Posted by: shuhaib | 30/05/2011

மரணம் – இறைவனின் சாய்ஸ் …


    என்னதான் உறுதியாக நம்பியிருந்தாலும் மரணம் அடிக்கடி மறந்தே போகிறது… மையத்து வீடுகளில் முழுக் கபனில் முகம் மட்டும் பார்க்கும் போதும் மையவாடியில் கபுருகளுக்கு மத்தியிலிருக்கும் போதும் ஏற்படும் உணர்வு,வாழ்க்கையில் அன்றாட வீதிகளில் நடக்கும் போதும் ஏனோ தொலைந்துவிடுகிறது.

இருட்டு பிரபஞ்சத்தின் எல்லா இடங்களிலும் படர்ந்த நிலவற்ற பொழுதொன்றில் மண்ணறைக்கு முன்னால் நின்றபோதுதான் தொடை நடுங்கத் தொடங்கியது…

இந்த மரணம் எல்லாக் கனவுகளையும் பறித்துக்கொள்ளும்… எல்லா நிம்மதிகளையும், ஆடம்பரங்களையும் மண்ணோடு சேர்த்துப் புதைத்துக் கொள்ளும்… இந்தப் பூமியின் மொத்த அழகிலிருந்தும் அழைத்துச் சேன்று ஒரு கருப்புக் குழிக்குள் வைத்துவிடும் என்பது புரிந்தது.

எவ்வளவுதான் திரும்பிப் பார்த்தாலும் மரணம் ஒரு சொட்டாவது தெரிவதில்லை. நம் நிழல்களுக்குள் பிணைந்து அது சதாவும் நம்மைத் துரத்துகிறது. எம் எல்லாத் தெருக்களிலும் நம்மோடு சேர்ந்து அதுவும் சமாந்தரமாக நடக்கிறது. ஆத்ம நண்பன் போல் பக்கத்திலே அமர்ந்திருக்கிறது. நிழல் மாதிரி கூடவே வந்தாலும் வேண்டாத பொழுதொன்றில் அது அழைத்துக் கொண்டு தான் போகப் போகிறது.

நினைக்க நினைக்க மனது நடுங்குகிறது. மலக்குல்மௌத் உயிரைப் பித்தெடுக்கும் நாளில் ஏற்படப் போகும் வலியின் கனதி உலகிலுள்ள எந்த நோவுக்கும் ஈடாகாது. வலிக்க வலிக்க… கதறக் கதற… அவர் உயிரை பித்துக் கொண்டு போவார்… சிறுபிள்ளையெனக் கெஞ்சினாலும் அவர் விடவா போகிறார்…? சின்னச் சின்னக் கத்திகள் கொண்டு உடல் முழுக்க யாரோ கீறுவது போல் இருக்கிறது. இந்த வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் அந்தத் தருணத்தின் அனுபவத்தை இதுவரையாரும் சொல்லவில்லை.

இந்த வாழ்க்கைக்குப் பிரியாவிடை கொடுப்பது ஓர் அழகிய நிகழ்வுதான். படைத்தவனின் மகிமை இங்குதான் புரிகிறது.

குளிப்பாட்டி… ஆடைஅணிவித்து… தொழுகை நடத்தி… பாவங்களுக்காப் பிரார்த்தித்து… சில சொட்டுக் கண்ணீர்களோடு இதுவரையில் மெத்தையில் இருந்தவனை மண்தரையில் வைத்து மண்ணால் மூடிவிட்டு வருகின்ற காட்சி பிறப்பைவிடவும் அழகாத்தான் தெரிகிறது. பிறந்தபோது சிரித்து மகிழ்ந்த அதே முகங்களில் கண்ணீரும், கவலையும். சிலபோது புரிகிறது சோகமும் ஒருவகை அழகுதானென.

இருப்பினும் புதைகுழிக்குள் படுவது வேதனைதான் அதில் எந்தச் சுகமும் இருக்கப்போவதில்லை. அங்கு படுகின்ற ஒரு துளி வேதனையாவது வெளியில் இருப்பவர்களுக்குக் கேட்பதில்லையே…! அந்தக் கொடூர நிகழ்வை எப்போது நினைத்தாலும் விழிகளின் தொங்களிலிருந்தும் கண்ணீர்த் துளிகள் உருண்டு வருகின்றன. என்ன செய்வது… பிறந்தவனெல்லாம் இறந்துதானே ஆக வேண்டும் என்ற நினைப்பில் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது…

இதிலென்ன வேறுபாடு இருக்கிறது. ஒருவன் வாழப் பிறப்பது போல இறப்பும் இன்னொரு வாழ்க்கைக்கான பிறப்புத்தானே. மரணமென்றும் இறப்பென்றும் அழைக்கின்றோம் பெயர்மட்டும் வித்தியாசம். பிறப்பு போல இறப்பும் கொண்டாடக்கூடிய ஒன்றுதான்.. ஏனெனில் அது வாழ்க்கையிலிருந்து இன்னொரு வாழ்க்கைக்கான இடமாற்றம். அது ஒரு முடிவற்ற வாழ்க்கை… எந்தக் கனவுகளையும் கைகளில் ஏந்திக் கொண்டு துயரமில்லாமல் நடக்கலாம்.ஆனால் ஒன்று, நினைத்தமாதிரி அந்த வாழ்க்கை கிடைப்பதில்லை. போட்டியில் வெற்றி பெறாமல் பரிசு கிடைக்காது. இந்த வாழ்க்கையின் வெற்றியில் தான் மறுமையின் மொத்த நிம்மதியும் தங்கியிருக்கிறது. சுவனம், நரகம் இரண்டிற்குமான பாதையை இறைவன் சொல்லித்தான் தந்திருக்கிறான். நாம் நடப்பதைப் பொருத்து வெற்றியோ தோல்வியோ எழுதப்படுகிறது. படைத்த இறைவனுக்குப் பிடித்தமாதிரி வாழ்பவனுக்கு வாழ்க்கையின் இரண்டாவது அத்தியாயம் ஒரு புதிய தொடக்கமா இருக்கும்.. இல்லாதவனுக்கு அது ஒரு கருப்புப் பக்கமாக இருக்கும்.

மரணம் ஒவ்வொருவரினதும் நெருங்கிய பக்கத்து நண்பன்தான் எப்போதாவது அவன் நிச்சயம் அழைப்பான். அப்போது அந்த அழைப்பை எம்மால் புறக்கணிக்க முடியாமல் இருக்கும். அது இறைவனின் சாய்ஸ்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: