Posted by: shuhaib | 22/08/2010

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!


இயற்கை வளங்கள் நிறைந்து சோலையாகக் காணப்பட்ட தமிழகத்தில், மரங்கள் வெட்டப்பட்டு, வனங்கள் அழிக்கப்பட்டதால் வானம் பொய்த்துவிட்டது.  குடிநீருக்கும் பாசனத்துக்கும் அண்டை மாநிலங்களைக் கெஞ்சும் நிலையில் தமிழகம் உள்ளது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகளும் தண்ணீருக்கான போராட்டங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.  ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வரும்போது, மக்களிடம் காவிரிப் பிரச்னையும், பெரியாறு பிரச்னையும் வாக்குறுதிகளாகப் பேசப்படுகின்றன. பதவியேற்ற பின்னர் வெறும் போராட்ட அறிவிப்புகளாகவும், நீதிமன்றங்களை நாடும் அறிக்கைகளாகவும், பரஸ்பரம் ஆளும்கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் அறிக்கைப் போர் நடத்தும் பிரச்னையாகவே காலம் கடந்து கொண்டிருக்கிறது. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை தீர்ப்புகளைத்தான் அளிக்கின்றன. அதைச் செயல்படுத்தும் மனநிலை ஆட்சியாளர்களிடம் இல்லை. காரணம் அரசியலில் நீடிக்க சாதாரணப் பிரச்னையை ஊதிப்பெரிதாக்கி தனது பெயர் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வரவேண்டுமென்றுதான் விரும்புகின்றனர்.””வற்றாத வைகை நதி” வறண்டுபோன ஆறாகக் காட்சியளிக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை, காவிரியில் நீரின்றி சாகுபடிப் பரப்பு குறைந்து நெல் உற்பத்தியில் தன்னிறைவு காண இயலாத நிலையில் உள்ளது. கிராமங்களில் அடிக்கடி கூறப்படும் பழமொழி “”விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை”. இதைத் தமிழக, கேரள, கர்நாடக ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டு, மக்கள் நலக் கண்ணோட்டத்தில் நதிநீர் ஒப்பந்தங்களைச் செயல்படுத்த முன்வர வேண்டும். எங்கிருந்தோ வந்து நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களில் ஒருவரான பென்னி குயிக், கேரளத்தில் இயற்கையாகப் பெய்யும் மழை நீர் அந்த மாநில மக்களுக்குப் பயன்பட்டது போக, வீணாகக் கடலில் கலந்ததைக் கண்டு, தண்ணீரைத் தமிழக மக்களும் பயன்படுத்தும் வகையில் தனது சொத்துகளை விற்று பெரியாறு அணையைக் கட்டி வைத்தார். அந்த நீரைப் பயன்படுத்த இரு மாநிலங்களும் ஒப்பந்தம் போட்டிருந்தன. 1980-ம் ஆண்டு வரை பிரச்னை இன்றி தண்ணீர் கிடைந்துவந்தது. அதன் பின்னர் சிலரது சுயநல அரசியல் நோக்கங்களால் பென்னி குயிக்கின் கனவு சிறிது சிறிதாகச் சாகடிக்கப்பட்டு வருகிறது.  கேரளத்தில் ஆண்டுதோறும் மழை மூலம் சுமார் 2 லட்சம் கனஅடி நீர் கிடைக்கிறது.  இதில் சுமார் 50 ஆயிரம் கனஅடி நீரை மட்டுமே கேரள மக்கள் விவசாயத்துக்காகப்  பயன்படுத்துகின்றனர். சுமார் 1.5 லட்சம் கனஅடி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. கேரள நதிகளான அச்சன்கோயில் ஆறு, பம்பை ஆறு, காக்கை ஆறு, பாண்டியாறு, புன்னம்புழா ஆறு ஆகியவற்றின் மூலம் வீணாகக் கடலில் சேர்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வீணாகக் கடலில் சேரும் மழை நீரைத் தடுக்க, பெரியாறு அணையைப்போல கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,000 அடி உயரத்தில் பல தடுப்பணைகளைக் கட்டலாம். கேரள அரசு மனமுவந்து செயல்பட்டால் இதில் சுமார் ஒரு லட்சம் கனஅடி தண்ணீரைத் தமிழகத்துக்குத் திருப்பிவிட முடியும். இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்கள் செழிப்படையும். இங்கு விளையும் உணவுப் பொருள்களை நாமும் பயன்படுத்த முடியும் என்பதை கேரள ஆட்சியாளர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.நதிநீரைப் பண்டமாற்று முறையில் பகிர்ந்துகொள்ள இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தலாம். அதைவிடுத்து வெறும் அறிக்கைப் போர்களால் எவ்விதப்  பலனும் இல்லை. குறிப்பாக, தடுப்பணைகள் கட்டித் தண்ணீரைத் திருப்பிவிடும்போது, அதில் புனல் மின் நிலையங்கள் அமைக்கவும், மின்சாரம் உற்பத்தி செய்யவும், கிடைக்கும் மின்சாரம் முழுவதையும் கேரள அரசே பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளலாம். கேரளத்திலிருந்து தமிழகத்துக்குத் திருப்பும் வகையில் உள்ள ஆறுகளின் திட்டங்கள் மத்திய அரசின் தேசிய நீர்வள ஆணையத்திடம் உள்ளன. இவற்றைச் செயல்படுத்த இரு மாநில அரசுகளும் முன்வர வேண்டும். சுமார் 10 ஆண்டுகளுக்குள் நிலத்தடி நீர்மட்டம் வெகு வேகமாகக் குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இந்நிலை நீடித்தால் 2020-ம் ஆண்டில் கடும் தண்ணீர்ப் பஞ்சத்தை நாம் எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்கப் பத்திரிகை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.நாம் ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை பெறமுடியம். நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை பேச்சளவிலும், ஏட்டளவிலும் காட்டாமல், செயலில் காட்ட இரு மாநில அரசுகளும் முன்வர வேண்டும். “”கூடிவாழ்ந்தால் கோடி நன்மை” என்பதை இரு மாநில ஆட்சியாளர்களும் புரிந்து செயல்படுத்தினால், நாம் இந்தியர்கள் என பெருமை கொள்வது நிச்சயம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: