Posted by: shuhaib | 26/08/2010

மறைந்து போகாத ‘மனித நேயம்’


உலக வரலாற்றில் மனிதகுலம் மூன்று வகையான தடைகளைத் தாண்டி முன்னேறியுள்ளது. முதலாவதாக, கடல் கொந்தளிப்பு, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கையின் சீற்றங்களிலிருந்து தம்மைக் காத்துக்கொண்டு மனிதர்கள் வளர்ந்தார்கள். அடுத்தபடியாக, காட்டுவாழ்க்கையில் புலி, கரடி, சிங்கம், பாம்பு போன்றவற்றின் தாக்குதல்களைச் சமாளித்து வாழ அவர்கள் கற்றுக் கொண்டார்கள். வாழ்க்கைமுறை செம்மைப்பட்டு, வீடு – ஊர் – நாடு என்று சமுதாயம் வளர்ந்த பின்னர், மற்றொரு விதமான ஆபத்து மனிதர்களுக்கு வந்தது. மனிதர்களிலேயே பலர் மிருகங்களாக மாறி, மற்றவர்களை இனத்தின் பெயரால், நிறத்தின் தன்மையால், தேசத்தின் பெயரால், மதத்தின் பெயரால், தாக்கத் தலைப்பட்டனர். இவ்வாறு மனிதர்களால் மனிதர்களுக்குத் தரப்படும் கொடுமைதான் பெருமளவில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

ஆயினும் ஒவ்வொரு காலகட்டத்திலும், அன்போடு, அருளோடு, தன்னலமற்ற பொதுநலத்துடன், மனித நேயத்துடன் மற்ற உயிர்களையும் காத்து நிற்கும் உத்தமர்கள் ஒரு சிலர் இருந்த காரணத்தால்தான் மனித குலம் இன்னமும் தழைத்து நிற்கிறது.

அத்தகைய மனித நேயம்மிக்க உத்தமர்கள் தற்காலத்திலும் ஆங்காங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். 2001 செப். 11 நியூயார்க் நகரின் உலக வர்த்தகக் கட்டடங்கள் தகர்க்கப்பட்டு, அமெரிக்க இராணுவத் தலைமையிடமான பெண்டகன் தாக்கப்பட்ட பின்னர், அமெரிக்காவின் சீற்றமும் இராணுவ பலமும் ஒன்று சேர்ந்து, மத்திய ஆசிய நாடுகள் நோக்கிச் சென்று, தற்பொழுது இராக் நாட்டு மக்களை அல்லற்படுத்தியபடி இருக்கின்றன.

இதை உலகின் பல்வேறு நாடுகளின் மக்கள் மட்டுமல்ல, அமெரிக்க மக்களில் பலரும் கண்டித்திருக்கிறார்கள். தேசபக்தி – மதப்பற்று ஆகியவற்றைக் கடந்து, போர்நிலைமையிலும் அவர்களில் ஒரு சிலரின் மனித நேயம் மிகவும் உயர்ந்து நிற்கிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த பெய்த் பெப்பிங்கர் என்பவர் குருடர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பின்பும் தொடர்ந்து ஏழைகளுக்கும், இல்லாதவர்களுக்கும் உதவும் பணியில் உலக அளவில் அவர் ஈடுபட்டார். புத்தரின் அன்பு மார்க்கத்தால் ஈர்க்கப்பட்ட அவர், 2002-ம் ஆண்டு மத்தியில் இந்தியா – நேபாளம் – திபெத் பகுதியில் இருந்த புத்த மார்க்க இடங்களைப் பார்க்க வந்தார்.

அமெரிக்காவின் போர் சரியானதல்ல என்று ஆர்ப்பாட்டம் செய்வதுமட்டும் போதாது என்று நினைத்த பெய்த் அம்மையார், போரினால் பாதிக்கப்படும் இராக் மக்களுக்குத் துணை நிற்க வேண்டும் என்று நினைத்து, ஜோர்டான் நாடு சென்று அங்கிருந்து பாக்தாத் சென்றார்.

தாயகம் திரும்ப வேண்டுமென்று அமெரிக்க அரசாங்கம் விடுத்த உத்தரவுகளையும் மீறி, 62 வயதான பெய்த், பாக்தாத் நகரில் தங்கி, போரினால் பாதிக்கப்பட்ட இராக் மக்களுக்கு உதவத் தலைப்பட்டார்.

அதுபற்றி அவர் கூறுவதாவது: “”நான் சென்றது சதாம் உசேனுக்கு ஆதரவாக அல்ல. ஒரு சர்வாதிகார ஆட்சிக்கும் அமெரிக்க இராணுவ பலத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவுவதற்காகவே நான் சென்றேன். விமானத் தாக்குதலால் இறந்தவர்களைவிட, கை கால் இழந்து கதறும் முடவர்கள், குழந்தையின் பிணத்தைத் தாங்கியபடி கண்ணீர் விடும் தாய்மார்கள், இறந்த தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் அழுதிடும் குடும்பத்தினர், இவர்கள் என்னை அழச் செய்தனர். அதே சமயம் இராக்கில் உயிர்விடும் அமெரிக்க – நேசநாட்டுப் போர்வீரர்களுக்காகவும், நான் கண்ணீர் விட்டேன். இந்த இருசாராருக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் எந்த விதமான பகையும் வெறுப்பும் கிடையாது. குண்டடிபட்டுக் கைகளை இழந்த ஒரு கர்ப்பவதி, நான் இருந்த மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அழுகின்ற குழந்தையை எடுக்க முடியாமல், “ஐயோ! என் குழந்தையைத் தூக்கக்கூட எனக்குக் கைகளில்லையே!” என்று கண்ணீர்விட்டு, அவள் கதறிய பரிதாபம் என் மனக் கண்ணில் இன்றைக்கும் இருக்கிறது. நான் அமெரிக்காவைச் சேர்ந்தவள் என்று தெரிந்த பின்பு அவர்கள் என்னிடம் கேட்ட ஒரே கேள்வி, “ஏன் இந்தப் போர்?’ என்பதுதான். அதற்கு என்னால் பதில் சொல்லமுடியவில்லை. என்னிடம் இருந்த பணம் செலவாகிவிட்ட நிலையில், அவர்களுக்குச் சுமையாக இருக்க மனமில்லாமல், நான் திரும்ப அமெரிக்கா வந்து சேர்ந்தேன்”.

தாயகம் திரும்பிய அந்த அன்பு மூதாட்டிக்கு அமெரிக்க அரசாங்கம் ஒரு வினோதமான வரவேற்பைத் தந்தது. அமெரிக்க உத்தரவை மீறி இராக் நாட்டில் தொடர்ந்து இருந்தது குற்றம். அந்தக் குற்றத்திற்காக, 12 ஆண்டுகள் சிறை செல்ல வேண்டும் அல்லது ஒரு லட்சம் டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்ற சட்டப்பிரிவை அவருக்கு அரசாங்கம் அனுப்பி வைத்தது.

இதுபற்றிப் பத்திரிகையாளர்கள் கேட்டபொழுது அவர் சொன்னார்: “”அரசாங்கத்தின் அழிவு வேலைக்குப் பயன்பட, என் பணத்தை நான் தரமாட்டேன். காந்தியார் கூறிய அகிம்சை முறையில் நான் போராடுவேன். எத்தகைய நிலைமைக்கும் நான் தயாராக இருக்கிறேன்!” இதுவரை அவர்மீது அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை.

“”நாட்டுப்பற்று என்பது ஒரு நாட்டைப் பாதுகாக்கப் பயன்பட வேண்டுமே தவிர, நாட்டை ஆளுகின்ற அரசாங்கம் செய்கிற தவறுகளைப் பாதுகாக்க அது பயன்படக்கூடாது!” என்று மார்க் ட்வெயின் கூறியதை அமெரிக்க மக்கள் இன்று நினைவுபடுத்திக் கொள்கிறார்கள்.

மகாத்மா காந்தி கூறிய அகிம்சை முறையை நினைவுபடுத்தி, ஓர் அமெரிக்க மாது மனித நேயத்துடன் போரில் உள்ள எதிரி நாட்டுக்குச் சென்று பணிபுரிந்தார். காந்தியார் தலைமையில் விடுதலை பெற்ற இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் காந்தியார் பிறந்த குஜராத் மாநிலத்தில் எந்த அளவு அவரின் அகிம்சை முறை நிலவுகிறது? “”குஜராத்தில் நேர்ந்தவை சோகமயமான, கடுமையான கண்டனத்துக்கு உரிய வன்முறைச் சம்பவங்கள்”. குஜராத்தில் இனக் கலவரம் கோரத்தாண்டவமாடிய நேரத்தில், அரசாங்கமும் சட்டம் – ஒழுங்கும் அமைதியாக உறங்கிய நேரத்தில், உத்தமர்கள் சிலர் மனிதப் பண்பும், மனித நேயமும் உள்ளவர்களாக நடந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“உண்டால் அம்ம இவ்வுலகம்’ என்ற புறநானூற்றுப் பாடலில் கூறியபடி, இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்தும், தமக்கென வாழாப் பிறர்க்குரிய சான்றோர்களில் சிலர் மனித நேயத்துடன் உலகில் வாழ்கின்ற காரணத்தால்தான், உலகம் என்பது இருக்கிறது. இன – மத – தேச வேறுபாடுகளைக் கடந்து, மனிதனை மனிதனாக மதிக்கும் மனித நேயம் மனித குலத்துக்கு நம்பிக்கையைத் தருகிறது.

“அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய், தம்நோய்போல் போற்றாக் கடை” என்பது வள்ளுவம்.

கல்வியறிவு, செல்வச் செழிப்பு, பட்டம், பதவி ஆகியவை பெருமளவில் ஒருவனுக்குக் கிடைத்திருந்தாலும், அவற்றுடன் மனித நேயம் என்பது அவனிடம் இல்லை என்றால், சேர்ந்துள்ள மற்ற வசதிகளால் அவனுக்கோ அவன் சார்ந்த சமுதாயத்துக்கோ எந்தப் பயனும் இல்லாமற் போய்விடும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: