Posted by: shuhaib | 25/09/2010

பாபர் மசூதி — தேவை தீர்ப்பா தீர்வா?


த்தரப்பிரதேச மாநிலம் மட்டுமின்றி அகில இந்தியாவும் — இந்துக்களும் முஸ்லிம்களும்  அமைதியை நாடும் பொதுமக்களும் தீர்ப்பில் இருந்து அரசியல் ஆதாயம் பெற, அரசியல் கட்சிகளும் என அனைத்துத் தரப்பினரும் — பீதி கலந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தீர்ப்பு இம்மாதம் 24 ஆம் தேதி அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையால் வழங்கப்பட உள்ளது.

ராமன் கடவுளா, அவ்விடத்தில்தான் ராமன் பிறந்தானா, ராமஜன்மபூமி கோயிலை இடித்து மீர்பாகி பாபர் மசூதியைக் கட்டினானா அல்லது  மசூதியை இடித்தது சரியா தவறா என்றெல்லாம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப் போவதில்லை.

அத்வானி, உமாபாரதி, வினய்கட்டியார்,அசோக்சிங்கால் முன்னிலையில், பீஜேபி தலைமையில் ஒன்றுதிரண்ட காவித்தீவிரவாதிகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர்மசூதி நின்ற இடமான சுமார் 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தமானது என்பதற்கே தீர்ப்பு.

இரு தரப்பு மோதும் ஒரு வழக்கில் ஒரு தரப்புக்குச் சாதகமாகத் தீர்ப்பு வருவதே இயல்பு.

நம் நாட்டு நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவதில் ஆமையையும் நத்தையையும் மிஞ்சும் வேகம் காட்டுகின்றன.

பாபர்மசூதிப் பிரச்சனை இன்று நேற்று முளைத்ததில்லை.  இராமாயணத்தில் குறிப்பிடப்படும் அயோத்தி நகரம் இந்துக்களுக்குப் புனித நகரம் என்பதால், அந்நகரில் மசூதி கட்டப்பட்ட காலத்தில் இருந்தே இப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியிலும் விடுதலை பெற்ற இந்தியர்களின் ஆட்சியிலும் தொடர்ந்த இப்பிரச்சனைக்கு, 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி மசூதி இடிக்கப்பட்டுப் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின் ஒரு தீர்ப்பு வரப்போகிறது.

தீர்ப்பு எதுவாயினும் கலவரம் வருவது உறுதி என்ற  திடமான நிலைப்பாட்டில் உத்தரப்பிரதேச அரசு காவல்துறையையும் துணைராணுவப்படையையும் மாநிலமெங்கும் சிறப்புச் சிறைகளையும் ஆயத்தப்படுத்தி வருகிறது.

“இது ஒரு முடிவான தீர்ப்பன்று; பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்” என மற்றொரு புறம் மத்திய அரசு மக்களின் ‘டென்ஷனை’க் கூட்டுகிறது.

பாபர்மசூதி போன்ற ஒரு பழமை வாய்ந்த கட்டடம்  இடிக்கப்பட்டது பிரச்சினையில்லை. அக்கட்டடத்தை இடித்ததால் நாட்டில் முஸ்லிம்களின் இருப்பும் உரிமையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டதே பிரச்சனை.

அயோத்தியில் பாபர்மசூதி நின்ற இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பை அளித்தாலும் அதை நாங்கள் மதித்து ஏற்போம் என பாரதீய ஜனதாக் கட்சி கூறினாலும் அதன் காவிக் கூட்டாளிகளான விஸ்வஹிந்து பரிஷத்தும் பஜ்ரங் தள்ளும் ராமர்கோவில் விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ர்ப்புச் சொல்ல முடியாது என வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர்.

“சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதிப்பதே பிரச்சனைக்குத் தீர்வாக அமையும்” என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன்பகவத் கூறியுள்ளார். “முஸ்லிம்கள்  ராமர் கோயில் கட்ட ஆதரவளித்துவிட்டால் பின்பு  யாரும் அவர்களை நோக்கித் ‘தேச துரோகிகள்’ என்று கூற முடியாது” என்றும் அவர் கூறினார்.

நீதிமன்றத் தீர்ப்பு தங்களுக்கு எதிராகவே இருக்கும் என இவர்கள் எதிர்பார்ப்பதாகவே தெரிகிறது.

“முஸ்லிம்கள் பாபர்மசூதி நின்ற இடத்தை ராமர்கோவில் கட்ட வழங்குவதன் மூலம் தங்கள் தேசபக்தியை நிரூபிக்க வேண்டும்” என மறைமுகமாக “பிளாக்மெயில்” செய்கிறார் மோகன் பகவத்.

தீர்ப்பு என்னவாக இருப்பினும் மேல்முறையீடு என்ற அஸ்திரத்தைப் பிரயோகிப்பதைவிட முஸ்லிம்களை மிரட்டியே காரியத்தைச் சாதித்து விடலாம் என்ற அவர்களது எண்ணமே இதில் பிரதிபலிக்கிறது.

“நீங்கள் எங்களுக்கு அடங்கிப் போகவில்லையெனில் “தேசத்துரோகிகளான” உங்களை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்பது எங்களுக்குத் தெரியும். மீண்டும் ரத யாத்திரைகளால் ரத்தாபிஷேகம் நடத்தத் தயங்க மாட்டோம்; மும்பையும் குஜராத்தும் எங்கள் பயிற்சிக் களங்கள்தாம். இனி வருவது நிஜமான செயற்களமாக இருக்கும்” என்ற எச்சரிக்கையும் இதில் தொனிக்கிறது.

ஒரிஸ்ஸாவில் ஸ்டெயின்ஸ் பாதிரியாரையும் அவரது மக்களையும் உயிரோடு கொளுத்தியதையும் மத்தியப்பிரதேசத்தில் கிருத்துவக் கன்னீயாஸ்திரீகளைக் கற்பழித்ததையும் தேசபக்தி மிக்க செயல் என வருணித்தவர்கள் விஹெச்பி, பஜ்ரங்தள் தலைவர்கள்.

தேசம் என்பது உலக வரைபடத்தின் எல்லைக்குள் அடங்கும் நிலப்பரப்பும் அதில் உருவாகி இருக்கும் கட்டடங்களும் தொழிற்சாலைகளும் கடலும் நதியும் மலைகளும்  மட்டும் இல்லை. மக்களும் அவர்களது பண்பாடும் நாகரீகமும் உயரிய விழுமியங்களும் இணைந்ததே தேசம் ஆகும்.

தேசபக்தி என்பது உலகின் முன் தம் தேசத்தைத் தம் உயரிய விழுமியங்களால் உயர்த்திக் காட்டுவது ஆகும்.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்று வெளியான செய்தி அந்நாட்டின் மானத்தைக் கப்பலேற்றியது என்றால், கற்பழித்தும் நெருப்பிட்டுக் கொளுத்தியும் வழிபாட்டுத் தலத்தை இடித்தும் கலவரங்களை உருவாக்கி இனப்படுகொலை செய்தும் தேசத்தின் மதிப்பையும் மானத்தையும் கெடுத்தவர்கள் தம் செயலின் விளைவை உணர்ந்து கொண்டால் தேசபக்தி என்ன என்பது விளங்கும்.

குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது அன்றைய பிரதமர் வாஜபாய் “நான் எந்த முகத்துடன் வெளிநாடுகளுக்குச் செல்வேன்?” எனக் கவலையுடன் கேட்டதுதான் தேசபக்தி.

முஸ்லிம்கள் அயோத்தி இடத்தைக் கொடுத்துவிட்டால் இவர்கள் அடங்கி விடுவார்களா?அப்படிக் கொடுப்பது ஒட்டகத்துக்கு இடம் கொடுத்து அரேபியன் இறந்த கதையாகிவிடாதா?

அடுத்து இவர்களின் பட்டியலில் உள்ள மதுராவையும் காசியையும் விட்டுவிடுவார்களா?

இந்தத் தேசபக்தித் திலகங்கள், “நீதிமன்றத் தீர்ப்பு எப்படி வந்தாலும் நாங்கள் இந்நாட்டுக் குடிமக்களான எங்கள் முஸ்லிம் சகோதரர்களுக்கு அவ்விடத்தைக் கொடுக்கிறோம்” எனச் சொல்லித் தம் தேசபக்தியை நிரூபிக்கலாம்; இந்தியாவின் மதிப்பையும் இந்துக்களின் மாண்பையும் உலகின் முன்னே உயர்த்திக் காட்டலாம். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தாவிடின் அச்செயல் “காவித்தீவிரவாதம்” எனச் சிதம்பரம் சொன்னதை உறுதிப்படுத்துவதாகவே அமையும்.

நன்றி : இந்நேரம்.காம்
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: