Posted by: shuhaib | 06/04/2011

புள்ளிகளை பரிகாசிக்காதீர்கள் !


இருளாடை களைந்து வெளிராடை அணிய ஆயத்தமானது புலர்வானம்.

விரல்கோர்த்த மேனிக்காய் மாவுப்புள்ளிகளின் அணிவகுப்பு.

ஈரத்தரையை நோக்கி புறப்படும் ஊர்‘கோலம்’

சுடும் பயிற்சியின்போது Gun இமைக்க,

கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்துச் செல்லும்

தோட்டாவை இடைமறித்து துருவிக் கேட்டேன்.

“என் இலக்கின் பயணம் புள்ளியை வைத்தே.. ..”

இயம்பிச் சென்றது; எம்பிச் சென்றது.

புள்ளிகளின் பூகம்ப வலிமை புரிந்துப் போனது

ரொட்டி சாப்பிடுகையில் ரெட்டி சரிந்தபோது.

ஏதோ சென்செக்ஸ் புள்ளிகளாம்.

மளமவென்று சரிய இவரும் சரிந்தாரே பார்க்கலாம்.

இம்முறை புள்ளிகளின் முகத்தில் சொல்லவொணா அசதி.

எத்தனைக் கோடி வாக்காளர் விரல்களில்

அடையாள மையாக அலங்கரித்திருக்குமோ!

புள்ளிக்கணக்கு – தெரியாது அதற்கு.

புள்ளிகள் –

மான்களுக்கழகு.

மனிதர்களுக்கு மச்சங்களாய் அடையாளம்.

கடவுச்சீட்டில் மெய்ச்சான்று.

வான்மீது நட்சத்திரக் கூட்டம்.

வாக்காளனுக்கு ஓட்டளித்த அத்தாட்சி.

தொடுந்தூரத்தில் புள்ளிகளாய் புலப்படும் கானல் நீர்.

பச்சோந்தியாய் நிறம் மாறும் போக்குவரத்துப் புள்ளிகள்.

அம்மைத் தழும்புகளாய் என் வாகனத்தின் மேல்

மழைச்சாரல் விட்டுச் சென்ற நீர்ப்புள்ளிகள்.

புள்ளிகள் பள்ளி கொண்டிருக்க மெல்ல நகரும் நம் வாழ்க்கைச் சக்கரம்.

பரந்த வானில், பிரமாண்டங்களும் சிறுபுள்ளிகளாய் சுருங்கிப் போகும் மாயம்.

தூரத்து வானில் மின்மினிப்பூச்சிகளாய் கண்சிமிட்டும் விண்மீன்கள்.

எத்தனை எத்தனைப் புள்ளிகள்?

புள்ளி விவரம்.. .. வானசாஸ்திரத்திலும் இல்லை.

யார் சொன்னது புள்ளிகள் அழுக்கென்று?

கொஞ்சுமொழி பேசும் பிஞ்சுக் குழந்தைகளின் பஞ்சுக் கன்னங்களில்

கண்திருஷ்டியாய் காட்சி தரும் கரும்புள்ளிகள்.

உ.. ..ம்..மா .. கொள்ளையழகு.

புள்ளிகள் அழுக்கல்ல!

மனதில் பதியும் சந்தேகப் புள்ளிகளைத் தவிர்த்து.

புள்ளிகள் இழுக்கல்ல!

டால்மேஷனுக்கு – ஆராதிக்கும் அழகு

அதோ பாருங்கள்.. ..

பாத்ரூம் கண்ணாடியில் பரிதாபமாய்.. ..

கலர் கலராய், கல்யாணியின் கணவன்.

கல்யாணி களைந்து வைத்த ஸ்டிக்கர் பொட்டுகள்.

பூதக்கண்ணாடியில் கண்களைப் புதைத்துக் கொள்ளும் வைர வியாபாரி.

தரத்தையும் நிறத்தையும் குறைக்கும் கரும்புள்ளிகளைத் துளாவிக் கொண்டு.

புள்ளிகளை புள்ளி வைத்து எள்ளி நகையாடாதீர்கள்!

புள்ளிகள் அர்த்தங்களை புரட்டி விடும்;

‘கல்வி’யை ‘கலவி’யாக்கிவிடும்

தீர்ப்புகளைத் திருத்தி எழுதிவிடும்;

தலையெழுத்தை மாற்றிவிடும்;

புள்ளிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

புள்ளி ஒன்று குறைந்தாலும் இணையமே திறக்காதே!

புள்ளிகளை குறைத்து மதிப்பிடாதீர்கள்!

புள்ளிகள்தானே படைப்புகளின் ஆதிமூலம்! ரிஷிமூலம்!

காவியங்களும் ஓவியங்களும் புள்ளியிலிருந்துதானே தொடக்கம்?

போர்க்களத்தில் வாள்முனையில் சிந்தப்படும் இரத்தத் துளிகளைக் காட்டிலும்;

ஓர் அறிஞனின் மைத்துளி வலிமை வாய்ந்தது.

– இது நபிகள் நாயகத்தின் கூற்று.

எழுதுகோலின் வீச்சு.. .. இரத்தமின்றி, கத்தியின்றி,

எத்தனையோ சாம்ராஜ்யங்களை வீழ்த்தியுள்ளதே !

புள்ளிகளுக்கு உண்டு இறைத்தன்மை.

ஆதியும் அதுவே! அந்தமும் அதுவே!

தொடக்கக்குறியும் அதுவே! நிறுத்தற்குறியும் அதுவே!

புள்ளி வைத்து வியூகம் அமைத்த

போர்முனைத் தாக்குதல்கள் ஏராளம் ஏராளம்.

புள்ளி ராசாவுக்கு எய்ட்ஸ் வருமா? வராதா?

தமிழகத்தில் ஒரு காலத்தில் தலையாய கேள்வி இது.

சமுதாய விழிப்புணர்வுக்கும் ஒரு கற்பனைப் புள்ளி தேவைப்பட்டதோ?

புள்ளிகளுக்கு கால்கள் உண்டா?.. .. உண்டு .. ..

கால் புள்ளி உண்டன்றோ?

புள்ளிகளுக்கு முகம் உண்டா? .. .. உண்டு உண்டு.

ஏறுமுகம். இறங்கு முகம்.

பங்கு வர்த்தகம் பதில் பகருமே!

புள்ளிகள் பேசுமா?

ஆம்! பேசும்.

பார்வையற்றவர்களுடன் அது உரையாடுகிறதே?

தொலைபேசி.. .. அலைபேசி.. .. துளைபேசி.. .. ..

அனைத்திலும், அறிவியலின் அழகான கண்டுபிடிப்பு துளைபேசிதானே!

உலகத்தில் பேசப்படாத மொழிகள் இரண்டே இரண்டு.

ஒன்று மெளனம். மற்றொன்று பிரெய்லி மொழி.

புள்ளிகளின் விசுவரூபம் அளவிட முடியாதது.

அணுவிலிருந்து ப்ரோட்டான் ..எலக்ட்ரான்.. நியூட்ரான் பிரிவதைப்போல்..

புள்ளிக்குள் புள்ளி, புள்ளிக்குள்ளிருந்து புள்ளி.

எண்ணில் அடங்கா பிரசவங்கள்.

புள்ளிகளை ஆட்டிப் படைப்பது எது தெரியுமா?

தூரம் .. தூரம் .. தூரமேதான்.

சூரியனின் வீரியத்தை குறைத்து சிறுபுள்ளி ஆக்குவது தூரம்தானே?

குழந்தைகளுக்கான புள்ளி தொடுத்தல் விளையாட்டை

பெரியவர்களும் சற்று ஆடிப் பார்க்கட்டும்.

பிரிந்திருக்கும் ‘மனப்புள்ளிகளை’

‘ஒற்றுமை கோடு’ கொண்டு தொடுத்துப் பாருங்கள்.

‘சமாதான உருவம்’ சரியாகத் தென்படும்.

போர் நிறுத்தம் வேண்டுமா?

விரியுங்கள் சிவப்புக் கம்பளம் முற்றுப் புள்ளிக்கு.

புள்ளிகளின் இலக்குகள் சற்றே புலம் பெயர்ந்திருந்தாலும்

பெரும் புள்ளிகள் பலர் தோட்டாக்களுக்கு இரையாகி இருப்பாரோ?

பள்ளிப் பாடம் கற்பிக்காததைக் கூட

புள்ளிப் பாடம் படிப்பினை தரும்.

அரசாங்கத் திட்டங்களே புள்ளி விவரங்களை வைத்துதானே?

தேர்தல் என்ற பெயரில் இவர்கள் விரல்களில்

கரும்புள்ளிகளை மாத்திரமா குத்துகிறார்கள்?

சிற்சமயம் நம் முகத்தில் செம்புள்ளிகளையும் சேர்த்தன்றோ குத்துகிறார்கள்!

முப்பாற் புள்ளியாய் ஆய்த எழுத்து –

அஃது அருந்தமிழுக்கோர் அழகிய குறியீடு.

கால் புள்ளி, அரை புள்ளி, முக்கால் புள்ளி

இவைகளுக்கில்லாத இயல்பு முற்றுப் புள்ளிக்குண்டு.

– நிறைவேற்றியே தீரவேண்டும் என்ற தன்னம்பிக்கை.

– முடிவு கட்டியே ஆக வேண்டுமென்ற மன உறுதி

முற்றுப் புள்ளிகளாய்த் தெரிவதெல்லாம் முற்றுப் புள்ளிகளல்ல.

ஈழப்பிரச்சினை உட்பட.

வாழ்க்கையில் கூடுதலான காத்திருப்பு முற்றுப் புள்ளிகளுக்குத்தான்.

தயக்கம்தான் முற்றுப்புள்ளிக்குள்ள குறைபாடு.

பிரச்சினைகள் தீர்க்க முற்றிப்புள்ளிகள் முன்வந்தால்

பிரச்சினைகள் ஏது இப்பூவுலகில்?

முத்தாய்ப்பு – முற்றுப் புள்ளிகளின் பிறவிக்குணம்.

 புள்ளிகளே!

நீங்கள்

புள்ளிகளை பரிகாசிக்காதீர்கள்!

அப்துல் கையூம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: