Posted by: shuhaib | 01/03/2011

வெற்றி நிச்சயம் (படித்ததில் பிடித்தது)


உலகில் படைக்கப்பட்டுள்ள அனைத்து உயிரினங்களும் ஏதோ ஒரு காரணத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். வெற்றியும் தோல்வியும் நம் கைகளில் தான் உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் எதையாவது ஒன்றை அடைய வேண்டும் என்றால் அதை எப்பாடுபட்டாவது அடைந்தே தீருவேன் என்று சபதம் செய்ய வேண்டும். விருப்பம் இல்லாமல் நம்மால் எதையும் அடைய இயலாது.
ஒரு சமயம் பிக்கு ஒருவர் புத்தவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.
“பகவரே, தாங்கள் ஒவ்வொரு மனிதனும் மோட்சத்தை அடைய முடியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் மனிதர்கள் ஏன் அதை அடைவதில்லை”“இன்றே நீ ஒரு காரியம் செய். இந்த பகுதியிலுள்ள மனிதர்களைச் சந்தித்து அவர்கள் அடைய விரும்புவது என்ன என்று கேட்டு அவற்றை மனதில் பதிவு செய்து கொண்டு வா”
புத்தபெருமான் இவ்வாறு சொன்னதும் அந்த பிக்கு அன்றே அந்த வேலையைத் தொடங்கினார். அந்த ஊரில் இருந்த பலதரப்பட்ட மனிதர்களைச் சந்தித்து புத்தர் கேட்கச் சொன்னது போலவே தாங்கள் அடைய விரும்புவது எதை என்று கேட்டார். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள்.
அன்று மாலை பிக்கு புத்தரைச் சந்தித்தார்.
“நான் சொன்னவாறு செய்தாயா?” என்று புத்தர் கேட்க அதற்கு பிக்கு “ஆம். அவ்வாறே செய்தேன்” என்றார்.
“கேட்டவற்றைச் சொல்”
பிக்கு தான் சந்தித்த மனிதர்கள் அடைய விரும்பிய விஷயங்களை ஒவ்வொன்றாகக் கூறினார்.
இவற்றை அமைதியாகக் கேட்ட புத்தர் “இவர்களில் ஒருவர் கூட மோட்சத்தை அடைய விரும்புகிறேன் என்று சொல்லவில்லையே” என்று கேட்டார்.
அதற்கு அந்த பிக்குவும் “ஆம்” என்றார்.
“விரும்பாத ஒன்றை எவ்வாறு அடைய முடியும்?”
புத்தர் அந்த பிக்குவிடத்தில் இப்படி ஒரு கேள்வியைக் கேட்க பிக்குவும் அந்த கேள்வியில் இருந்த உண்மையை புரிந்து கொண்டு அமைதி காத்து நின்றார்
நாம் வாழ்க்கையில் வெற்றியடைய முக்கியமாகச் சில விஷயங்களை நம் மனதிலிருந்து அகற்றியாக வேண்டும். அவ்வாறு அகற்ற வேண்டிய விஷயங்களில் முதன்மையானது எதிர்மறை சிந்தனை.
நாம் எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்டாலும் முதலில் நமது மனம் எதைப்பற்றி சிந்திக்கிறதோ அந்தச் சிந்தனையே வெற்றி பெறும். ஒரு இளைஞன் காலியாக உள்ள ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கிறான். அவன் விண்ணப்பிக்கும் போதே சில எதிர்மறையான விஷயங்களைத் தனக்கு முன்னால் வைக்கிறான். பத்தே இடங்கள் தான் காலியாக உள்ளன. பல ஆயிரம் விண்ணப்பங்கள் வரும். நமக்கு நிச்சயம் இந்த வேலை கிடைக்காது. பலர் சிபாரிசுகளோடு வருவார்கள். கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலைச் சொன்னாலும் சிபாரிசோடு வருபவர்களையே வேலைக்குத் தேர்வு செய்வார்கள். எதிலும் நமக்கு அதிர்ஷ்டமே இல்லை. இந்த இன்டர்வியூ வெறும் கண்துடைப்புதான். இப்படி பல எதிர்மறையான விஷயங்களையே அந்த இளைஞனின் மனசு யோசிக்கிறது. அவன் சிந்தித்த எதிர்மறை விஷயங்கள் அனைத்தும் உண்மையாகிப் போகிறது. இதனால் வேலையும் கிடைக்காமல் போகிறது.
ஒரு விஷயத்தில் இறங்குகிறாம் என்றால் முதலில் நாம் எதிர்மறையான விஷயங்களைப் பற்றி சிந்திக்காது நேர்மறையான விஷயங்களைப் பற்றியே சிந்திக்க வேண்டும். ஒரே ஒரு வேலை காலியாக இருந்தாலும் அந்த வேலை நமக்கு நிச்சயம் கிடைக்கும். இன்டர்வியூவில் நான் நன்றாக பதில் சொல்லுவேன். இந்த வேலைக்கான முழுத்தகுதியும் எனக்கு இருக்கிறது என்று ஒருவன் சிந்திப்பானேயானால் அவன் நிச்சயம் வெற்றி பெறுவான். ஆகவே நாம் எப்போதும் வெற்றி கிடைக்குமோ இல்லையோ அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நேர்மறையாக சிந்திக்கப்பழகிக் கொள்ள வேண்டும். இது நம் வாழ்க்கை முழுவதற்கும் பயனளிக்கும். வெற்றிக்கும் வழி வகுக்கும்.
நாம் அகற்ற வேண்டிய அடுத்த விஷயம் தாழ்வு மனப்பான்மை. ஒரு மனிதனின் தோல்விக்கு முதல் காரணமாக அமைவது அவனுடைய தாழ்வு மனப்பான்மை ஆகும். ஒருவனுக்கு எல்லா திறமைகளும் இருக்கும். ஆனால் அவனுடைய தாழ்வு மனப்பான்மை அவனை தோல்விக்குச் சொந்தக்காரனாக்கி விடுகிறது. தன்னைப் பிறரோடு ஒப்பீடு செய்து பார்ப்பதும் தாழ்வு மனப்பான்மைக்கு ஒரு காரணமாகிவிடுகிறது.
நாம் எல்லோரும் அசாத்திய சக்தி படைத்த மனிதர்கள் என்ற எண்ணத்தை மனதில் உருவாக்கிக் கொள்வது அவசியமாகும். நம்மைச் சுற்றியுள்ள எல்லா மனிதர்களுக்கும் உள்ள திறமை நமக்கும் உள்ளது என்பதை முதலில் நாம் உணர வேண்டும். சிலர் முதல் தோல்வியிலேயே துவண்டு போய்விடுவார்கள். சிலர் எத்தனை முறை தோற்றாலும் கவலைப்படாமல் தொடர்ந்து வெற்றிக்காக முயற்சி செய்து போராடிக் கொண்டே இருப்பார்கள். கடைசியில் ஒருநாள் வெற்றியும் பெறுவார்கள்.
இனிநாம் பின்பற்ற வேண்டிய விஷயங்களைப் பற்றிச் சற்றுப்பார்போம்.
காலையில் எழுந்ததும் உங்கள் மனதுக்குள்ளே ஒரு சபதத்தை மேற்கொள்ளுங்கள். இன்றைய நாள் நிச்சயம் எனக்கு நல்லதாக இருக்கும். இன்று நான் புதிதாக ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளுவேன். நேற்றைய நாளைவிட இன்று அறிவிலோ அல்லது ஏதேனும் ஒரு விஷயத்திலோ நான் முன்னேறியவனாக இருப்பேன். இப்படி சபதம் எடுத்துவிட்டு உங்களுடைய நாளைத் துவக்கிப் பாருங்கள். நிச்சயம் உங்கள் மனத்தில் புத்துணர்ச்சி உருவாகும். இது உங்கள் சாதனைக்கு வழிவகுக்கும்.
அடுத்ததாக எந்த ஒரு விஷயத்தையும் ஆர்வமின்றி செய்தால் அதில் வெற்றி பெற இயலாது. ஒரு மனிதன் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதில் நூறு சதவிகிதம் ஆர்வம் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் செய்யும் பணி எத்தகைய கடினமானதாக இருந்தாலும் அதை மிகச் சுலபமாக முடிக்கலாம். எதையும் வெறுப்போடு நோக்காதீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே வெல்வதற்கே என்று அடிக்கடி உங்கள் மனதிற்குள் நினைத்துக் கொள்ளுங்கள்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் தீட்ட முடியும் என்பது முதுமொழி. இது உண்மை தான். உடல் நன்றாக இருந்தால் தான் நாம் சாதனைகளைச் சுலபமாகச் செய்ய முடியும் தேர்வுகளுக்காக வருடம் முழுவதும் கஷ்டப்பட்டு படித்துக் கடைசியில் தேர்வு நேரத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனால் ஒரு மாணவனுக்கு எவ்வளவு நஷ்டம் என்பதைச் சற்று மனதில் சிந்தித்துப் பாருங்கள். தேர்விற்காக மட்டுமல்ல. வாழ்நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும். அப்போதுதான் நம்மால் சிறந்த முறையில் வாழ முடியும். கடைகளில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவு வகைகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். பாட்டிலில் அடைக்கப்பட்டு வரும் குளிர்பானங்கள் நிச்சயம் உடலுக்கு கேட்டை மட்டுமே விளைவிக்கும். இயற்கையாக விளையும் பழங்கள், பழச்சாறுகள், இளநீர், வீட்டில் செய்யும் உணவு வகைகள் போன்றவற்றை நிறைய சாப்பிடுங்கள். இதனால் எந்த கெடுதலும் விளையாது. இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம் ஆழ்ந்த தூக்கம்.
நமது மூளையில் ஹிப்போகேம்பஸ் என்றொரு முக்கிய பகுதி இருக்கிறது. நமது நினைவாற்றலுக்கு இந்த பகுதியே முக்கிய பங்கு வகுக்கிறது. இரவு நேரங்களில் போதிய அளவிற்கு தூங்காவிட்டால் அது நமது நினைவுத்திறனை வெகுவாக பாதிக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
நம்மால் நினைத்த மாத்திரத்தில் மிகச்சுலபமாக தூங்க முடியும். அதற்கென பிரத்யோகமாக சில பயிற்சி முறைகள் உள்ளன. அவற்றை இப்போது நாம் ஒவ்வொன்றாகத் தெரிந்து கொள்வோம்.
எப்பொழுதுமே வலது பக்கமாக திரும்பிப்படுக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நமது நுரையீரல் இரண்டு பகுதிகளால் ஆனது. இதில் இடதுபக்க நுரையீரலைவிட வலதுபக்க நுரையீரல் அளவில் சற்று பெரியதாகும். நீங்கள் வலது பக்கமாகத் திரும்பிப் படுக்கும்போது உங்கள் உடலுக்கு அதிக அளவில் பிராண சக்தி கிடைக்கும். இது சிறந்த தூக்கத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் உங்களுக்குத் தரும்.
தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் நமது மனதிற்கும் உடலுக்கும் ஓய்வு மிகவும் அவசியமாகும். சிலர் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பார்கள். விரைவில் களைத்துப் போவார்கள். மெல்ல மெல்ல செயலில் ஆர்வம் குன்றத் தொடங்கும். பின்னர் மனதில் சலிப்பு வந்து அமர்ந்து கொள்ளும். ஆகவே தினந்தோறும் போதிய ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளில் குறைந்தபட்சம் ஆறுமணி நேரமாவது ஆழ்ந்து தூங்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
ஒரு நாளும் வெற்றி தானாக நம்மைத் தேடிவராது. நாம்தான் அதைத் தேடிச் செல்ல வேண்டும். அதற்கு சில வழிமுறைகளை நிச்சயமாகப் பின்பற்றியாக வேண்டும். வெற்றி பெற்ற மனிதர்களைப் படியுங்கள். அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்று அவர்களின் வாழ்க்கையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்களும் அவர்களைப் போல வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம்.

நன்றி: ஆர்.வி. பதி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: