Posted by: shuhaib | 13/09/2010

எங்கே செல்கிறோம் நாம்?


அறிவியல் வளர்ந்து நாகரிக மோகம் இந்த உலகை ஆட்கொண்டுவிட்டது. அறிவியல் புரட்சியில் நகரங்கள் மட்டுமன்றி கிராமங்களும் சேர்ந்து அடையாளம் இழக்கத் தொடங்கியிருக்கின்றன. பணத்தைத் தேடி ஓடும் இந்த ஓட்டத்தின் இடையே ஆன்மிகம், விளையாட்டு, வாசிப்பு என நாம் புறந்தள்ளிச் செல்லும் விஷயங்கள் ஏராளம். இந்தியாவே கிராமங்களில்தான் வாழ்கிறது என்பது இப்போது வெறும்பேச்சாகி வருகிறது. நகரங்கள், கிராமங்கள் இடையே பொருளாதார ரீதியில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள் ஒருபுறம் இருந்தாலும், கிராமங்கள் தங்கள் முகத்தை இழக்கத் தொடங்கியிருக்கின்றன என்பதுதான் உண்மை. கான்கிரீட் காடுகளான நகரங்களை நோக்கிச் செல்லும் கிராமத்து மக்களைப்போல, கிராமத்து மண்ணும் நகரங்களைப்போல மாறி நரகமாகி வருகிறது. கிராமங்களுக்கு என சில அடையாளங்கள் உண்டு. வயல்வெளி, திண்ணை வீடுகள், மரத்தடி, கோயில், குளம் இவற்றுடன் மண் மணக்கும் விளையாட்டுகள். ஐவகை நிலங்களுக்கும் ஒவ்வொரு வித விளையாட்டு பிரசித்தம். நம் தலைமுறை வரை இந்த கிராமத்து விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்துள்ளோம். ஆனால், கடந்த இருபது ஆண்டுகளில் கிராமப்புற விளையாட்டுகள் படிப்படியாக மறைந்து வருவது அதிர்ச்சிக்குரிய ஒரு விஷயம். கபடி – தமிழக கிராமங்களுக்கே உரிய அடையாளம். ஒரு காலத்தில் ஊருக்கு ஊர் கேட்ட “”சடுகுடு  சடுகுடு” சப்தங்களை இப்போது கேட்க முடியவில்லை. திருவிழா காலங்களில் சில கிராமங்களில் மட்டுமே இப்போது கபடி விளையாடப்படுகிறது. காற்றைக் கிழித்து சுற்றும் சிலம்பம் சிறந்த தற்காப்புக் கலை. அந்தச் சிலம்பமும் காணாமலே போய்விட்டது. உறியடி விளையாட்டு, பெண்கள் விளையாடும் பாண்டியாட்டம், பல்லாங்குழி போன்றவை பற்றி இக்கால சிறுவர், சிறுமிகளுக்குத் தெரிவதே இல்லை. கோலிக்குண்டு, பம்பரம் சுற்றுதல் போன்ற விளையாட்டுகளுக்கும் அதே(ô) கதி. கண்ணாமூச்சி விளையாட்டு –  பெயருக்கேற்ப எங்கேயோ போய் ஒளிந்துகொண்டுவிட்டது. “ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததாம்’ என்ற குரல் மட்டும் நினைவலைகளில் தேங்கிக் கிடக்கிறது. “மாலை முழுவதும் விளையாட்டு’ என சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கினார் பாரதி.  பாரதியின் விருப்பப்படி, வீதிகளில் சிறுவர் கூட்டம் சேர்ந்து ஆடும் ஆட்டங்களில் மகிழ்ச்சியும் தாண்டவமாடும். இவை வெறும் விளையாட்டாக இல்லாமல், சிறுவர்களின் மனதுக்கு மகிழ்ச்சியையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் அள்ளித் தந்தன. ஆனால், இப்போது அறிவியல் வளர்ந்து குழந்தைகளின் குழந்தைத்தனத்தை முடக்கிப் போட்டுள்ளது. கலாசார அழிவுகள் நம் கண்முன் நடப்பதைப் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில்  கிராமப்புற விளையாட்டுகளும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது. இந்த நவீன யுகத்திலும் விளையாட்டுகள் உண்டு. ஆனால், அத்தனை விளையாட்டுகளையும் சிறுவர்கள் கணினியிலேயே விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் துப்பாக்கி, கார் துரத்தல் என வன்முறை விளையாட்டுகள். இத்தகைய விளையாட்டுகள் மூலம் உடல் மட்டுமன்றி, மூளையும் களைப்படைந்து சிந்தனை வறட்சி ஏற்படுகிறது. குழந்தைகள் படிப்பிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. போனால் போகட்டும் என்று வீதிக்கு வீதி கிரிக்கெட் சிறுவர்களை மட்டும் காணலாம். இக் காலக் கல்வி முறை, தொலைக்காட்சி, கணினி போன்றவை சிறுவர்களை முடக்கிப் போட்டுள்ளன. ஓடி ஆடி விளையாடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம், ஒற்றுமை உணர்வு இந்தத் தலைமுறை குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. விளையாட வாய்ப்புக் கிடைத்தாலும், பள்ளி நேரம் போக, மற்ற நேரங்களில் தனிப் பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஷ், இந்தி வகுப்பு, யோகாசனம் என அட்டவணை போட்டு குழந்தைகளை அனுப்பிவிடுகிறோம். ஒவ்வொரு தலைமுறையிலும் சுத்தமான காற்று, நீர்நிலைகள், மரங்கள் என ஒவ்வொன்றாக இழந்துகொண்டே வருகிறோம். பழங்காலத் தமிழகம் விளையாடி மகிழ்ந்த விளையாட்டுகளையும் இப்போது இழக்கத் தொடங்கியிருக்கிறோம். இது சாதாரண இழப்பு அல்ல. கலாசார, பண்பாட்டுச் சிதைவாக எண்ணி கவலைகொள்ளத்தக்கது. ஏற்கெனவே, மனிதர்களின் வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக அழியும் பறவையினங்கள், அரியவகை மரங்கள் அழிவு, சிறுதொழில்கள் அழிவு, நதிகள் அழிவு என அழிந்துகொண்டிருக்கும் பட்டியல் நீள்கிறது. பழையன கழிதல் – இயல்புதான். ஆனால், நம்மை, நம் பண்பாட்டை மறக்கச் செய்யும் எந்தவொரு வளர்ச்சியும் வெறுப்பை ஏற்படுத்துகிறது. எங்கே செல்கிறோம் நாம்?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: