸ்துவத்துக்கு மாற முன்வந்தார்கள்.


ரோம் நகரிலேயே வசித்துவந்தவர்கள் அவர்கள். அவர்கள் மூலமாகத்தான் ரோம் நகருக்கு வெளியே ஐரோப்பா முழுவதுமே கிறிஸ்துவம் கம்பீரமாகத் தலை நிமிர்த்திப் பரவ ஆரம்பித்தது.
இதில் யூதர்களின் பிரச்னை என்ன?முதலாவது தர்மசங்கடம். தத்துவங்களின் உட்புகுந்து பார்க்கத் தெரியாத விரும்பாத பாமர மக்களிடையே கிறிஸ்துவம் வேகமாகப் பரவிக்கொண்டிருந்தாலும் படித்தவர்கள் மத்தியில் அப்போதும் கிறிஸ்துவம் என்பது “யூத மதத்தின் சுத்திகரிக்கப்பட்ட வடிவம்” என்பதான கருத்தாக்கமே மேலோங்கி இருந்தது.


யூதமதம் உலகின் ஆதி மதங்களுள் ஒன்று. மிகப் புராதனமானது. நீண்ட பாரம்பரியம் கொண்டது. ஆயினும் செம்மைப்படுத்தப்படாத வடிவம் கொண்டது. யூத மதத்தின் பிற்கால குருமார்கள் சிறுதெய்வ உருவ வழிபாடுகளை அங்கீகரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மதச் சடங்குகளைத் தம் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளத் துணிந்துவிட்டார்கள்.

அதையெல்லாம் விமர்சனம் செய்தவர்தாம் இயேசு. புதியதொரு மதத்தை உருவாக்க அல்ல; இருக்கும் யூத மதத்தைத்தான் ஒழுங்குபடுத்த அவர் நினைத்தார். அப்படிப்பட்ட ஒழுங்குக்குக் கட்டுப்பட்டவர்கள்தாம் கிறிஸ்துவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் என்றால் தாமும் ஒரு கிறிஸ்துவராக அடையாளம் காணப்படுவதில் என்ன தவறு என்று அவர்கள் நினைக்கத் தொடங்கினார்கள்.இது சநாதன யூதர்களுக்கு மிகப்பெரிய தலைவலியானது.


கிறிஸ்துவத்தைக் காட்டிலும் யூதமதம் உயர்வானது; இரண்டுக்கும் சம்பந்தமில்லை என்று நிரூபிக்க அவர்கள் துடித்தார்கள். ஆனால் தமது வாதங்களைப் பட்டியலிட்டு விளக்க அவர்களுக்குச் சாத்தியமில்லாமல் இருந்தது.


சக்கரவர்த்தியே கிறிஸ்துவராக இருந்தது காரணம்.யூதர்களின் இரண்டாவது பிரச்னை வழிபாடு தொடர்பானது. அதுவரை மன்னரை வழிபடச்சொல்லி அவர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். தமது மத வழக்கங்களை வழிபாடுகளை அவர்கள் ரகசியமாகவே வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவ்வப்போது ரோமானியச் சக்கரவர்த்தியுடன் ஏதாவது சமரசம் பேசி தமது மத வழக்கங்களைத் தொடருவதற்கு அனுமதி பெற்று வந்தார்கள். இப்போது மன்னரே கிறிஸ்துவத்தை ஏற்று மதம் மாறிவிட்டபடியால் கிறிஸ்துவமே ரோமின் ஆட்சிமதமாகிப் போனது. அதாவது ஆட்சி புரியும் மதம். மன்னரை இனி வழிபடவேண்டாம்; கர்த்தரை வழிபடுங்கள் இயேசுவின் பாதையில் செல்லுங்கள் என்று மன்னர் கான்ஸ்டன்டைன் சொல்லிவிட்டார்.


இது யூதர்களுக்கு சகிக்கமுடியாததொரு விஷயம். மன்னரையே கூட வழிபட்டுவிடலாம் கிறிஸ்துவத்தின் பாதையை எப்படி அவர்கள் ஏற்பார்கள்? ஒருங்கிணைந்து இதற்கு எதிரான குரல் கொடுக்கவும் அவர்களால் முடியவில்லை. சரியான தலைவர்கள் யாரும் அவர்களிடையே அப்போது இல்லை. ஆகவே மனத்துக்குள் மட்டுமே புழுங்கினார்கள்.மூன்றாவதும் மிக முக்கியமானதுமான பிரச்னை பிழைப்பு. ரோமானிய ஆளுகைக்கு உட்பட்டிருந்த அன்றைய பாலஸ்தீனில் கிறிஸ்துவத்துக்கு மாறியவர்களின் வாழ்க்கைத்தரம் மிக வேகமாக உயரத் தொடங்கியது. அரசு வேலைகள் அவர்களுக்கு மிகச் சுலபமாகக் கிடைத்தன.

மேலை நாடுகளுக்குச் சென்று கல்வி பயிலவும் தொழில் செய்யவும் சக்கரவர்த்தி ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தார். கிறிஸ்துவத்துக்கு மாறுவோருக்கு அரசாங்கச் செலவில் நிலங்கள் கிடைத்தன. வீடுகள் வழங்கப்பட்டன. இதெல்லாம் மன்னர் தம் தனிப்பட்ட மகிழ்ச்சியைத் தெரிவிக்க மேற்கொண்ட முயற்சிகள்தாம்.இந்த கிறிஸ்துவப் புரட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டோர் யூதர்கள். அவர்களுக்கு ரோமானியப் பேரரசுக்குள் பிழைப்பதே பெரும்பாடு என்றாகிப்போனது.


வாழ்க்கைத்தரம் உயர்வதற்காக மதம் மாறக்கூடாது என்று உறுதியாக இருந்த சிறுபான்மை யூதர்கள் வேறு வழியில்லாமல் தமது தாயகத்தைத் துறந்து வெளியே போய் வசிக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.ஒரு பெரும் கூட்டமாக அவர்கள் ஸ்பெயினுக்குப் போனார்கள். இன்னொரு கூட்டம் ரஷ்யாவுக்குப் போனது. வேறொரு குழு போலந்துக்குப் போனது. கொஞ்சம் பேர் ஜெர்மனிக்குப் போனார்கள். வடக்கு ஆப்பிரிக்காவின் சில தேசங்களுக்கும் போனார்கள். ரோமானியப் பேரரசுக்கு வெளியே எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் போனார்கள்.


புராண காலத்தில் எகிப்தில் அடிமைகளாக வசித்துக்கொண்டிருந்த யூதர்களை எப்படி மீட்டுக்கொண்டுவரக் கடவுள் மோசஸ் என்னும் தூதரை அனுப்பினாரோ அதே போல ஒரு தூதன் மீண்டும் வருவான் தங்களை மீண்டும் ஜெருசலேமின் மடியில் கொண்டுவந்து சேர்ப்பான் என்கிற ஒரு நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. கண்ணீருடன் அவர்கள் தம் தாய்மண்ணைத் துறந்து ரோமானிய எல்லையைக் கடந்தார்கள்.


சரித்திரத்தில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காகப் பாலஸ்தீனிலிருந்து யூதர்கள் வெளியேறியிருக்கிறார்கள். அவற்றுள் இது மிக முக்கியமானதொரு கட்டம்.
கிறிஸ்துவம் போல இஸ்லாம் போல யூதமதத்தில் “பரவல்” என்கிற ஓர் அம்சம் கிடையாது.


யூத மதத்தில் மதமாற்றம் என்கிற விஷயம் அறவே கிடையாது. யாரும் யூதமதத்துக்கு மாறவேண்டும் என்று அவர்கள் கேட்கமாட்டார்கள். அதேபோல் யூதமதத்திலிருந்து வெளியேறி பிற மதங்களைத் தழுவுவோர் எண்ணிக்கையைக் குறைக்கவும் பாடுபடுவார்கள்.


அப்படியிருக்க எகிப்து, சிரியா, ஜோர்தான், பாலஸ்தீன், லிபியா, ஈரான், ஈராக் போன்ற தேசங்களில் மட்டுமே இருந்த யூதர்கள் எப்படிப் பிற்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் பரவினார்கள், ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஓட ஓட விரட்டப்பட்டார்கள் என்கிற சந்தேகம் எழலாம்.


இந்தச் சம்பவம்தான் அவற்றின் தொடக்கப்புள்ளி. ரோமானியப் பேரரசின் அதிகார எல்லைக்கு வெளியே போய்விடவேண்டும் என்றுதான் முதல் முதலாக அவர்கள் புறப்பட்டது. அவர்களை யாரும் வெளியேற்றவில்லை. அவர்களாகவேதான் வெளியேறினார்கள். அப்படி தேசத்தைவிட்டு வெளியேறியவர்களைத் தடுக்காததுதான் ரோமானிய ஆட்சியாளர்களின் பங்கு.நிம்மதியான வாழ்வை உத்தேசித்து இப்படி இடம் பெயர்ந்த யூதர்கள், குடியேறிய நாடுகளிலும் தனித்தீவுகளாகவே வசிக்கத் தொடங்கினார்கள்.


அதாவது, அந்தந்த நாட்டு மக்களுடன் அவர்கள் கலக்கவில்லை. மாறாக, ஒவ்வொரு நாட்டுக்குப் போகும் யூதர்களும் தனிக் காலனிகளை ஏற்படுத்திக்கொண்டு, யூதக் குடும்பங்களாகவே சேர்ந்து வசிக்கத் தொடங்கினார்கள்


ஸ்பெயினில் இருந்த ஆலிவ் தோட்டங்களில் அவர்களுக்கு வேலை கிடைத்தது. ஒயின் தயாரிப்பில் அவர்கள் ஈடுபட்டார்கள். பிற தேசங்களுக்குப் போன யூதர்கள், நெசவுத் தொழிலிலும், ஆடை வியாபாரத்திலும் அதிக கவனம் செலுத்தினார்கள். இத்தாலியில் அவர்கள் பேக்கரிப் பொருள்கள் தயாரித்து விற்பதைப் பிரதான தொழிலாகக் கொண்டார்கள். இன்னும் சிலர் சிறிய அளவில் வர்த்தகக் கப்பல்கள் வாங்கி, வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள்.

ஷிப்பிங் ஏஜெண்டுகளாகவும் பலர் பணியில் அமர்ந்தார்கள்.இடமும் தொழிலும் மாறினாலும் அவர்கள் தம் பழக்கவழக்கங்களையோ, வாழ்க்கை முறையையோ மாற்றிக்கொள்ளவில்லை. எங்குபோனாலும் சுலபத்தில் அடையாளம் கண்டுகொள்ளும் விதமாகவே இருந்தன அவர்களது நடவடிக்கைகள். தமது அடையாளங்களை விட்டுக்கொடுக்க யூதர்கள் ஒருபோதும் சம்மதித்ததில்லை என்பதுதான் மிக முக்கியமான விஷயம். அவர்களது மிகப்பெரிய பலம் அதுதான்.அதுவேதான் பிற்காலத்தில் மாபெரும் பலவீனமாகவும் ஆகிப்போனது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: