Posted by: shuhaib | 06/09/2010

ஒரு படைப்பாளியின் ஆத்மாவேர் ஊடுருவி கிடப்பது அவனது பிறந்த மண்ணில்தான்


‘நாவலோ சிறுகதையோ நான் வாசித்ததில்லை’ – மனம் திறந்து பேசுகிறார் இந்திய எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான்.

“தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மூன்று நாட்களைக் கொண்ட பன்னாட்டு ஆய்வரங்கரமொன்றை ஒலுவில் வளாகத்தில் நடத்தியது. அதன் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றபோது, பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் ஆற்றிய உரை இது.

மீரான் தன்னுடைய ‘சாய்வு நாற்காலி’ எனும் நாவலுக்காக இந்திய சாகித்திய அகடமி விருது பெற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

“நான் இங்கு வேட்டி கட்டி வந்திருக்கின்றேன். நான் கிராமத்து ஆளு. நான் பேச்சாளனில்லை. எங்கு போனாலும் இப்படித்தான் பேசுவேன். எங்கள் ஊரு இந்தியாவின் கடைசி எல்லையான தேங்காய்ப் பட்டணம்.

அரபிக் கடல் துவங்குவது அங்குதான். முடிவது எங்கு என்று தெரியாது. எங்களுடைய மாவட்டம் கன்யாகுமரி, இந்தியாவிலேயே கடைசி வாக்களிக்கும் நிலையம் (பூத்) எங்களுர் தேங்காய்ப் பட்டணம்தான்.

அந்தவகையில் பார்த்தால், இந்தியாவின் கடைசி ஊரிலிருந்து என்னுடைய படைப்புகள் இன்று உலகம் முழுவதும் பல மொழிகளில் பரவியிருக்கின்றன.

தேங்காய்ப் பட்டணத்தின் கதையை நீ ஏன் எழுத வேண்டும் என்று சிலர் கேட்கின்றார்கள். தேங்காய்ப் பட்டணத்திலுள்ள முஸ்லிம்களின் வாழ்க்கையை நாங்கள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும். எங்களுக்கென்ன தேவை என்று அவர்கள் கேட்கிறார்கள்.

தேங்காய்ப் பட்டினம் என்று சொல்லக் கூடிய அந்த ஊரில் ஒரு நூறு, இருநூறு குடும்பங்கள்தான் இருக்கும். இப்போது பலர் வெளிநாடு சென்று விட்டார்கள்.

அந்தக் கிராமத்திலுள்ள வாழ்க்கையைப் பற்றி நீ ஏன் எழுதுகிறாய்? நீ ஏன் சென்னையைப் பற்றி எழுதவில்லை? நீ ஏன் மதுரையைப் பற்றி எழுதவில்லை? நீ ஏன் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் திருநெல்வேலியைப் பற்றி எழுதவில்லை என்றெல்லாம் கேட்கிறார்கள்.

உங்களுக்கும் எனக்கும் சம்பந்தமேயில்லை. நான் பிறந்த ஊரு, நான் சுவாசித்த காற்று, நான் ஓடி விளையாடிய மண் போன்றவற்றை எழுதாமல் வேறு எதை எழுதுவது? இன்றைக்கு வரைக்கும் திருநெல்வேலியைப் பற்றி ஒரு கதை கூட நான் எழுதியது கிடையாது. கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக நான் அங்கு தங்கி இருக்கிறேன்.

ஒரு படைப்பாளியின் ஆத்மாவுடைய வேர் ஒட்டிக்கிடப்பது அவன் பிறந்த மண்ணில்தான் அந்த மண்ணைத் தொடாமல், யாராலும் படைப்பை உருவாக்க முடியாது. ஏன் நான் தேங்காய்ப் பட்டணத்தை எழுதுகிறேனென்றால் அந்த கிராமத் தைப் போல் உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது. தேங்காய்ப் பட்டிணம் என்கிற அந்த சிறு கிராமம் வழியாக நான் உலகத்தைப் பார்க்கிறேன்.

