Posted by: shuhaib | 30/08/2010

ரமலான் சிந்தனைகள்


சாந்தமுள்ளவராய் மாறுவோம்: பிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இஸ்லாமை, மக்கள் மத்தியில் வளர்த்த காலத்தில், அனுபவித்த தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல! மெக்காவில் வசித்த, இஸ்லாம் எதிர்ப்பாளரான அபூஜஹல் என்பவன், “”நாயகத்தின் தலையை யார் கொண்டு வருகிறார்களோ, அவர்களுக்கு நூறு ஒட்டகங்களை பரிசாகத் தருவேன்,” என அறிவித்தான். இதையடுத்து, உமர் என்ற இளைஞர் இந்தப் பொறுப்பை ஏற்றார். அப்போது நாயகம்(ஸல்) அவர்கள், அர்க்கம் மாளிகையில் இருந்தார். உமர் அவரைக் கொல்ல வாளுடன் செல்லும் வழியில், அப்துல்லாஹ் என்பவர் உமரைச் சந்தித்தார்.””இளைஞனே! நீர் முகம்மதுவைக் கொல்லச் செல்கிறீர். ஆனால், உம் தங்கையும், அவரது  கணவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது உமக்கு தெரியுமா? உம் குடும்பத்தினரைத் திருத்திய பிறகல்லவா, நீர் முகம்மதுவைக் கொல்லச் செல்ல வேண்டும்!” என்றார். உமருக்கு அது நியாயமாகப்பட்டது. அவரது கோபம் தங்கையை நோக்கித் திரும்பியது. தங்கை வீட்டுக்குச் சென்றார். கதவு தாழிடப்பட்டிருந்தது. உள்ளே குர்ஆன் ஓதும் சப்தம் கேட்டது. அவர் கதவைத் தள்ளிக்கொண்டு வாளுடன் வீட்டுக்குள் பாய்ந்தார். தங்கை உம்மு ஜலீல் பாத்திமாவும், கணவர் ஸயீதுப்னு ஜைதும் அங்கிருந்தனர். மைத்துனர் மீது அவர் வாளுடன் பாயவே, கணவரைக் காப்பாற்ற பாத்திமா குறுக்கே பாய்ந்தார். அவரது முகத்தில் வாள் கீறி ரத்தம் கொப்பளித்தது. இதைப் பார்த்ததும் உமரின் வெறி அடங்கியது. அவளை இரக்கத்துடன் பார்த்தார். பாத்திமா மிகுந்த தைரியத்துடன்,””அண்ணா! நாங்கள் அண்ணல் நபிகளின் மார்க்கத்தை  தழுவியுள்ளோம். உம் வாளுக்குப் பயந்து தடம் மாறமாட்டோம்,” என்றார்.
தங்கையின் தைரியம் அவரது மனதை மாற்றி விட்டது. “”பாத்திமா! சற்றுமுன் நீர் ஓதியதை எனக்கும் சற்று காட்டுங்களேன்,” என்றார். பாத்திமா தான் ஓதிய பகுதியைக் கொடுத்தார். அதைப் படித்ததும் அவர் கண்ணீர் வடித்தார். மனம் மாறினார். மறுநாள் நபிகளாரைச் சந்தித்து, இஸ்லாத்தில் இணைந்தார். கோபக்காரர்களையும் சாந்த சொரூபிகளாக்கும் வல்லமை கொண்டது குர்ஆன். ரமலான் காலத்தில் மிக அதிகமாக குர்ஆனை ஓத வேண்டும்.

ஊருக்கு மட்டும் உபதேசமா?சிலர் கவர்ச்சியாகப் பேசுவார்கள். “”என் புத்திமதியைக் கேட்டு நடந்து, இந்த ஊரில் நல்லபடியாக வாழ்பவர்கள் எத்தனை பேர் தெரியுமா?” என்று பெருமையடித்துக் கொள்வார்கள்.உதாரணத்துக்கு ஒரு நண்பர், “”உன் மனைவியோட ஒழுங்கா குடித்தனம் நடத்து! அவள் கேட்டதை வாங்கிக் கொடு. குடிச்சிட்டு வீட்டுக்குப் போகாதே. புகை பிடிக்காதே. அது உடலுக்கு கேடுன்னு தெரிஞ்சும் ஏண்டா செய்றே’ என தன் இன்னொரு நண்பரை எச்சரிப்பார். ஆனால், உபதேசம் செய்தவரின் வீட்டில் போய் பார்த்தால், கதை வேறு மாதிரியாக இருக்கும். காரணம்இல்லாமல், மனைவியை உதைப்பது, குடிப்பது…இப்படி நேர்மாறாக நடப்பார்.ஊருக்கு உபதேசம் செய்யும் இந்தப் பாவிகளுக்கு கொடிய நரகம் காத்திருக்கிறது என எச்சரிக்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.””இப்படி அறிவுரை சொன்னவன் நரக நெருப்பில் தூக்கி எறியப்படுவான். அவனது குடல் வெளிப்பட்டு நெருப்பில் விழும். பிறகு, அக்குடலை எடுத்துக் கொண்டு அவன், கழுதை தன் செக்கில் சுற்றுவதைப் போல நரகத்தில் சுற்றுவான். இதைப் பார்த்து இவனிடம் அறிவுரை பெற்றவர்கள் “நீ நல்லவனாகத்தானே இருந்தாய். நல்லதைத் தானே எங்களுக்குப் போதித்தாய். பிறகு ஏன் உனக்கு இந்தக் கதி ஏற்பட்டது?’ எனக் கேட்பார்கள்.அதற்கு அவன் “நான் உங்களுக்கு நல்லதைத்தான் போதித்தேன். ஆனால், நல்லதின் அருகில் கூட நான் சென்றதில்லை. தீமைகளை விட்டும் உங்களைத் தடுத்தேன். ஆனால், நான் தீமை புரிந்து கொண்டிருந்தேன்’ என்று பதிலளிப்பான்,” என்று நாயகம்(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்.ஊருக்கு உபதேசம் செய்வது எளிது. அந்த உபதேசத்தை சொல்பவரும் கடைபிடித்தால் தான், ரமலான் நோன்பு நோற்றதின் பயனை அல்லாஹ்விடம் பெற முடியும்.

கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா! கெட்ட பழக்கங்கள் குறித்து குர்ஆன் ஹதீஸ்2:195ல், “”உங்களை நீங்களே அழிவில் ஆழ்த்திக் கொள்ளாதீர்கள்,” என்றும், ஹதீஸ் 4:29, “”உங்களை நீங்களே கொலை செய்ய வேண்டாம்,” என்றும் தற்கொலைக்குச் சமமாகச் சுட்டிக்காட்டுகின்றன.இன்றைய உலகச் சூழலில் கெட்ட பழக்கங்களுக்கு இளைஞர்கள் மிக எளிதாக அடிபணிந்து விடுகிறார்கள். சிலர் நோன்பு காலத்தில் கூடஇப்படிப்பட்ட பழக்கங்களை மேற்கொள்வது மிகுந்த மனக்கஷ்டத்தைத் தருகிறது. மார்க்கத்துக்கு கட்டுப்பட்டு வாழும் நிஜமான முஸ்லிம்இத்தகைய கெட்ட பழக்கங்களை அனுமதிக்கமாட்டார். கெட்ட பழக்கங்கள் உடலுக்கு மட்டுமல்ல, பணத்துக்கும் கேடு என்கிறது குர்ஆன்.ஹதீஸ் 6:141, “”நீங்கள் வீண் விரயம்செய்யாதீர்கள். நிச்சயமாக வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை,” என்றும், ஹதீஸ் 17:26, “”நிச்சயமாக வீண்விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவர்,” என்றும் சொல்கிறது.கெட்ட வழிக்கு செலவிடும் காசை நீங்கள் தர்மம் செய்யுங்கள். இல்லாவிட்டால், அல்லாஹ் மரணத்திற்குப் பின் உங்களை மூன்று கேள்விகள் கேட்பான்.””பணத்தை எவ்வாறு சம்பாதித்தாய்? எவ்வழியில் அதனைச் செலவு செய்தாய்? உனது உடம்பை எதில் அழித்தாய்?” என்பதே அவை.இதற்கு நாம் பதில் சொல்லியே ஆக வேண்டும். அப்போது, நமது தவறுகளெல்லாம் வெளிப் பட்டு, இறைவனின் முன்னிலையில் தலைகுனிந்து நிற்க வேண்டியிருக்கும்.எனவே, நோன்பு காலத்தில் கெட்ட பழக்கங்களை கைவிட உறுதியெடுங்கள். நோன்பு முடிந்த பிறகு, மீண்டும் அதைப் பிடித்துக் கொள்ளாதீர்கள். உடலைக் கெடுக்கும் பழக்கங்களுக்கு ஆகும் செலவை, ஏழைகளின் கல்வி, மருத்துவச்செலவுக்கு உதவுங்கள். அது நம்மை அல்லாஹ்வின் அருகில் கொண்டு சேர்க்கும்.கெட்ட பழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.

உடையில் கவனம் வேண்டும்: ழுக்கத்தின் அடிப்படை ஆண், பெண் உறவில் தான் இருக்கிறது. குறிப்பாக,  ஆண்களுடன் பழகும் விஷயத்தில் பெண்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என  வலியுறுத்துகிறது இஸ்லாம். “”நபியே! உம்முடைய மனைவிகள்,  உம்முடைய புதல்விகள் மற்றும் நம்பிக்கை யாளரின் மனைவிகள் ஆகியோரிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் முந்தானையை தங்களின் மீது தொங்க விட்டுக் கொள்ளட்டும். அவர்களை அறிந்து கொள்வதற்கும், அவர்கள் தொல்லைக்கு ஆளாகாமல் இருப்பதற்கும் இதுவே ஏற்ற முறையாகும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கிறான்,” என ஒரு வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு பெண் நல்ல அலங்காரம் செய்து கொண்டால் தன் கணவர், திருமண உறவு அல்லாத உறவினர்கள் (சகோதர வகையினர்),  வேலையாட்கள், சிறுவர்கள், பிற பெண்கள்  மத்தியில் நடமாடலாம். மற்ற ஆண்கள் யாராக இருந்தாலும் அவர்கள் முன்பு பர்தா அணிந்தே வரவேண்டும். இப்படி சொல்வது ஒரு பெண்ணின் உரிமையை பறிப்பதற்கான சட்டம் அல்ல.  ஆண்களிடமிருந்து அவளது மானத்தைக் காப்பாற்றவே இந்த ஏற்பாடு! பெண்ணின்  உடலமைப்பை ஒட்டியும், ஒழுக்கக் கேடில்லாத  சமுதாயத்தை உருவாக்கவுமே குர்ஆன் இந்த சட்டத்தை வகுத்துள்ளது. இதை விட்டுவிட்டு சம உரிமை என்ற பெயரில் ஆடம்பர அலங்காரத்துடன் பெண்கள்  நடமாடுவது அவர்களுக்கு ஆபத்தையே தரும் என்பது இன்றைய ரமலான் சிந்தனையாக  அமையட்டும்.

வாழ்வுக்கு பிரதானமான படிப்பு: ல்லாஹ் இறக்கிய முதல் குர்ஆன் வசனமே… “ஓதுவீராக, உம்மைப் படைத்த இறைவனின் பெயரால். அவன் எழுதுகோல் கொண்டு உமக்கு எழுதக் கற்றுக் கொடுத்தான்..’ என்பதுதான். ஆம்… படிப்பே பிரதானம் என்று துவங்குகிறது குர்ஆன். அரபு நாட்டில் கல்வியறிவு குறைந்திருந்த காலத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும்  கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார். “”கல்வி ஒரு காணாமல் போன ஒட்டகம். அதைத் தேடி கண்டறிந்து கொள்ளுங்கள். சீன தேசம் சென்றாவது சீர்கல்வியைத் தேடிக் கொள்ளுங்கள்,” என்றார்கள் அவர்கள். இஸ்லாமைக் காப்பாற்றும் பத்ரு போர்க்களத்தில் பிடிபட்ட சிறைக்கைதிகள்  விடுதலை செய்யப்பட வேண்டுமானால், ஒவ்வொரு கைதியும், அரபு மக்களில் பத்து பேருக்காவது கல்வி கற்றுத்தர வேண்டும் என்ற நிபந்தனையே விதிக்கப்பட்டது. “”கல்வியைத் தேடி ஒருவன் புறப்படுகிறான் என்றால், இறைவனின் பாதையில் அவன்  பயணம் செய்கிறான்,” என்கிறார்கள் நாயகம். ஒருமுறை, முஆது என்ற தோழரை, நாயகம் (ஸல்) அவர்கள், ஏமன் நாட்டுக்கு தன் பிரதிநிதியாக அனுப்பினார். அவரிடம், “”அங்கே ஏதேனும் பிரச்னைகள் வந்தால் எப்படி சமாளிப்பீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு முஆது, “குர்ஆன் விளக்கங்களை அறிந்து தீர்வு காண்பேன்’ என்றார். “அதற்கும் முடியாமல் போனால்’ என்று அண்ணலார் கேட்க, “”உங்கள் சொல் செயல்களில் இருந்து விளக்கம் அறிந்து தீர்ப்பேன்,” என்றார். “”அதனாலும் முடியாமல் போனால்,” என அவர்கள் கேட்டதும், “”இந்த இரண்டின்  அடிப்படையில் சொந்த அறிவைப் பயன்படுத்தி தீர்வு காண முடியும்,” என்றார். இதைக் கேட்ட நாயகம்(ஸல்) அவர்கள்,  “”நீர் சத்தியத்தின் பக்கம் இருக்கிறீர்,” என்றார்கள். சொந்த அறிவு என்பது கல்வியினால்  வருவதாகும். படிப்பு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து, மாணவர்கள் அனைவரும் மிக நன்றாகப் படித்து நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை தேடி தர வேண்டும் என்பதும், படிக்காதவர்கள் கல்விக் கூடத்துக்குள் நுழைய வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனையாகட்டும்.

சிரித்து வாழ வேண்டும்: டென்ஷன் என்னும் மனஇறுக்கம், மனித முகங்களில் இருந்து புன்னகையை அப்புறப்படுத்தி பல காலமாகி விட்டது. “என் பணியில் டென்ஷன்’ என்று சொல்லிக்கொள்வதை சிலர் பெருமையாகவும், நாகரீகமாகவும் கூட கருதுகின்றனர். “லாபோதெரபி’ என்ற வைத்திய முறை கூட மனிதர்களைச் சிரிக்க வைக்க வந்திருக்கிறதாம்! இது சரியான போக்கல்ல! நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் “இன்முகம் காட்டுவது ஒரு தர்மம்’ என்று போதித்திருக்கிறார்கள். ஒருநாள் ஒரு மூதாட்டி நபிகளாரைத் தேடி வந்தார். அவரை வரவேற்ற நாயகம்(ஸல்) அவர்கள், “அம்மா! தங்கள் தேவை என்ன?” என்றார்கள். “”இறைத்தூதரே! என்னிடம் ஒட்டகமோ, கோவேறு கழுதையோ இல்லை. நெடுந்தூர பயணம் செய்யும் சமயங்களில் மிகவும் சிரமப் படுகிறேன்,”என்றார். அந்த மூதாட்டியின் வேண்டுகோளைக் கேட்டு புன்னகைத்த நாயகம், “”சரி…ஒரு ஒட்டகக்குட்டியை வரவழைத்துத் தருகிறேன்,” என்றார்கள். அந்தப் பெண்மணி, “”ஒட்டகக்குட்டி என்னுடைய தேவையை நிறைவு செய்யாதே! என்னுடைய சுமைகளைச் சுமந்து செல்ல  அதனால் இயலாதே. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வேன்?” என்றார்.  “”இல்லை, இல்லை…ஒரு ஒட்டகக்குட்டியைத் தான் உங்களுக்கு என்னால் தர முடியும். அதில் தான் நீங்கள் பயணிக்க வேண்டும்,” என்ற நாயகம்(ஸல்) அவர்கள், ஒரு பணியாளரிடம் கண்ஜாடை காட்டினார்கள். சற்றுநேரத்தில், பணியாளர் ஒரு பெரிய ஒட்டகத்துடன் வந்து நின்றார்.  “”அண்ணலாரே! தாங்கள் ஒட்டகக்குட்டியைத் தருவதாகத் தானே சொன்னீர்கள். இப்போது பெரிய ஒட்டகத்தை வரவழைத்திருக்கிறீர்களே,” என்றதும், நாயகம் புன்னகைத்தபடியே,  “”அம்மையாரே! ஒவ்வொரு ஒட்டகமும் அதன் தாய்க்கு குட்டியாகத்தானே இருந்திருக்கும்,” என்றார்கள்.இதைக்கேட்டு அந்த அம்மையார் வாய்விட்டு சிரித்தார். நாமும் சிரிக்க வேண்டும், நம்மால் பிறரும் சிரிக்க வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.

சொந்தமாகும் சொர்க்கம்:பிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். “”நீங்கள் இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும். அவன் விதித்துள்ள ஐங்காலத் தொழுகையையும் ரமலானின் நோன்பையும், ஏழை வரியான ஜக்காத்தையும் நிறைவேற்றி வாருங்கள். அதோடு, இறைவனின் இல்லமான கஃபாவையும் தரிசித்து ஹஜ்ஜை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். அப்போது சுவனபதி (சொர்க்கம்) உங்களுடையதாகி விடும்,” என்று. அவர்கள் மேலும் சொன்னார்கள். “”நான் உங்களிடம் பலமான இரண்டு வஸ்துக்களை விட்டுச் செல்கிறேன். அவற்றை நீங்கள் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டால், ஒருபோதும் வழிதவறி விட மாட்டீர்கள். ஒன்று இறைவேதமாகிய திருக்குர்ஆன். மற்றொன்று எனது வாழ்க்கையும், வாய்மொழியுமான “சுன்னத்’ ஆகும். இன்று உங்களின் இந்நாட்டிலே, தனது ஆட்சி தகர்ந்து தவிடு பொடியாகி விட்டதைக் கண்டு ஷைத்தான் மனம் உடைந்து ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறான். அற்ப விஷயத்திலேனும் நீங்கள் அவனுக்கு வழிபட்டு (உடன்பட்டு)  விடுவீர்களாயின், அவன் பெருமகிழ்ச்சி  அடைவான். ஆதலின், இறைவனின் ஏகத்துவத்தில் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையில்  உறுதியுடன் இருந்து கொள்ள வேண்டுமென எச்சரிக்கிறேன்,” என்றார்கள். ரமலான் நோன்பிருக்கும் ஒவ்வொருவர்  மனதிலும் ஓட வேண்டிய சிந்தனை இது.  ஏனெனில், இறைவனே எல்லாம். இறைவனின் கட்டளைகளுக்கு நாம் பயந்து நடக்க வேண்டும். மாறாக, மனதில் பல மோசமான எண்ணங்களுக்கு ஷைத்தான் வித்திடுவான். அவனது பிடியில் அகப்பட்டு விட்டால், நம்மால் மீளவே முடியாது. குடிக்கக்கூடாது, பிறரைத் துன்புறுத்தக்கூடாது என்றெல்லாம் நமக்கு கட்டளை இறங்கியிருக்கிறது. ஷைத்தானோ, “இதையெல்லாம் செய்’ எனத் தூண்டிக்கொண்டே இருப்பான். ஆனால், இறைவனை நினைத்தபடியே, நிஜமான  நோன்பிருப்பவர்களைக் கண்டு அவன் ஓடியே போய் விடுவான்.

ரமலான் மாதத்தின் சிறப்பு: மலான் மாதத்தில் நோன்புக்குரிய மாதம். சிறப்பாக நோன்பிருந்தபடியே, மாதத்தின் மையப்பகுதியை எட்டிவிட்டோம். சரி! இந்த மாதத்தின் சிறப்புகள் அறிய வேண்டாமா? நபிகள் நாயகம்(ஸல்) அவர்களே அதுபற்றி  சொல்கிறார்கள். “”ரமலான் மாதம் வந்துவிட்டால் வானங்களின் கதவுகளும், சொர்க்கத்தின் கதவுகளும் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்களுக்கெல்லாம் விலங்கிடப்படுகின்றன. சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் ஒன்று ரய்யான். அந்த வாசல் வழியாக நோன்பாளிகளைத் தவிர  வேறு யாரும் நுழைய மாட்டார்கள். யார் ரமலான் மாதத்தில் ஈமானுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ, இன்னும் “லைலத்துல் கத்ர்’ இரவிலும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முன் செய்த சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ஆதமுடைய  மக்களில் ஒவ்வொரு நல் அமலுக்கும் நோன்பைத் தவிர, பத்திலிருந்து எழுநூறு நன்மைகள் வரை கொடுக்கப்படுகிறது. நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரண்டு இரவுகளில், எவர் விழித்திருந்து தொழுகை புரிகின்றாரோ, அவருடைய உள்ளம் கியாம நாளிலே  விழிப்புடன் இருக்கும்,” என்கிறார்கள் அண்ணலார். “”நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஏனென்றால், எனக்காகவும், என் திருப்திக்காகவும் பசித்திருந்தான். தன் இச்சைகளை அடக்கியிருந்தான். மேலும், நோன்பு திறக்கும் போதும், தன் இறைவனை சந்திக்கும் போதும் நோன்பாளிக்கு இருவகை சந்தோஷம் உள்ளது,” என்கிறான் அல்லாஹ்.  எனவே இந்த மாதத்தின் சிறப்பை உணர்ந்து, இன்னும் வரும் நாட்களிலும் மிகச்சிறப்பாக நோன்பிருந்து, அல்லாஹ்வின் அருள் பெறுவோம்.

இறைவன் நினைப்பதே நடக்கும்: நாயகம்(ஸல்) அவர்களின் போதனைகளைப் பிடிக்காத அவரது எதிரிகள், அவரைக் கொன்றுவிட திட்டமிட்டனர். ஒருநாள் இரவில், கொலை முயற்சி நடந்த போது, இருளைப் பயன்படுத்தி தப்பி, தம் நண்பர் அபூபக்கர் அவர்களின் இல்லத்திற்குச் சென்றார்கள். அவரையும் அழைத்துக்கொண்டு மெக்காவை விட்டு வெளியேறி, தௌர் என்ற மலைக்குகைக்கு சென்று ஒளிந்து கொண்டனர். எதிரிகள் அந்த இடத்தையும் மோப்பம் பிடித்து வந்துவிட்டனர். குகைக்குள் புகுந்து நாயகம்(ஸல்) அவர்களைத் தேடிப்பிடிக்க, எதிரிகள் முடிவெடுத்தனர். அப்போது அபூபக்கர் அவர்கள், “”நாம் இங்கிருப்பதை எதிரிகள் எப்படியோ  கண்டுபிடித்து வந்துவிட்டனர். அவர்களிடம் சிக்கி, நாம் இறப்பது உறுதி,” என்றார்கள். நாயகம்(ஸல்) அவர்கள் அபூபக்கரிடம்,  “”தோழரே! பயப்பட வேண்டாம். நாம் இருவராக இருந்தால் அல்லவா அவர்களால் நம்மைக் கொல்ல முடியும். இங்கே, நம்மைத் தவிர மூன்றாவதாகவும் ஒருவர் இருக்கிறார்,” என்றார்கள். அபூபக்கர் அவர்கள் ஆச்சரியத்துடன் நாயகம்(ஸல்) அவர்களைக் கேள்விக்குறியுடன்  நோக்கவும், அவர்களது எண்ணத்தைப் புரிந்து கொண்ட நாயகம், “”எல்லாம் வல்ல இறைவன் நம்மோடு இங்கிருக்கிறான். எனவே, அச்சம் என்ற சொல்லுக்கே அவசியமில்லை,” என்றார்கள். இதற்குள் எதிரிகள் உள்ளே புகுந்தனர். நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளே சென்ற பிறகு, எதிரிகள் உள்ளே நுழைவதற்குள், நுழைவு வாயிலில் ஒரு சிலந்தி வலை பின்னிவிட்டது. அப்போது ஒரு எதிரி தன் நண்பர்களிடம்,  “”இங்கே சிலந்தி வலை பின்னியிருக்கிறது. நாம் தேடி வந்தவர்கள் உள்ளே புகுந்திருந்தால், குகைக்குள் நுழையும் போது இது அறுபட்டிருக்க வேண்டும். எனவே, அவர்கள் குகைக்குள் இருக்க வாய்ப்பே இல்லை,” என்றான். இதை ஏற்ற  மற்றவர்கள் திரும்பிச் சென்றனர். இறைவன் நினைப்பது மட்டுமே நடக்கும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.

தர்மம் செய்யும் குணம் வேண்டும்: ரமலான் நோன்பு நோற்கும் போது, காலை முதல் மாலை வரை பிரச்னையில்லை. ஏதும் சாப்பிடாமல் இருந்து விடலாம். ஆனால், மாலையில் நோன்பு திறக்கும் (முடியும்) நேரத்தில், ஏதேனும் சாப்பிட வேண்டுமல்லவா! சாப்பிட வழியில்லாத ஏழை ஜனங்களுக்கு நோன்புக் கஞ்சியோ, ரொட்டியோ ஏதோ ஒன்று கொடுக்க வேண்டுமல்லவா! இந்த தர்ம சிந்தனையை, நாம் யாரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டுமென்றால், நாயகம்(ஸல்) அவர்களின் அருமைத் துணைவியார், ஆயிஷா அம்மையாரிடம் இருந்து தான். அரபு நாட்டில், ஹஸ்ரத் மு ஆவியா என்பவர் கலீபாவாக (மன்னர்) இருந்தார். அவர் ஒரு ரமலான் மாதத்தில், இரண்டு லட்சம் வெள்ளிக்காசுகளை ஆயிஷா அம்மையாருக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தார். அம்மையார் அதை ஒரே நாளில் ஏழைகளுக்கு தானம் செய்து விட்டார். அப்போது பணிப்பெண் வந்தாள்.””அம்மா! இன்று மாலை நோன்பு திறக்கும் நேரத்தில் சாப்பிட ஏதுமில்லை,” என்றாள். அம்மையார் அவளிடம், “”அதுபற்றி நீ கவலைப்படாதே,” எனச் சொல்லி விட்டார். ஒருநாள், நோன்பு திறந்த பிறகு, தனக்காக சாப்பிட வைத்திருந்த இரண்டு ரொட்டிகளை, ஒரு பிச்சைக்காரர் வந்து கேட்க அவரிடம் கொடுத்து விட்டார். இப்படியெல்லாம் தானம் செய்யும் போது, அவர் ஆடம்பர உடை அணிந்திருக்கவில்லை. நகைகளைப் பூட்டிக் கொண்டிருக்கவில்லை. ஒட்டுத்துணி போட்டு தைத்திருந்த கிழிந்த அங்கியை அணிந்திருந்தார். எவ்வளவு பெரிய தயாள உள்ளம் பாருங்கள்! ஒருமுறை ஒரு பெண்மணி, தன் இரண்டு குழந்தைகளுடன் பசி தாளாமல் ஆயிஷா அம்மையாரிடம் வந்தாள். அப்போது அம்மையாரிடம் இரண்டே இரண்டு பேரீச்சம் பழங்கள் தான் இருந்தன. அதை அவளிடம் கொடுத்தார். அந்தப் பெண் அவற்றை பசியுடன் நின்ற தன் குழந்தைகளுக்கு கொடுத்து, அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தாள்.  தனக்கே இல்லாத நிலையிலும், தர்மம் செய்யும் தயாள குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.

நன்மை செய்ய விரும்புங்கள்: “நீங்கள் நோன்பிருக்கும் காலங்களில் வீணாக குரலுயர்த்திப் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். யாராவது திட்டினால் அல்லது சண்டைக்கு வந்தால், “நான் நோன்பாளி, நான் நோன்பாளி’ என்று கூறிவிடுங்கள்,” என்கிறார்கள் நபிகள்  நாயகம் (ஸல்) அவர்கள். ரம்ஜான் காலத்தில் நோன்பிருக்கும் சமயத்தில் பிரச்னைகளில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன தெரியுமா? இந்த பயிற்சியானது எதிர்காலத்திலும் நம்மை பொறுமையோடு இருக்கச் செய்யும். நோன்பு என்றால்  வெறுமனே பட்டினி கிடப்பது மட்டுமல்ல! நல்ல பண்புகளையும் வளர்த்துக் கொள்வதாகும். அதன் காரணமாக ரம்ஜானில் எடுக்கப்படும், இந்த  பயிற்சியானது, வாழ்க்கை முழுமைக்கும் நமக்கு பயன்படுவதாக அமையும். அது மட்டுமல்ல! (ரமலான் மாதத்தில் செய்யப்படும்) ஒவ்வொரு நன்மைக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது. “நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகின்றான். நோன்பு நரகத்தில் இருந்து காக்கும் ஒரு கேடயமாகும். நோன்பாளியின் வாய்வாடை கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும்,”.இப்படி நோன்பின் காரணமாக, எல்லையில்லா நன்மையை நமக்கு இறைவன் அருளி இருப்பதால், அந்த வாய்ப்பை ரம்ஜான் மாதத்தில் நழுவ விட்டுவிடக்கூடாது. உள்ளத்தூய்மையும், மனப்பக்குவமுமே இந்த நேரத்தில் நமக்கு அல்லாஹ்விடம் இருந்து அதிக கூலியைப் பெற்றுத்தரும். “”நன்மை செய்வதையே விரும்புபவனே! நீ வருக! அதிகமதிகம் நன்மை செய்வாயாக. பாவங்களை நாடுபவனே! நீ பாவங்கள்  செய்வதைக் குறைத்துக் கொள்,” என்கிறார்கள் நாயகம்(ஸல்) அவர்கள். பிறருக்கு நன்மை செய்வது பற்றி, இந்த ரம்ஜான் நோன்பு காலத்தில் சிந்திப்போம்.

உயர்ந்த குணம் வேண்டும் பெண்களே! “ஒரு பெண்ணை அவளுடைய செல்வம், அழகு, குலம், மார்க்கப்பற்று ஆகிய நான்கில் ஒன்றுக்கு மணம் முடிக்கப்படுகிறது. நீங்கள் மார்க்கப்பற்றுடைய பெண்ணையே திருமணம் செய்து கொள்ளுங்கள்,” என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.திருமணத்திற்கு பிறகு, ஒருவர் நிம்மதியாக காலம் கழிக்க வேண்டுமென்றால், எவ்வகை குணமுள்ள பெண்களைத் தவிர்க்க வேண்டும் என அரபுக்கவிஞர் அப்துல்லா சுட்டிக்காட்டுகிறார். எந்த நேரமும் சண்டை போட்டுக் கொண்டும், பெருமூச்செறிந்து கொண்டும், இடைவிடாமல் கைவலி, கால் வலி, தலை வலி என புலம்புவதும், கணவர் எவ்வளவு தான் நல்ல முறையில்  கவனித்தாலும் “என்ன சுகத்தைக் கண்டேன்’ என குறை சொல்வதும், முன்னாள் கணவரை மறக்க முடியாமல் அவருக்கு பிறந்த குழந்தைகளை நினைத்து வருந்துவதும், கணவரின் பொருளாதார நிலையறியாமல் அது வேண்டும் இது வேண்டும் என கேட்பதும், வெளியில் உள்ளவர்கள் பாராட்ட வேண்டுமென்பதற்காக, எந்நேரமும் தன்னை  அழகுபடுத்திக் கொள்வதிலேயே கவனம்  செலுத்துவதும், அதிகமாகப் பேசுவதுமான குணங்கள் தவிர்க்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டுகிறார். நோன்பு காலத்தில், பட்டினி கிடப்பதும், அதிக நேரத்தை தொழுகையில்  செலவிடுவதும் மட்டும் உயர்ந்த இடத்தை தந்து விடாது. நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, பெண்கள் மேற்கண்ட குறைகளைத் தவிர்ப்பதன் மூலம், குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். பெண்களை மரியாதையுடன் நடத்த ஆண்களும் கற்றுக் கொள்ள வேண்டும். “”பெண்களை நல்ல முறையில் நடத்துமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். ஏனென்றால், அவர்களே உங்கள் தாயாராகவும், மகளாகவும், மாமியாராகவும் இருக்கின்றார்கள்,” என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். பெண்கள் உயர்ந்த குணங்களுடன் திகழ வேண்டும், ஆண்கள் அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டுமென்பதை இன்றைய ரமலான் சிந்தனையாகக் கொள்வோம்.

முக்கியமான இளமைக்காலம்: நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ஒவ்வொரு பருவத்திலும் மக்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி, மிக அருமையாகச் சொல்கிறார்கள். “”இளைஞர்களே! உங்களின் பிள்ளைப்பருவம் கடந்து விட்டது. எனவே இறைவனுக்கு  வழிபடுவதையும், நன்மையான செயல்களைச் செய்வதையும் இளமைப் பருவத்தில் தவறவிட்டால், பின்னர் எந்தக் காலத்தில் நீங்கள் அதனை ஈடுசெய்யப் போகின்றீர்? உங்களின் இளமை ஆட்டங்களில் மிக எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். இளமைப் பருவம் ஷைத்தான் வேட்டையாடும் தலமாகும்.  மண்ணறையில் இருந்து (இறந்தபிறகு) எழுப்பப்பட்டு கேள்வி கணக்கிற்காக (விசாரணை) இறைவன் முன் நிறுத்தப்படும் போது, “ஆ! என் இளமை விளைவித்த கேடே! என்று எத்தனையோ  இளைஞர்கள் அழுது புலம்புவார்கள். மானக்கேடே! என்று எத்தனையோ பெண்கள்  கதறுவார்கள். ஆ! முதுமையே என எத்தனையோ முதியோர்கள் தம்மை நொந்து கொள்வார்கள்.  இத்தகைய பரிதாப நிலைமைகளை எண்ணிப்பார்த்து வாழ்வது அறிவுள்ளவர்களுக்கு படிப்பினையாகும்,” என்கிறார்கள். ஆனால், இன்று நிலைமை என்ன?  இளைஞர்களில் ஒரு பகுதியினர் இறைவனின் கட்டளைகளுக்குப் புறம்பாக, நாகரிகம் என்ற போர்வையில், கேடான செயல்களில் ஈடுபடுகிறார்கள். சில பெண்களும் ஆபாசமாய் உடையணிந்து, இளைஞர்களைக் கெடுக்கும் நிலையில் உள்ளார்கள். இளமை காலத்தில் மார்க்கம் கற்றுத்தந்த பாதைக்குள் சென்றுவிட்டால், பின்னர் எக்காலமும் கவலை இல்லை. “”ஒழுக்கமுள்ளவனாக இரு. மக்களில் நீயே சிறந்தவன். போதுமென்ற மனப்பான்மை உள்ளவனாக இரு. மக்களில் நீயே நன்றியுள்ளவன். உனக்காக எதை விரும்புகிறாயோ அதையே  மற்றவர்களுக்கும் விரும்பு. நீயே உண்மையான முஸ்லிம்,” என்கிறார் அண்ணல் நபிகளார். இளமையில் கடைபிடிக்கப்படும் ஒழுக்கம் காலம் முழுவதும் நீடிக்கும். இளமையிலேயே இறைவனின் அன்புக்கு பாத்திரமாகி விட்டால், எதற்கும் கலங்கத் தேவையில்லை என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை.

எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்: அப்துல்லா இறைவன் மீது அபார பக்தி கொண்டவர். ஒருநாள் இரவில், ஒரு பிச்சைக்காரர் வாசலில் நின்று, “ஐயா! பசிக்கிறது’ என்றார். அப்துல்லா, அவரை உள்ளே அழைத்துச் சென்று, உணவு பரிமாறினார். பிச்சைக்காரர் சாப்பிட ஆரம்பித்தார். அப்துல்லா அவரிடம், “”பெரியவரே! தாங்கள் இந்த உணவைப் பெற்றவுடனேயே சாப்பிடத் துவங்கி விட்டீர்கள். இந்த உணவைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லிய பிறகல்லவா சாப்பிட தொடங்கியிருக்க வேண்டும்,” என்றார். வந்தவர், “”ஐயா! இந்த உணவை அளித்தது நீர். இறைவன் அல்ல. உங்களுக்கு வேண்டுமானால் நான் நன்றி சொல்கிறேன். இறைவனுக்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும்?” என்றதும், அப்துல்லாவுக்கு கோபம் வந்துவிட்டது. மீண்டும் மீண்டும் இறைவனால் தான் உணவு அவருக்குத் தரப்பட்டது என்று சொல்லியும்  பெரியவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. போதாக்குறைக்கு, “”நீர் இறைவனைப் பார்த்திருக்கிறீரா?” என்று வேறு கேட்டுவிட்டார். அப்துல்லாவுக்கு கோபம் அதிகமானது. அந்தப் பெரியவரின் கையைப் பிடித்து, “”இறைவனுக்கு நன்றி சொல்லாத நீர் இதை சாப்பிட உரிமை இல்லாதவர்,” என்று கூறவே, பெரியவர் கோபத்துடன் எழுந்து போய்விட்டார். அன்றிரவு இறைவன்  “”அப்துல்லா! ஏன் அந்தப் பெரியவரை கடிந்து கொண்டீர்! அவர் என்னை இன்று மட்டும் மறுக்கவில்லை. கடந்த 70 ஆண்டுகளாக மறுத்து வருகிறார்.  அப்படியிருந்தும், பொறுமையாக நான் அவருக்கு உணவளித்து வந்துள்ளேன். ஆனால், நீர் ஒரே இரவில் பொறுமையிழந்து அவரை வெளியே அனுப்பி விட்டீரே,” என்றார். எல்லாம் வல்ல இறைவனின் கருணை மழையை எண்ணி வியந்தார்.  நம்மால் நன்மை பெற்றவர்கள் கூட, நம்முடன் கருத்து வேறுபாடு கொள்ளக்கூடும். அப்படிப் பட்ட சமயத்தில் கூட, நாம் அவர்களிடம்  கோபப்படக்கூடாது என்பதே இன்றைய ரமலானின்  சிந்தனை.

இருப்பதைக் கொண்டு வாழ்வோம்: வரவுக்கு மீறி செலவு செய்து, ஆடம்பரமாய் வாழும் நிலையால் பலரும் அவதிப்படுகின்றனர்.  ஒருமுறை, நபிகள்நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியர் ஒன்று கூடி, “”இறைத்தூதரே! தாங்கள் எங்களுக்குச் செலவுக்காக வழங்கும் பொருள் போதாது. இனிமேல், செலவுத் தொகையை அதிகமாக்கித் தர வேண்டும்,” என்றனர்.  மனைவியரிடம் அண்ணலார் பேசவில்லை. வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள்,  பள்ளிவாசலிலேயே 28 நாட்கள் தங்கிவிட்டார்கள். ஒருநாள், இறைவனின் தூதுவரான ஜிப்ரீல் (அலை) அவர்கள், ஒரு வேத வசனத்துடன் இறங்கி வந்தார்கள்.””நபியே! உங்களுடைய மனைவிகளை நோக்கிக் கூறுங்கள். நீங்களெல்லாம் இந்த உலக வாழ்வையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவோராயின், வாருங்கள்…உங்களின் வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்துக் கொள்கிறேன். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் தூதரையும் (தன்னையும்) மறுமையின் வீட்டையும் விரும்புவோராயின், நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள நன்மையை நாடுவோர்க்கு மகத்தான கூலியைத் தயாராக்கி வைத்துள்ளான்,” என்பதே அந்த வசனம். “அதாவது, ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்பட்டு, நான் தருவதற்கு மேல் செலவழிக்க  நினைப்பவர்கள் என்னை விட்டு பிரிந்து கொள்ளலாம்’ என்ற ரீதியில் இந்த வசனம் அமைந்தது. நாயகம்(ஸல்) அவர்கள் வீட்டுக்குச் சென்றார்கள். தன் மனைவி ஆயிஷா அம்மையாரை அழைத்து, இந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அந்த அம்மையார், அதை மற்றவர்களிடம் சொல்ல, அல்லாஹ் மூலம் விடுக்கப்பட்ட அந்த எச்சரிக்கையைக் கேட்டு அவர்கள் திடுக்கிட்டனர். எல்லோரும், தங்கள் செய்கைக்காக நபிகளாரிடம் மன்னிப்பு கேட்டனர். அடுத்தவர்கள் அணியும் நகை, ஆடை,  உபயோகிக்கும் பொருட்களைப் பார்த்துவிட்டு, தனக்கும் அதுபோல் வேண்டும் என எண்ணாமல் இருப்பதைக் கொண்டு வாழ வேண்டும் என்பதை இன்றைய ரம்ஜான் சிந்தனையாகக் கொள்வோம்.

ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்: ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்கும் கட்டாயக் கடமையைச் செய்து வருகிறோம். நோன்பு நோற்பதின் நோக்கமே, பசியின் கொடுமையை உணர்ந்து கொள்ளத்தான். பசித்திருப்பவர் ஒருபுறம், நன்றாகப் புசித்திருப்பவர் ஒருபுறம் என சமுதாயம் இரு பிரிவாக இருக்கிறது. பசியின் கொடுமையை உணரத்தான் பகல் முழுவதும் ஏதும் சாப்பிடாமல் நோன்பு நோற்கிறோம். இதனால் தான், ரம்ஜான் மாதத்தில் மிக அதிகமாக தானம் செய்ய வலியுறுத்தப்படுகிறது. தானம் செய்வதன் மூலம் ஏழைகளின் பசி தீர்கிறது. ஏதுமில்லாத ஏழை கூட, ஒரு டம்ளர் தண்ணீராவது, தவித்து வந்தவர்க்கு தானம் செய்ய வேண்டும். அத்துடன் பல நற்செயல்களையும் செய்ய வேண்டும்.குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வியைப் போதிக்க வேண்டும். நன்மையான வார்த்தைகளை அவர்களிடம் பேச வேண்டும். உற்றார் உறவினர்களுடன் சச்சரவு கூடாது. அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும். பிறருடைய பாரத்தையும் நாமே சுமக்க வேண்டும். அதாவது, ஒரு ஏழைக்குடும்பத்தையாவது நாம் ஏற்றுக் கொண்டு, அவர்களுக்குரிய தேவையை நிறைவு செய்ய வேண்டும். அனாதைகளுக்கு உதவி செய்ய வேண்டும். விருந்தினர்களை முகம் மலர உபசரிக்க வேண்டும்.பெற்றோரை வேதனை செய்பவனை பார்த்துக் கொண்டிருக்கும் இறைவன், “நீ எத்தனை வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டாலும், உன் பாவங்களை மன்னிக்கமாட்டேன்,’ என்று சொல்லியுள்ளதை நினைவில் கொண்டு, பெற்றவர்களுக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும்.””அல்லாஹ் பரிசுத்தமானவன்.  பரிசுத்தத்தையே விரும்புகிறான், அல்லாஹ் மணமுள்ளவன். நறுமணத்தை விரும்புகிறான். எனவே, உங்கள் இல்லங்களை பரிசுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்,” என்ற குர்ஆன் வசனத்தை நினைவில் கொண்டு, வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.இப்படிப்பட்ட நல்ல சிந்தனைகளுடன் நோன்பை மகிழ்ச்சியுடன் நோற்போம்.

நேர்மையாக வாழ்வோம்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகுந்த நேர்மையாளர். ஒருமுறை,அவர்கள் மதீனா நகருக்கு வெளியே கூடாரம் கட்டி தங்கியிருந்த வியாபாரிகளிடம் சென்றார்கள். அந்த வியாபாரிகள் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த சிவப்பு நிற ஒட்டகத்தை அண்ணலாருக்குப் பிடித்து விட்டது. அதை வாங்க எண்ணி, அதன் விலையைக் கேட்டார்கள். அவர்கள் விலையைச் சொன்னதும், அதன் மூக்கணாங்கயிற்றைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
“இவர் என்ன பணம் தராமல் செல்கிறாரே! இவர் யார் என்பதைக் கூட நாம் விசாரிக்கவில்லையே,” என்று வியாபாரிகள் பேசிக்கொண்டிருந்த போது, அவர்களுடன் வந்த ஒரு பெண்மணி, “”கவலையை விடுங்கள்! அந்த முகம் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது தெரியுமா? இப்படிப்பட்ட ஒருவரை இதற்கு முன் நாம் பார்த்ததே இல்லை. இத்தகைய களங்கமற்ற முகத்தை உடையவர் நம்மை ஏமாற்ற மாட்டார். பணமோ அல்லது ஒட்டகத்தின் விலைக்கு ஈடான பொருளோ நிச்சயம் வந்து விடும்,” என்றார். அன்று மாலையே, அந்த ஒட்டகத்தின் விலைக்கு ஈடான பேரீச்சம் பழங்களையும், பிற உணவு வகைகளையும் நாயகம்(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.
அண்ணலாருடன் பங்குதாரராக இருந்த சாயிப் என்ற வர்த்தகர் அவரைப் பற்றிச் சொல்லும் போது, “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என்னோடு வர்த்தகத்தில் பங்காளியாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் அதில் நடந்து கொண்ட முறை மிகவும் உன்னதமாகவும், குறைசொல்ல இடமற்றதாகவும் இருந்தது,” என்றார். நேர்மையுடன் வாழ்ந்து பழக வேண்டும் என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை.

பெற்றவர்களிடம் கனிவுடன் நடப்போம்: “இந்த உலகில் நான் எத்தனை சோதனைகளை அனுபவிக்கிறேன். யா அல்லாஹ்! இதில் இருந்து எனக்கு விடுதலை கிடையாதா?’ என்று கதறிக் கொண்டிருப்பவர்களில் பெரும்பகுதியினரின் வாழ்க்கை வரலாற்றை அலசினால், அவர்கள் பெற்றவர் களைக் கவனிக்காதவர்களாகத் தான் இருப்பார்கள். இவர்களைப் பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறும் போது, “”தாய் தந்தையர்க்கு துன்பம் செய்வதைத் தவிர மற்ற எல்லா பாவங்களுக்கும் அல்லாஹ் மன்னிப்பளிக்கின்றான். பெற்றோர்களுக்கு துன்பம் செய்தவனுக்கு மரணத்திற்கு முன் தண்டனை வழங்கி விடுகின்றான்,” என்கிறார்கள். குர்ஆனில் அல்லாஹ், “தாய் தந்தையரிடம் கருணையோடும், கனிவோடும் பழகுங்கள். அவர்கள் தான் உங்களை அறியாப்பருவத்தில் வளர்த்துப் போஷித்தவர்கள்,” என்று அழகாகச் சொல்கிறார்.
ஒருமுறை நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “”அண்ணலாரே! பாவம் ஒன்றைச் செய்து விட்டேன். அதில் இருந்து மீள வழியிருக்கிறதா?” என்றார். அண்ணலார் அவரிடம், “உமக்கு தாய் இருக்கிறாரா?” என்றதும், “இல்லை” என பதிலளித்தார் வந்தவர்.
“சிற்றன்னை இருக்கிறாரா?” என்றதும், “ஆம்’ என்றார்.
“அப்படியானால் உமது சிற்றன்னைக்கு சேவை செய்யும்,” என அவர்கள் கூறினார்கள்.
“தாயின் காலடியிலேயே சொர்க்கம் இருக்கிறது’ என்று அவர்கள் அருமையாகச் சொன்னார்கள்.
பெற்றவர்களுக்கு சேவை செய்வது ஒவ்வொருவரின் கடமை என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை.

தேவையற்ற பேச்சு வேண்டாமே!: ரம்ஜானின் சிறப்பே தொழுகையை அதிகப்படுத்துவதுதான்.  இந்த இனிய மாதத்தில், பள்ளிவாசலின் சிறப்பையும், அங்கே நடந்து கொள்ள வேண்டிய விதம் பற்றியும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். ஒருமுறை அவர்கள் வானுலகம் சென்றிருந்த போது, அங்கே சிலர் பன்றிக்கறியை தின்று கொண்டிருந்தனர். “”இவர்கள் யார்?” எனக் கேட்டார்கள் நாயகம் (ஸல்) அவர்கள். அதற்கு ஜிப்ரில்(அலை) அவர்கள், “”இவர்கள் பள்ளிவாசலில் அமர்ந்து ஊர்வம்பு அளந்து கொண்டிருந்தவர்கள்,” என்று பதிலளித்தார்கள்.
பள்ளிவாசலுக்குள் உலக விஷயங்கள் பற்றியோ அல்லது வேறு காரியங்கள் குறித்தோ பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நெருப்பை மிதித்தது போன்ற உணர்வை அடைவார்கள். பள்ளிவாசலை விட்டு உடனே வெளியேறி, பேச வேண்டியதை வெளியில் வைத்து பேசிவிட்டு, மீண்டும் பள்ளிவாசலுக்குள் நுழைவார்கள். இதிலிருந்து, இறைவழிபாட்டால் நன்மைகளைச் சுமந்து செல்வதற்காக பள்ளிவாசல் வருபவர்கள் வீண்பேச்சுகளின் மூலம் பாவ மூட்டையை சுமந்து கொண்டு செல்கிறார்கள் என்பதை அவர்கள் உணர வைக்கிறார்கள். அது மட்டுமல்ல, ஏதாவது ஒரு செயல் கவலை தருமானால், அவர்கள் உடனே தொழுகைக்கு சென்று விடுவார்கள்.
இதுபற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மேலும் சொல்வதாவது:
* எமது உம்மத்தவர்களில் அல்லாஹ்வுக்குப் பயந்தவர்கள் பள்ளிவாசல்களில் தங்கியிருப்பார்கள்.
* ஒரு காடைக்குருவி போன்ற சின்னஞ்சிறிய பள்ளிவாசலைக் கட்டுபவருக்காக, சொர்க்கத்தில் அல்லாஹ் ஒரு மாளிகையை எழுப்புகிறான்.
* பாங்கொலி கேட்டு தொழுகைக்கு வராதவர் அநியாயமும், இணை வைத்தலும், வஞ்சகத்தன்மையும் உடையவர் ஆகிறார். பள்ளிவாசலுக்கு செல்லும்போது வீண்பேச்சு வேண்டாம் என்பது இன்றைய ரம்ஜான் சிந்தனையாக அமையட்டும்.
எதையெல்லாம் சிந்திக்க வேண்டும்?: ரம்ஜான் மாதம் இன்று பிறந்துள்ளது. இந்த இனிய நாளில், ஒரு மனிதன் தினமும் என்னென்ன சிந்திக்க வேண்டும் என்பது பற்றிச் சொல்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். இதுவே இன்றைய ரம்ஜான் சிந்தனையாக அமையட்டும்.
* மனிதர்கள் செய்த உதவியைச் சிந்திப்பதை விட இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்யுங்கள். நீங்கள் செய்த நன்மைகளைப் பற்றி சிந்திப்பதை விட, செய்த பாவங்கள் பற்றிச் சிந்தியுங்கள். நீங்கள் உயிருடன் வாழப்போவதைச் சிந்திப்பதைவிட, வருகின்ற மரணத்தைப் பற்றிச் சிந்தனை செய்யுங்கள்.
* மற்றவர்களின் குற்றங்களை நோட்டம் இடுவதை விட, உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள். உப்பை நீர் கரைப்பது போன்று, நற்குணம் உங்கள் பாவங்களைக் கரைத்துவிடும். கள்ளின் மண்டி தேனைக் கெடுத்துவிடுவது போன்று, துர்க்குணம் வணக்கங்களைக் கெடுத்துவிடும். உன் வாயிலாக இறைவன் ஒரு மனிதனுக்கு நேர்வழி காட்டுவது இவ்வுலகத்தையும், இதிலுள்ள யாவற்றையும் விட உனக்கு நன்மை பயப்பதாகும்.
* எவர் அண்டை வீட்டாரைத் துன்புறுத்து கின்றாரோ அவர் என்னைத் துன்புறுத்தியவராவார். அன்பு செலுத்தாதவன் அன்பு செலுத்தப் படுவதற்கு அருகதையில்லாதவன்.
* தர்மம் செய்ய இயலாதவன் ஒரு நற்செயல் செய்வானாக அல்லது ஒரு கெட்ட செயலில் இருந்து விலகிக் கொள்வானாக. அதுவே அவனது ஈகை.
* உங்களை நம்பி ஒருவன் ஒரு செய்தியைச் சொன்னால், அதை அடைக்கலப் பொருள் போல பாதுகாத்து வையுங்கள்.
* தன் பிள்ளைகளைப் பிறர் நல்லவிதமாக நடத்த வேண்டும் என்று விரும்புவர், அனாதைப் பிள்ளைகளை நல்லவிதமாக நடத்த வேண்டும்.
* மனிதன் எதைச் செய்கிறானோ அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்பதை தான் இறைவன் கவனிக்கிறான்.
இந்த சிந்தனை மொழிகளை ரம்ஜான் மாதத்தில் மட்டுமில்லாமல், தினமும் படியுங்கள். உங்களுக்குள் நற்குணம் கொடி கட்டி வளரும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: