மகாத்மா காந்தி “உண்மையையே பேசு” என்று சொன்னதற்காக யாரும் பொய்யே பேசாமல் இருந்து விடாதீர்கள். பொய்யின் இனிமை அதை அனுபவித்து பார்த்தவர்களுக்குத்தான் புரியும். அதனால்தானே பொய் பேசுவதற்காகவே ஏப்ரல் 1-ஆம்தேதி என்ற ஒரு நாளையே தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார்கள்.
பள்ளிக்கூடத்திற்கு தாமதமாக போகிறவர்களும், அலுவலகத்திற்கு தாமதமாக போகிறவர்களும் “பொய்” என் ற சால்ஜாப்பு இருப்பதினால்தானே தப்பித்துக் கொள்கிறார்கள்? “பஸ் லேட்டு”, “டிராபிக் ஜாம்”. – இந்த வார்த்தைகள் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
பொய்யில்லாத கவிதையில் சுகமேது?
பொய்யில் இரண்டு வகை இருக்கிறது. நாம் சொல்லும் பொய் பிறருக்கு பாதகம் உண்டாக்குமென்றால் அது கூடாது. நாம் சொல்லும் பொய் பிறரை பாதிக்காது என்றால் அது தாராளமாகக் கூடும்.
ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்துவது தப்பில்லை என்று சும்மாவா சொன்னார்கள்?
காதலன் காதலியிடத்தில் கூறும் பொய்யும், காதலி காதலனிடத்தில் கூறும் பொய்யும் அது ஊடலில் சென்று முடியுமானால் அந்தப் பொய் தாராளமாகக் கூடும்.
அம்மாவின் பொய்கள் என்ற தலைப்பில் ஞானக்கூத்தன் எழுதிய கவிதையொன்று “பொய்”களை என்னை வெகுவாக ரசிக்க வைத்தது.
அம்மாவின் பொய்கள்
————————————பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால்
சாமி கண்களை குத்தும் என்றாய்தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்எத்தனை பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா
அத்தனை பொய்கள்
முன்பு சொன்ன நீ
எதனால் இன்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்?தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டது என்றா?
எனக்கு இனி பொய்கள் தேவை இல்லை
என்று எண்ணினாயோ?அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும் பொறுப்பு
இனி அரசாங்கத்தைச் சார்ந்ததாய்க் கருதினாயா?தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா?
உன் பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?
நன்றி: நாகூர் மண்வாசனை
Leave a Reply