எங்கள் ஊர் கடலில்தான் முடிகிறது. எங்கள் வீடு கடற்கரையில்தான் இருக்கிறது. அங்கே மீனவர்களின் வாசல்களெல்லாம், திறந்துதான் கிடக்கும். ஆனால் இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். முன்பு வாசல் திறந்து கிடந்த வீட்டில் இப்போது புதிதாய் ஒரு பூட்டு, உள்ளேயும் பூட்டு.

கதவில் ஒரு ஓட்டை. அந்த ஓட்டை வழியாக என்னைப் பார்த்து விட்டுத்தான் கதவைத் திறக்கிறான். இப்படி – வாழ்க்கை முறையே மாறிப்போய் விட்டது. மனிதன் மனிதனையே நம்பாத ஒரு காலகட்டமாகி விட்டது.

எங்கள் கிராமம் விசித்திரமானதொரு கிராமம். உலகத்திலேயே இப்படியொரு கிராமம் இருக்குமா என்று தெரியவில்லை. மேற்குப் பக்கமாக பாறையொன்றின் மேல் ஒரு பள்ளி. அது பாழடைந்து கிடக்கிறது.

கிழக்கு பக்கமாகவும் ஆற்றை ஒட்டியதுபோல் ஒரு பாறை, அதற்கு மேலும் ஒரு பள்ளி இருக்கிறது. மத்தியில் 1400 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதொரு மாலிக் இப்னார் பள்ளிவாசல் இருக்கிறது. இந்தப் பள்ளிகளைச் சுற்றித்தான் அன்று முஸ்லிம் கொலனிகள் இருந்தன.

முஸ்லிம்கள் என்றால் அவர்களில் பாகுபாடில்லை, ஒன்றுபட்டவர்கள் என்றுதான் நாம் சொல்வதுண்டு. ஆனால், அங்கு நான்கு ஐந்து அடுக்கு மக்கள் இருந்தார்கள்.

முதல் வகையினர் தங்கம். தங்கம் என்றால் தங்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள். இவர்கள் நபிகள் நாயகத்தின் பின் வாரிசு என்று சொல்வார்கள். அடுத்தவர்கள் நிலப்பிரபுக்கள். அதாவது நீங்கள் போடியார் என்று சொல்கின்றவர்கள். அடுத்தது மத்தியதர மக்கள். அதற்குக் கீழே ஏழைத் தொழிலாளிகள். அதற்கும் கீழே பார்த்தால் ‘ஒஸ்தா’ அதாவது நாவிதன்மார்.

ஒரு அடுக்கு மக்களுக்கும், அடுத்த அடுக்கு மக்களுக்கும் தொடர்புகளேயில்லை. இங்கு படிப்பறிவில்லாத முஸ்லிம்களை – மற்றைய முஸ்லிம்கள் எப்படிச் சுரண்டினார்கள் என்பதைத்தான் நான் எழுதுகின்றேன்.

தோப்பு என்பது எனது பெயரில்லை. எனது ஊரின் ஒரு பகுதியினுடைய பெயர். எனது ஊரின் ஒரு பக்கமாக ஒரு தோப்பு இருக்கிறது. அந்த தோப்பிலுள்ள சுடுகாட்டில்தான் பொற்கொல்லர்கள் தமது சவங்களை எரிப்பார்கள். அப்படி எரிக்கும் புகை நேராகப்படுவது எங்கள் வீட்டு அடுக்களையில்தான்.

அந்தப் புகையைத்தான் நாங்கள் சுவாசிக்கின்றோம். இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் சவத்தைச் சுடும்போது கபாலம் மிகச் சத்தமாக வெடிக்கும். அது குண்டு வெடிக்கும் சத்தம் போல் பயங்கரமாக இருக்கும். அந்த சத்தங்களைக் கேட்டுக் கொண்டுதான் நாங்கள் உறங்கச் செல்வோம்.

இப்படிப்பட்ட ஒரு பின்தங்கிய பகுதி எங்களுடையது.

நான் முன்பு சொன்ன மாலிக் இப்னார் பள்ளிவாசல் பகுதியில் இருக்கும் முஸ்லிம்களையும், எங்களையும் பிரிக்க ஒரு குத்துக்கல் இருக்கின்றது. இந்தப் பக்கமாக அவர்கள் வரவே மாட்டார்கள். கல்யாணத்துக்கு அவர்கள் கூப்பிட மாட்டார்கள். இப்படிப் பிற்படுத்தப்பட்டதொரு பகுதி. அங்கேயிருந்துதான் நான் மனிதனைப் படித்தேன்.

நான் வாசிக்கவில்லை. எனக்கு வாசிப்பே கிடையாது. உண்மையாகச் சொல்கிறேன். ‘கடலோரக் கிராமத்தின் கதை’ நாவல் எழுதும் வரை – நான் தமிழில் ஒரு நாவல் கூட வாசித்ததில்லை. பாடசாலைக் காலத்தில் மலையாளப் புத்தகங்கள் வாசித்திருக்கிறேன்.

இதுவரைக்கும் ஜெயகாந்தனுடைய ஒரு நாவலையோ, சிறுகதையையோ கூட நான் வாசித்தது கிடையாது. கு.பா. ராஜகோபால் போன்றவர்களின் பெயர்கள் கூட எனக்குத் தெரியாமல்தான் இருந்தது. நான் அதுபற்றிப் பொருட்படுத்தியதேயில்லை. நான் எல்லோரிடமும் சொல்வது, “யாரும் வாசிக்க வேண்டாம்” என்றுதான்.

ஒரு படைப்பாளி படைப்பதற்கு வாசிக்க வேண்டிய தேவையேயில்லை. வாசிக்கணும். யாரை? சமூகத்தை! மனிதனுடைய மனங்களையும், அசைவுகளையும் படிக்கணும். அதுதான் ஒரு படைப்பாளியின் வாசிப்பு. அதுதான் என்னுடைய வாசிப்பு! அதனால்தான் இத்தனை வீரியமாகவும், சதையும் ரத்தமும் கொண்டதாக என் படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

என்னுடைய படைப்புகள் இவ்வாறு இருப்பதற்கு இன்னுமொரு காரணம் கடிதம் எழுதியதுதான்.

அங்குள்ள நிலப் பிரபுகளின் கொடுமை மிகக் கடுமையானது. அவர்களின் பெயர்களைக் கூட சாதாரண பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்களுக்குள் வைக்க முடியாது. அதையும் மீதி பெயர் வைத்தால் என்ன தண்டனை தெரியுமா? பெயர் வைத்தவன் தன்னிடமுள்ள சொத்துக்களை அதே பெயரையுடைய முதலாளிக்கு எழுதிக் கொடுத்துவிட வேண்டும். அப்படியில்லா விட்டால், பள்ளிக்குள் கட்டி வைத்து அடிப்பார்கள்.

முதலாளிக்கு எதிரே நாம் போக முடியாது. முஸ்லிம் சமுதாயம் என்று எங்களைப்பற்றிப் பெருமையாகப் பேசிக் கொள்கின்றோம். ஆனால், இந்தக் கொடுமைகள் கிராமங்களில் நடந்திருக்கிறது.

இன்னுமொரு தண்டனை முறை இருகிறது. ஊர் விலக்கு என்று! இதைப் போல மிகப் பெரும் மனித உரிமை மீறல் உலகில் வேறெதுவுமில்லை. விலக்கப்பட்டவனின் மையத்தை அடக்க முடியாது. அவன் ஒரு கல்யாணத்துக்குப் போக முடியாது. ஒரு இறந்த வீட்டுக்குப் போக முடியாது. சமூகத்தில் அவன் தனிமையாக்கப்படுகின்றான்.

இவ்வாறானவைகளைப் பார்க்கும் போது எனக்குள் பயங்கரமான குமுறல் ஏற்பட்டது. துப்பாக்கி இருந்தால் சுட்டிருப்பேன். துப்பாக்கியால் சுடுமளவு கோபம். ஆனால், எனக்குத் தெரிந்ததெல்லாம் எழுத்துத்தான். குமுறிக் குமுறி எனக்குத் தெரிந்த மொழியில் எழுதினேன்.

எனக்கு என்ன மொழி தெரியுமோ அதுதான் என்னுடைய துப்பாக்கி, கடலோரக் கிராமத்தின் கதை’ வெளிவந்தது. மிகப்பெரியதொரு புரட்சி ஏற்பட்டது. ஒரு படைப்பாளி இப்படிக் கொடுமைகளைத் தாங்கி நிற்க முடியாது.

இந்தக் கொடுமைகளுக்கெதிராக அன்று நிறைய ‘மாப்பிள்ளைப் பாட்டு’கள் உருவாகியிருந்தன. மாப்பிள்ளைப் பாட்டு என்பது இந்தியாவின் மலபார் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டதொரு பாடல் முறையாகும். அந்தப் பாடல்களில் அரபி, தமிழ், மலையாளம் என்று எல்லா மொழிச் சொற்களும் இருக்கும்.

மாப்பிள்ளைப் பாடல்கள் எழுதப்பட்டது அரபி மலையாளத்தில்தான். அன்று போத்துக்கேயருக்கு எதிராக முஸ்லிம்கள் மத்தியில் ஒரு எழுச்சியையும், விழிப்பினையும் ஏற்படுத்துவதற்காக இயற்றப்பட்டவைதான் இந்த மாப்பிள்ளைப் பாடல்கள். அந்தவகையில் நிறையவே மாப்பிள்ளைக் கவிஞர்கள் எங்கள் ஊரில் இருந்தார்கள்.

நான் பாண்டிச்சேரியிலிருந்து வருகிறேன். அங்குதான் பாரதி, பாரதிதாசன் போன்றோர் இருந்தார்கள் என்று இங்கு சொன்னார்கள். பாரதி, பாரிதாசன்களின் ‘அப்பன்’களே எங்கள் ஊரில் இருந்தார்கள். தொல்காப்பியர், அகஸ்தியர், திருவள்ளுவர் போன்றோரெல்லாம் எங்க ஊர்க்காரர்கள்.

ஒளவையாரும் எங்க ஊர்க்காரர்தான். இவர்கள் வாழ்ந்த மண்ணிலிருந்துதான் நான் வந்திருக்கிறேன். நான் பேசக் கூடியதுதான் தமிழ். என்னுடைய தமிழைத் தமிழ் அல்ல என்று யாரும் சொல்ல முடியாது. எனது நாவலைப் படித்தவர்கள் சிலர் எனது தமிழை மலையாளம் என்று சொல்கிறார்கள். சில பேராசிரியர்களும் அவ்வாறுதான் சொல்கிறார்கள். அவர்களுக்கு இந்த மொழி பற்றி ஒன்றும் தெரியாது.

எங்க ஊரிலிருந்து மூன்று கிலோமீற்றருக்கு அடுத்து ‘காப்பிக்காடு’ என்று ஒரு ஊர் இருக்கிறது. அதன் சரியான பெயர் ‘காப்பியக்காடு’ அங்குதான் தொல்காப்பியர் பிறந்தார். அங்கிருந்து மூன்று, நான்கு கிலோமீற்றர் மேற்காக இருக்கிறது ‘அலங்கோடு.’ அலங்கோடு ஆசான் அங்குதான் பிறந்தார். அவருக்காக ஒரு நினைவுச் சின்னத்தை தமிழ்நாட்டு அரசாங்கம் அங்கு செய்து வைத்துள்ளது.

இந்திய நாடுகளில் – செங்கநாடு, குமரிநாடு, மொடாலநாடு, வள்ளுவநாடு என்று இருந்தன. குமரிக்கண்டத்தைக் கடல் அரித்த போது சில நாடுகள் அழிந்து போயின. எஞ்சிய நாடுகளில் ஒரு நாடு செங்கநாடு! அந்த செங்கநாட்டின் தலைநகரம்தான் எங்கள் ஊரான தேங்காய்ப்பட்டணம்.

மொடால நாட்டின் தலைநகரம் மொடா என்பது அது இப்போதும் இருக்கிறது. வள்ளுவ நாட்டினுடைய தலைநகரம் முட்டம். அதற்குப் பக்கத்தில்தான் வள்ளுவர் பிறந்தார். அங்கு வள்ளுவ மலை இருக்கிறது. நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

திருக்குறளில் பயன்படுத்தப்படும் நிறையச் சொற்கள் எங்களுரில் பயன்பாட்டிலிருக்கிறது. இந்த வேட்டியை – சீலை, முண்டு என்றெல்லாம் சொல்வோம். கடைசி என்பதை தொங்கல் என்போம். பிறருக்கு புரிகிறதோ இல்லையோ, எனது மொழியில்தான் நான் பேசுவேன் எனது மொழியில்தான் எழுதுவேன். எவர் என்ன சொன்னாலும் எனது எழுத்தில் ஒரு வார்த்தையைக் கூட நான் மாற்றியது கிடையாது.

நீங்கள் சமூகத்தைப் படியுங்கள். மக்களைப் படியுங்கள். மக்களுடைய மொழியைப் படியுங்கள். படிப்பறிவில்லாத சாதாரண மக்களிடம்தான் தமிழ் இருக்கிறது.

ஒரு படைப்பாளி அவன் வாழும் காலத்தில் ஒரு கலகக்காரனாகத்தான் இருப்பான். அவனை அரசாங்கம் ஆதரிக்காது. சமூகம் அங்கீகரிக்காது. அவன் வாழக் கூடிய காலத்தில் சமூகத்தின் மத்தியில் மிகப்பெரும் போராளியாகவே இருப்பான். எவர் ஆட்சிக்கு வந்தாலும் அவன் போராளிதான். எப்போதும் சமூகத்தில் ஒரு படைப்பாளி போராளியாகத்தான் இருக்க வேண்மே தவிர, அரசாங்கத்துக்கு ஆதரவாகவோ சமுதாயத்துக்கு ஆதரவாகவோ இருத்தல் கூடாது.

உலகில் ‘இட்டிஸ்’ எனும் ஒரு மொழி இருக்கிறது. அது ஹீப்ருவில் இருந்து திரிந்த ஒரு மொழி. ஹீப்ருவிலுள்ள பழங்காலத்து வயோதிபர்கள் பேசக் கூடியதுதான் ‘இட்டிஸ்’ உலகிலேயே ‘இட்டிஸ்’ மொழியைப் பேசக் கூடியவர்கள் 01 லட்சம் பேர்தான் இருக்கிறார்கள்.

இவர்களுக்காக ‘இஸ்டிஸ்’ மொழியில் ஒரு மாதாந்த சஞ்சிகை வந்து கொண்டிருந்தது. அந்த சஞ்சிகை ஆயிரம் பிரதிகள்தான் வெளியிடப்படும். இவ்வாறான ‘இட்டிஸ்’ மொழியில்தான் – ஐசக் சிங்கர் என்கிற படைப்பாளி எழுதினார். அந்த ஆயிரம் பிரதிகள் விற்கும் சஞ்சிகையில்தான் அவர் எழுதினார். இத்தனைக்கும் இவருக்கு ஜேர்மன் ஆங்கில மொழிகளெல்லாம் தெரியும். ஆனால் அவருடைய தாய்மொழி ‘இட்டிஸ்’

அதாவது ஒரு இலட்சம் பேர் பேசுகிற ஒரு மொழியில் ஆயிரம் பிரதிகள் வெளியாகிற அந்த மொழிக்கான சஞ்சிகையில்தான் ஐசக் சிங்கர் எழுதினார். அப்படி எழுதிய அந்தப் படைப்பாளிக்குத்தான் அந்த மொழியில் எழுதியதற்காக நோபல் பரிசு கிடைத்தது.

ஆக ஒரு மொழியை யார் பேசுகிறார்கள், எத்தனை பேர் பேசுகிறார்கள் என்பதெல்லாம் பிரச்சினையே அல்ல. தன்னுடைய தாய்மொழியினூடாகத்தான் ஒரு படைப்பாளி உருவாக முடியும். படைப்பாளி தன்னுடைய மொழியில் படைத்தால்தான் வாசகனுடைய மனதில் சித்திரம் வரையக் கூடியவனாக மாற முடியும்!

Advertisements

Responses

  1. நல்ல கட்டுரை …………..

    http://www.kotticode.com

    • மிகவும் நன்றி நண்பரே.. உங்கள் வருகைக்கு நன்றி..


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: