Posted by: shuhaib | 08/12/2011

வாழ்க்கை


வாழ்க்கை – 1

வாழ்க்கை –
இது –
தத்துவமல்ல..
தனித்துவம்..!
இது –
பேசப்படுவதல்ல
பேணப்படுவது.

ஏழை என்பதும்
பணக்காரன் என்பதும்
இருக்கின்ற
பணத்தினால் அல்ல
சுரக்கின்ற குணத்தினால்.

செல்வத்தினால்
வாழ்க்கையை
அளக்கிறவனை விட
நிம்மதியால் அளக்கிறவனே
நிலைப்படுகிறான்.

உன் வாழ்க்கை என்பது
உன்னை மட்டும்
சார்ந்தது அல்ல
உடன் இருப்பவர்களையும்
சூழ்ந்தது…

உதவு.. உதவு..!
வாழ்க்கையின்
கதவு திறக்கும்..!

உயர உயர
பறக்கும் பறவைக்கும்
உணவு என்னவோ
கீழேதான்..!

எண்ணமும் செயலும்
வாழ்க்கையின்
இரு சிறகுகள்..!
உயரப்பற
எனினும்
உள்ளம் என்ற அலகுதான்
உனக்கு
உணவைத் தரும்…
மறந்து விடாதே..!

பட்டப்படிப்புக்கு
புத்தகங்களே போதும்
வாழ்க்கைப் படிப்புக்கு
அனுபவங்களே ஆசான்..!

உன் –
வாழ்க்கைப் பயணம்
துவங்கட்டும்..!
அது –
வெறும் வெளிச்சத்தை
நோக்கி அல்ல
விடியலை நோக்கி
இருக்கட்டும்..!

***

வாழ்க்கை – 2

வாழ்க்கையின்
வசந்தங்களை
வருங்கால கனவுகள் ஆக்காதே..!
நிகழ்காலத்தில் நிலைநாட்டு.

‘எனக்காக’
என்ற படியைவிட்டு
‘நமக்காக’
என்ற படியை நோக்கி
முன்னேறு..!

எண்ணங்களை
வார்த்தைகளால் வெளிப்படுத்தாதே..!
செயல்களால் நிரூபணம் செய்..!

உயர்ந்த
கோபுரங்களின் உறுதிப்பாடு
மண்ணுக்குள்ளேதான்
மறைந்து கிடக்கிறது..!
உன்-
உள்ள உறுதி
அரிய சாதனைகளுக்கு
அடித்தளம் ஆகட்டும்..!

வீணை –
தன்னைத்தானே
மீட்டிக்கொள்ள முடியாது..!
விரல்களே –
தந்திக் கம்பிகளின் ஊடே
மறைந்திருக்கும்
நாதத்தை வெளிப்படுத்தும்..!
உன்னை
வெளிப்படுத்தும்
சக்தியைத் தேடு..

அலைகள் –
ஆர்த்தெழுவது
கரையைத் தழுவத்தான்
உன் –
எழுச்சியால்
சொந்தங்களை சுகப்படுத்து..!

***

வாழ்க்கை – 3

வாழ்க்கையில் –
உயர்ந்த பீடத்தை
இலக்காக்கு..!
அதே சமயம்
இருக்கின்ற இடத்தையும்
இழந்து விடாதே..!
முன்னேற்றதின்
முதற்படி இதுதான்..!

உன் சிந்தனை
மற்றவர்களைச் சுற்றி
இருப்பதை விட
முதலில்
உன்னைப்பற்றி இருக்கட்டும்..!

நீ –
யார் என்பதை உணர்..!
யாராக மாற விரும்புகிறாய் என்பதை
வரையறை செய்..!
எந்த வழியில் என்பதை
திட்டமாக்கு..!

இடையில் வரும்
வெற்றிகளில் –
இறுமாந்து விடாதே..!
இலட்சிய எல்லையை எட்டமுடியாது..!
இறுதியில் சிரிப்பவனே
வெற்றி பெற்றவன்.

பணம் –
இதை ஒரு கருவியாகவே
பயன்படுத்து
வாழ்க்கையாக
மாற்றிவிடாதே..

புகழ் –
இதனால் புத்துணர்ச்சி பெறு.
போதை மயக்கமாய்
ஆக்கிவிடாதே..!

பதவி –
இதன்மேல் நீ அமர்
உன்மேல் –
பதவியை அமரவிடாதே..

‘முடியும்’ என்பதில்
நீ உறுதியாக இரு.
‘முடியாது’ என்பதை
சூழ்நிலை சொல்லட்டும்.

***

வாழ்க்கை – 4

வாழ்க்கையில் –
வாய்ப்பு வரும்வரை
காத்திருக்காதே..!
நீ –
உருவாக்கு..

உன் பேச்சு
எல்லோரையும்
சுகப்படுத்துவதாகவே
இருக்கட்டும்
சோகத்தை வேண்டாம்.

வீணான
விமர்சனங்கள் செய்யாதே..!
அது –
உன்னைப்பற்றி
வேண்டாத விமர்சனங்களைத்
தோற்றுவிக்கும்..!

தேவையின்றி
வார்த்தைகளைச் செலவிடாதே..!
தேவையானபோது –
அது –
உனக்குக் கிடைக்காமலே
போய்விடும்..!

அறிவுரை சொல்பவர்களை
ஆராயாதே..!
அவைகளை –
உன்னுள் பொருத்தி
ஆராய்ந்து பார்..!

உன்னைச்சுற்றி
ஒரு –
வட்டத்தை ஏற்படுத்து..
அதன் அச்சாக
என்றும் நீ இரு..!

உதவி –
எல்லோரிடத்தும் கேட்காதே!
உதவி செய்பவர்களை
தேர்ந்தெடு..

உன்
மனக்கதவை எப்போதும்
இல்லாதவர்களுக்கு திறந்து வை!
மறுமையில்
சுவனக்கதவு உனக்கு
திறந்தே இருக்கும்..!

***

வாழ்க்கை – 5

தர்க்கம் செய்யாதே..
அதீதமான
வெளிச்சத்திலும் இருட்டு உண்டு..
அதிகமான
இருட்டிலும் வெளிச்சம் உண்டு.

இனிப்பின் –
உச்ச எல்லை கசப்பு..!
கசப்பின்
விரிவாக்கமே இனிப்பு..

சில –
விஷயங்களில்
‘தெரியாது’
என்பதே உண்மை..
‘இல்லை’
என்பது தர்க்கம்..

தெரியாத ஒன்றை
தெரிந்தது போல நடிக்காதே..!
அறிவு –
இங்குதான் அஸ்தமிக்கிறது..!

தர்க்கம் –
எப்போதும்
குழப்பத்தில்தான் முடியும்..
தத்துவமோ –
உண்மையில் ஆரம்பிக்கும்

இறைவன்
தர்க்கப்பொருள் அல்ல..!
‘தத்துவக் கரு’
என்பதை உணர்.

பிரார்த்தனை..
இது – உன்
உள் மனசின் நிம்மதி..!
வெளி உலகின் வேஷமல்ல..
என்பதை புரிந்து கொள்..!

எதையும் கேள்..!
ஆனால் –
கேட்பது –
நிச்சயம் கிடைக்கும் என
முதலில் நம்பு
பிறகு கேள்.

தியானம்..
இது –
நினைப்பது மட்டுமல்ல..!
மறப்பதும்தான்..
முதலில் –
உலகை மற..
பிறகு –
இறைவனை நினை..!

அறிவு –
அறியப்படுவது.
ஞானமோ –
அருளப்படுவது..!

***

வாழ்க்கை – 6

வாழ்க்கையின் உயிர்சக்தி
நட்பு..!
இதற்கு இலக்கணம் உண்டு.
இது இலக்கியம் ஆனதால்.

நீ இலக்கணமாக
இல்லையெனினும்
எடுத்துக்காட்டாக
இருப்பதற்காவது முயற்சி செய்..!

உதவிபெறும்
எதிர்பார்ப்பை விட்டு
உதவும் நோக்கதைக் கொள்
நட்பு –
யாசிப்பதல்ல..
நேசிப்பது..

நட்பில்
பற்றுவரவு
கணக்கு வைக்காதே..!
பற்றை மட்டும்
வரவு வை..!~

நட்பில் –
இணையாக மதிப்பது
மனிதம்..
துணையாக இருப்பதோ
புனிதம்..!

நட்புக்குள்
திரையிடாதே.
அது –
முகமற்றதாகி விடும்!

வீராப்பை விடு..!
விட்டுக்கொடு..!
நட்பை –
வளர்க்கும் வழி இதுதான்..!

பொய் சொல்லாதே..
உண்மையான நட்பை
அது –
மரணிக்கச் செய்துவிடும்..!

***

வாழ்க்கை – 7

பிரச்சனைகள் –
இது இல்லாமல்
வாழ்க்கை இல்லை..!

நீ –
வாழ்க்கையே
ஒரு பிரச்சனையாக
ஆக்கிவிடாதே..!

பிரச்சனைகள்
தானாக பிறப்பதில்லை..
உருவாக்கப்படுவதே..!
யாரால்..?
எப்படி..?
என்பதைக் கண்டுபிடி
அது
உன்னாலும் இருக்கலாம்.
உற்றுப்பார்..!
பின் –
தீர்வின் வழிகளை
தெரிவு செய்..!

தடம் மாறும் மனம்
தடுமாறும் எண்ணம்
நிலைமாறும் செயல்கள்
இவைகளே..
நிச்சயமாய்
பிரச்சனைகளின் மூலவித்து..!

சிந்தனையை
நேராக்கு..!
நிலைப்படுத்து..!
பொறுமையுடன் யோசி..!
புதுப்பாதை தெரியும்..!

பிரச்சனைகளைத் தீர்க்க
பேச்சுவார்த்தை தவிர
சிறந்த கருவி கிடையாது..!

நினைத்தது கனவானால் –
நடப்பதை நனவாய்க்கொள்..!
அயர்ச்சியில் துவளாதே..
ஆற்றலைக் கூட்டு..!

கண்ணீர் அனுதாபத்தைப்
பெருக்கும்..!
வியர்வை வெற்றியைக்
கொடுக்கும்..!

பாலைவனத்தில் –
கரிக்கும் நீர்கூட
குடிக்கும் நீர்தான்..!

இருப்பதைக் கருவியாக்கு..!
இல்லாதது –
வந்து சேரும்..!

**

நன்றி : இஜட். ஜபருல்லாஹ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: