Posted by: shuhaib | 22/05/2011

தீட்டுவதும் பார்க்குறதும் எனக்கு தெரியும்


கதைச் சொல்வதும் கதைக்கேட்பதும் தமிழர்களின் பண்பாடு.நிறைய விசயங்களை கதை மூலமாகவே நமக்கு எத்தி வைக்கப்படுகிறது.மனதில் பதிவதற்கு இலகுவாக இருக்குமென்று முன்னோர்கள் கதையை சொல்லித்தந்திருக்கிறார்கள்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக இஸ்லாமிய இல்லங்களில் கிஸாக்கள் டேப்ரிக்காடரில் ஒலித்துக் கொண்டிருந்தது.கிஸா என்றால் நபிமார்களின் சரிதைகளை தப்ஸ் இசைமூலம் பாடப்பட்டு கதைச் சொல்வது. இது அன்றைய இஸ்லாமிய பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
நூறுமசாலா, கிஸ்மத்நாச்சியா கிஸா, அய்புப் நபி கிஸா, இப்படி பல தலைப்புகளில் கிஸாக்கள் ஆடியோ கேஸட்டுகளில் வெளிவந்துள்ளன.

கதைக் கேட்கும் பழக்கம் தமிழனுக்கு பெரிய ஆர்வத்தை இன்றளவும் கொடுக்துக் கொண்டிருக்கிறது.கதையை கேட்பதுமட்டுமல்ல பலர் இன்று கதையும் விடுகிறார்கள்.
அப்படி சிறுவயதில் மனதில் பதிந்த ஒரு எதார்த்தமான கதையை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

சிறு வயதில் இரவில் உறங்குமுன் கதைக் கேட்பது வழக்கம் யாராவது கதைச் சொல்லியாக வேண்டும்.சில தருணங்களில் அம்மா சொல்லுவார் சில தருணங்களில் எங்கள் வீட்டுக்கு வருகைப்புரிந்த உறவினர்கள் கூறுவார்கள்.யாரையும் விட்டுவைப்பதில்லை பேதமில்லாமல் எல்லோரிடமும் கதை கேட்பதில் தனி அலாதி.

ஒருமுறை எனது உறவினர் ஒரு கதைச் சொன்னார்.

ஒரு ஊரில் முட்டாள் இருந்தானாம் எந்த வேலைக்கும் செல்லமாட்டானாம் அவனுக்கு திருமணம் முடித்தார்கள் சில தினங்களில் மனைவி அவனை வேலைக்கு செல்லும்படி கூறினாள்.

எனக்கு எந்தவேலையும் தெரியாது என்றான் அடப்பாவி உன்னைபோய் கல்யாணம் கட்டிவிட்டார்களே என்று அவள் நொந்துப்போவாளாம்.
ஒருநாள் தனது தோழியிடம் தன் கணவர் எந்த வேலைக்கும் செல்வதில்லை ஒன்றுமே தெரியாத முட்டாளாக இருக்கிறார் என்று வருத்தப்பட்டு கூறினாள்.அதற்கு அவள் என் புருஷனும் அப்படித்தான் இருக்கார் நேற்று வீட்டைவிட்டு விரட்டிவிட்டேன் மன்னனுக்கு கவிதை எழுதி கொடுத்துட்டு காசு வாங்கி வந்தார் நீயும் விரட்டிவிடு என்றதும் என் புருஷனுக்கு எந்தவேலையும் தெரியாது கவிதை எப்படி எழுதுவாரு என்று அவளிடம் கேள்வி கேட்க நீ வீட்டை விட்டு விரட்டி பாரு எல்லாமே வரும் என்றாள்.

தன் கணவரை விரட்டினாள் மன்னனுக்கு கவிதை எழுதிக் கொடுத்துவிட்டு காசோட வீட்டுக்கு வா இல்லையெனில் வராதே என்றாள்.
அவன் என்ன செய்வதென்றே தெரியாமல் தெரு தெருவாய் சுற்றினான் கவிதை வரவில்லை.

மழைத்தூரல் ஆரம்பித்தது ஒதுங்கினான் அந்த மழையில் நனைந்தவாறு எருமை மாடுகள் வந்தன வந்த மாட்டில் ஒன்று தனது கொம்பினால் செவிற்றில் தீட்டுவதும்; அதை பார்ப்பதும் மீண்டும் தீட்டுவதும் அதைப்பார்ப்பதுமாய் செய்துக் கொண்டிருந்தது இதை பார்த்த அவன் கவிதை எழுதினான்

தீட்டுவதும் பார்க்குறதும் எனக்கு தெரியும்
தீட்டுவதும் பார்க்குறதும் எனக்கு தெரியும்

என்று இதே வரிகளை ஒரு பக்கம் முழுவதும் எழுதி மன்னரிடம் சென்றான்.
அங்கு பலரும் கவிதைகளுடன் நின்றிருந்தார்கள்.இவனோ தனது கவிதையை யாரும் படித்துவிடக் கூடாது என்று தாளை மடித்து வைத்துக் கொண்டு பயந்தபடி நின்றான்.

இவனுடைய முறை வந்ததும் மன்னர் கவிதைத் தாளை வாங்கிக் கொண்டு பொற்காசுகளை கொடுத்தார்.இவனுக்கு சந்தோசம் தாளமுடியவில்லை தனது கவிதைக்கும் காசு கிடைத்துவிட்டதே என்று மனைவியிடம் பொற்காசுகளை கொடுத்தான்.
மனைவி ஆனந்த மடைந்தாள்.

மறுதினம் மன்னருக்கு முகச்சவரம் செய்வதற்கு பரியாரி வந்தான்.
மன்னர் எப்போதும் சவரம் செய்வதற்கு நாற்காழியில் சாய்ந்தபடி மேலே தொங்கவிடப் பட்டிருக்கும் கவிதைகளை வாசித்துக் கொண்டே சவரம் செய்துக் கொள்வார் இது அவருடைய வழக்கம்.

இன்றும் அப்படித்தான் மன்னர் நாற்காழியில் சாய்ந்தபடி கவிதையை பார்வையிட்டார்.
பரியாரி சவரம் செய்வதற்கு முன் கத்தியை எடுத்து நன்றாக தீட்டிக் கொண்டிருந்தான் சுனை பிடித்திருக்கிறதா என்று தனது கட்டை விரலால் உரசிப்பார்த்தான் மீண்டும் தீட்டிக் கொண்டிருந்தான் வழக்கத்திற்கு மாறாக பரியாரி கத்தியை தீட்டிக் கொண்டிருப்பது மன்னருக்கு ஆச்சரியமாக இருந்தாலும் கவிதை படிப்பதில் ஆர்வம் அதிகமிருந்தது.

முட்டாள் எழுதிய கவிதையை படிக்க ஆரம்பித்தார் மௌனமாக படித்துக் கொண்டிருந்த மன்னருக்கு கடும்கோபம் வந்தது.இதை கவிதை என்று எழுதி என்னை ஏமாற்றி பொற்காசை வாங்கிசென்றுவிட்டானே ஆத்திரம் தாங்காமல் அந்த கவிதையை உரக்க படித்தார்.
தீட்டுறதும் பார்க்குறதும் எனக்கு தெரியும் என்றார்.
பரியாரி பதறினான் மன்னா என்று கூவினான் மீண்டும்
தீட்டுறதும் பாக்குறதும் எனக்கு தெரியும் என்று மறுபடியும் சப்தமாக வாசித்ததும் பரியாரி மன்னரின் காலைப்பிடித்து என்னை மன்னித்துவிடுங்கள் என்று ஓலமிட்டு அழ ஆரம்பித்தான்.

மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை இந்த கவிதை பரியாரியை அழவைத்துவிட்டதே இந்த கவிஞனை கழுகு மரத்தில் ஏற்றவேண்டும் என்று நினைத்த நேரத்தில்

அழுதுக் கொண்டிருந்த பரியாரி மன்னா! மன்னித்துவிடுங்கள் என்னை வைத்து உங்களை கொலைச் செய்ய சொன்னது உங்கள் மந்திரிதான்.
சவரம் செய்யும்முன் கத்தியை பலமுறை தீட்டி ஒரே இழுப்பில் கழுத்தை அறுத்திடவேண்டும் என்று மந்திரி கூறினார் அதனால்தான் கத்தியை பலமுறை நான் தீட்டிக் கொண்டிருந்தேன் தீட்டுறதும் பாக்குறதும் எனக்கு தெரியும் என்று எங்கள் சதியை தாங்கள் தெரிந்துக் கொண்டுவிட்டீர்கள் என்னை மன்னித்து உயிர் பிச்சைக் கொடுங்கள் என்று பரியாரி கூறியதும் மன்னர் திடுக்கிட்டு போனார்.

உடனே பரியாரியையும் கொலை செய்ய சொன்ன மந்திரியையும் கைது செய்ய உத்தரவிட்டு தீட்டுறதும் பாக்குறதும் எனக்கு தெரியும் கவிதையை எழுதிய கவிஞனை அழைத்து வரச்சொன்னார்.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த முட்டாளிடம் அவன் மனைவி மன்னர் உன்னை கூப்பிடுகிறாராம் என்று சொன்னதும் முட்டாளுக்கு வயிற்கை கலக்கியதாம் தான் எமுதிய கவிதைக்காத்தான் தன்னை கூப்பிடுகிறார் ஐயோ மன்னன் இன்று உயிருடன் சமாதி கட்டிவிடுவான் என்று பயந்து நடுநடுங்கி போனான்.கூடவே அவன் மனைவியும் என்கணவரை ஒன்றும் செய்துவிடாதீர்கள் என்று அழுதுக்கொண்டே பின் தொடர்ந்தாள்.

மன்னர் அவனை அழைத்து தனது சிம்மாசானத்தில் அமரவைத்து தங்க நாணயத்தால் அபிஷேகம் செய்வதை காரணமறியாமல் முட்டாளும் அவன் மனைவியும் ஆனந்தத்துடன் பார்த்தார்களாம்.

முட்டாளின் வரிகள் ஒருநாட்டு மன்னரின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது.
முட்டாள் என்று யாரும் யாரையும் தீர்மானித்துவிட முடியாது.

அறிவு என்பது காணாமல்போன ஒட்டகமாக இருக்கிறது அதை எங்கு கண்டாலும் கட்டிபோட்டுவிடுங்கள் என்பது அண்ணல் நபிகளின் அழகிய பொன்மொழி.

நன்றி : கிளியனூர் இஸ்மத்
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: